['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அண்மையில் நூல் பற்றிய விமர்சனமொன்றில் பாவிக்கப்பட்டிருந்த 'கூற்றை' என்னும் சொல் பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி பின்வருமாறு தன் எதிர்வினையில் பதிவு செய்திருந்தார் "மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம்." என்று.

அதற்கு நான் "கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை." என்று எதிர்வினையாற்றியிருந்தேன். 

அதற்குப் பதிலளித்த ஶ்ரீரஞ்சனி "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. 'இதேபோல் கூறு வரின் 'கூறு' என்பது 'கூற்றை' அல்லது 'கூறை' என வருவது சரிதான். ஆனால்  'கூறு' என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் 'கூற்றை' என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்."  என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியதுபோல்  'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' நூல் எழுதிய பேராசிரியர் எம்.ஏ நுஃமானுடன் இது பற்றி மெசஞ்சர் மூலம் உரையாடினேன்.அது வருமாறு:

நான்: "பேராசியருக்கு வணக்கம். பின் வரும் விடயம் பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன். 

Navaratnam Giritharan -  "Sriranjani Vijenthira //மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம். // கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை."

Sriranjani Vijenthira - "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. இதேபோல் கூறு வரின் "கூறு" என்பது "கூற்றை அல்லது கூறை என வருவது சரிதான். ஆனால் "கூறு" என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் "கூற்றை" என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்."

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்: " தமிழ் புணர்ச்சியில் சொற்களின் ஒலிவடிவம் மட்டுன்றி, வாக்கிய அமைப்பு, சொற்பொருள் ஆகியவையும் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக, பந்து,சந்து, பொந்து முதலிய சொற்கள் கள் விகுதி பெறும்போது பந்துகள், சந்துகள், பொந்துகள் என இயல்பாகப் புணரும். ஆனால் இந்து என்ற சொல் கள் விகுதி பெறும்போது இந்துக்கள் என்று வல்லினம் மிகுந்து புணரும். இதற்கு ஒலிவடிவம் அன்றி பொருளே காரணம். அதுபோல் குருவி + கூடு ஆகிய சொறகள் குருவி கூடு கட்டியது, குருவிக்கூடு கீழே விழுந்தது ஆகிய வாக்கியங்களில் வேறுபட்டுப் புணர்கின்றன. இதற்கு வாக்கிய அமைப்பு காரணம். இதை அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி என்போம். இதுபோல்தான் ஆறு என்ற சொல் வேற்றுமை உருபு ஏற்கும் போது அது எண்ணைக் குறித்தால் ஆறை என்று இயல்பாகவும் நதியைக் குறித்தால் ஆற்றை என்று விகாரப்பட்டும் புணர்கின்றது. நீங்கள் சொல்லும் கூறு (aspect/part) என்ற சொல் வேற்றுமை உருபு ஏற்கும் போது கூறை என்ற இயல்பாகவே புணரும். ஆனால் கூற்று (statement) என்ற சொல்தான் வேற்றுமை ஏற்கும்போது கூற்றை என்று புணரும். ஆயினும் உடற்கூறு (anatomy)என்ற சொல் உடற்கூற்று விஞ்ஞானம், உடற்கூற்று வல்லுனர் முதலிய சொற்களில் விகாரப்படுவதையும் காண்கிறோம். புணர்ச்சியில் வழக்கு, பொருள்தெளிவு என்பதுதான் கவனிக்கப்பட வேண்டும்."

நான்: "பேராசிரியருக்கு வணக்கம். உங்கள் பதிலுக்கு நன்றி. காடு, கூடு, வீடு போன்று கூறு என்னும் சொல்லும் குற்றியிலுகரம்தானே. மேற்படி சொற்களைப்போன்ற வடிவில் தானே காடு  போல் தானே கூறு என்னும் சொல்லும் அமைந்துள்ளது. காடு , வீடு  ஆகியவற்றில் உகரம் கெட்டு ஈற்று மெய் இரட்டிப்பதைப்போல்தானே கூறு என்னும் சொல்லிலும் உகரம் கெட்டு ஈற்று ஈற்று மெய் இரட்டிக்க வேண்டும். அதன்படி கூறு எண்ணாக இல்லாதபடியால், கூற்றை என்றும் இலக்கணப்படி கொள்வதிலென்ன தவறு?  

கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பின்வருமாறு பாவித்திருக்கின்றார்;

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
      ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
         கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.   

சேறு, பேறு, கீறு, ஆறு இவற்றையெல்லாம் பேற்றை, சேற்றை, ஆற்றை, கீற்றை என்றுதானே பாவித்திருக்கின்றார். சோறு கூட சோற்றை , சோற்றுப்பார்சல் என்றுதானே பாவிக்கின்றோம்.அதே போல் கூறும் கூற்றை என்று பாவிப்பதில் தவறில்லையல்லவா?  இவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவல்."

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்:  "அன்புள்ள கிரிதரன், நீங்கள் சொல்வது தர்க்க ரீதியாகச் சரிதான். ஆனால் மொழியில் எப்போதும் தர்க்கரீதியை எதிர்பார்க்க முடியாது. ஆறு, ஆறை, ஆற்றை என இரு விதமாகப் புணர்கிறதல்லவா? இதற்கு ஒலி அடிப்படை அல்ல, பொருள் அடிப்படை என்றேன். கூறு என்பதையும் அப்படிக்கொள்ளலாமா? பழங்களை இரண்டு கூறுகளாகப் பிரித்து ஒரு கூறை அக்காவுக்குக் கொடுத்தேன் என்று எழுதலாம். இங்கு கூற்றை என்று எழுதுவது பொருத்தமாகப்படவில்லை. நூறு என்பது திரிபடைந்தும் திரிபடையாமலும் புணர்கிறது. நூற்றுக்குப் பத்து, நூறுக்குப் பத்து இரண்டும் வழக்கில் உண்டு. அதுபோல் சாறு என்பதும் சாற்றை, சாறை என வழங்கக் காணலாம். சாற்றைப் பிழிந்து, சாறைப் பிழிந்து. இரண்டாவது பேச்சு வழக்கின் செல்வாக்கு எனலாம். கூற்றை என்று பாவிப்பதில் தவறில்லை அல்லவா என்று கேட்கிறீர்கள். பொருள் மயக்கம் ஏற்படாவிட்டால் தவறில்லைத்தான். ஆனால் கூறு, கூற்று. ஆகிய இரு வேறு சொற்களும் ஒரே விதமாகப் புணரும்போது பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு. மொழியில் பொருள் தெளிவு, வழக்கு என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்பது என் கருத்து. தொடர்ந்து பேசுவோம்"

நான்: "நன்றி பேராசிரியருக்கு."

'கூறு, கூற்று. ஆகிய இரு வேறு சொற்களும் ஒரே விதமாகப் புணரும்போது பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு. மொழியில் பொருள் தெளிவு, வழக்கு என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. மொழியில் எப்போதும் தர்க்கரீதியை எதிர்பார்க்க முடியாது' என்பது பேராசிரியரின் நிலைப்பாடு.

இதன் அடிப்படையில் கூறை என்பதையே அவர் தேர்வு செய்திருந்தார்.  இதன் அடிப்படையில் தற்போது இத்தர்க்கம் முடிவுக்கு வருகின்றது. தன் நேரத்தை ஒதுக்கி ,இவ்விடயத்தில் தன் கருத்துகளைத் தெரிவித்த பேராசிரியருக்கு நன்றி. சந்தேகத்தை எழுப்பிய எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனிக்கும் நன்றி. அச்சந்தேகமே எனக்குப் பேராசிரியருடன் இது பற்றி உரையாடும் சந்தர்ப்பமொன்றினை ஏற்படுத்தித் தந்தது.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.