போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....
- கவிஞர் சேரன் -
அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத் தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:
" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன. அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "
போர் இலக்கியத்தைச் சேரன் பொதுமைப்படுத்தியதாக உணர்கின்றேன். போர்களுக்கு மத்தியில் தம் உயிரைப்பணயம் வைத்துப் பயணித்த ஊடகவியலாளர்கள் எல்லோருமே பிரச்சாரகர்களாக இருந்து விடுவதில்லை. பலர் அங்கு நிலவும் போர்ச்சூழலை, மாந்தரை, உயிரினங்களையெல்லாம் தம் எழுத்துகளூடு , புகைப்படங்களூடு, ஓவியங்களோடு பதிவு செய்திருக்கின்றார்கள். அவற்றுக்குகாக கலை, இலக்கிய உலகின் முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றார்கள். சில போர்களை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன. உதாரணத்துக்கு இரசாயனக் குண்டினால் பாதிக்கப்பட்டு, உடம்பு எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிய வியட்நாமியச் சிறுமியின் புகைப்படத்தைக் குறிப்பிடலாம். அது போருக்கெதிராக அமெரிக்கர்களைத் திசை திருப்பியதில் முக்கிய பங்கு வகித்தது.
அதுபோல் புகலிடத்தில் இருந்து போர் பற்றி எழுதப்படும் எழுத்துகள் இருவகை. ஒன்று எழுதுபவரின் கடந்த கால நேரடி அனுபவங்களை விபரிப்பவை. அவை போரிலக்கியமாகக் கொள்ளப்படலாம். அடுத்த வகை புகலிடத்திலிருந்து இழந்த மண்ணை, அங்கு நிகழும் போர் பற்றி எழுதப்படும் இலக்கியப் படைப்புகள். அவற்றைப் போரிலக்கியமென்பதை விடப் புகலிட அல்லது புலம்பெயர் இலக்கியம் என்று கூறலாம் என்பதென் கருத்து.
போர்ச் சூழலில் வாழ்பவர் எழுதுவதெல்லாம் போரிலக்கியம் அல்ல. இலங்கையில் போர்சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்கள் எவரும் குறிப்பிடத்தக்க போரிலக்கியம் படைத்ததாக நினைவிலில்லை. ஆனால் போராளிகள் பலர் தம் அனுபவங்களை எழுதியிருக்கின்றார்கள். அவற்றைப் போர் இலக்கியமாகக் குறிப்பிடலாம். அதே ச்மயம் அக்காலகட்டத்தில் வெளியான ஊடகங்களில் வெளியான ப்ல படைப்புகள் போரிலக்கிய வகையில் அடங்குவதாக இருக்கக்கூடும். ஆனால் அவற்றினை உள்ளடக்கிய தொகுப்புகள் வெளிவந்ததாக நினைவில்லை. யுத்தம் முடிந்தபின் பல வந்திருக்கின்றன. அவை யுத்தச் சூழலைப் பற்றி , யுத்தமற்ற சூழலிலிருந்து எழுதப்படுபவை. எனவே அவற்றில் வெளிப்படும் மானுட உணர்வுகள் நூற்றுக்கு நூறு வீதம் போர்க்கால மானுட மனோநிலையை பிரதிபலிப்பதாகக் கருத முடியாது.
போரிலக்கியம் பற்றிய விர்வான தர்க்கமொன்றுக்குக் கவிஞர் சேரனின் போரிலக்கியம் பற்றிய கருத்துகள் வழி வகுத்திருக்கின்றன.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது.
ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம்.
போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல் ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார்.
இவரது போர் பற்றிய பதிவுகளில் இராணுவ வெற்றி தோல்விகளுடன் படை வீரர்களின் உள்ளத்து உணர்வுகள் , அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள்,. அப்போது அவர்கள் அடைந்த மன உணர்வுகள் என்பவை நிறைந்திருக்கும். அதுவே பின்னர் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது போர்ப்பதிவுகளுக்குப் புலியட்சர் விருது கிடைக்கக் காரணமாகவிருந்தது.
இவரது The Death of Captain Waskow என்னும் கட்டுரை சிறந்த போரிலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிற்து.
போர்ச்செய்திகளைத் தருவதற்காகப் படையினருடன் பயணித்த இவர் ஜப்பானியப் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமானார்.
இவர் எழுதிய நூல்கள்: “Here Is Your War”, “Brave Men”
சிறந்த போரிலக்கியம் படைத்த போர்ச்செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் என்று இவர் மதிக்கப்படுகின்றார். இவரது மறைவுக்குப் பின்னர் இவரது எழுத்துகளுக்குப் புலியட்சர் விருது வழங்கப்பட்டது.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG ]