எழுத்தாளர்  ரஞ்ஜனி  சுப்ரமணியத்தின் சிறுகதைத்தொகுப்பான 'நெய்தல் நடை' தற்போது ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு நான் எழுதிய அணிந்துரை இது. 


ஒருவகையில் சிறுகதையை இவ்வுலகைப் பார்க்கும் ஜன்னல் என்றும் கூறலாம். அந்த ஜன்னலூடு வெளியே விரிந்து கிடக்கும் 
உ லகைப் பார்க்கின்றோம், வியக்கின்றோம். உணர்கின்றோம. புரிந்து கொள்கின்றோம். அந்த உணர்தல் பலவகைப்பட்டதாக  இருக்கும். இவ்வகையில் சிறுகதை ஒவ்வொன்றையும்  ஒரு ஜன்னல் என்று உருவகிக்கலாம்.  இத்தொகுப்பில் பல ஜன்னல்கள் இருக்கின்றன. இந்த ஜன்னல்களைக் கொண்டு இச் சிறுகதைத் தொகுப்பென்ற மண்டபத்தினை அமைத்திருக்கின்றார் எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியம்.  இந்த மண்டபத்தின்  ஜன்னல்கள் , ஜன்னல்களுக்கு வெளியே விரிந்து கிடக்கும் உலகை, அங்கு வாழும் பல்வகை மாந்தரை, அவர்தம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள எம்மைத்தூண்டுகின்றன. மருத்துவராக, மானுடராக ,அவர் அன்றாடம் கண்டு அறிந்த, அவதானித்த  உலகை,  சக மாந்தரை  , அவர்தம் வாழ்வை அவதானித்து, அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கொண்டு ஜன்னலொவ்வொன்றையும்  உருவாக்கியுள்ளார்  ரஞ்ஜனி  சுப்ரமணியம்.  சமுதாயப் பிரக்ஞை மிக்க ஜன்னல்கள் அவை.

ரஞ்ஜனி  சுப்ரமணியம்  மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  அதன் பின்னரே அவர் எழுதத்தொடங்குகின்றார். குறுகிய காலத்தில் புனைவு, திறனாய்வு இரண்டிலும் தன் கவனத்தைத்திருப்பிப் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்கு முக்கிய காரணங்கள் அவரது தீவிர இலக்கிய வாசிப்பும், அவர் அகத்தில் எந்நேரமும் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் இலக்கிய உணர்வும்தாம் என்றே  உறுதியாக நம்புகின்றேன். 

அவரது எழுத்து நடை , சரளமானது.  தங்குதடையற்றது.  வாசகர்களைக் கட்டி இழுத்துச் செல்லும் தன்மை மிக்கது. இப்பண்புகள் அவருக்குத் தான் கூற வந்ததை, வெளிப்படுத்த விரும்பியவற்றை எடுத்துக்காட்டுவதில் பெரிதும் ஒழைக்கின்றன.  காதல், முதற் காதல், வர்க்க வேறுபாடுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், சமூக, பொருளாதார , அரசியற் சூழல் மானுடரின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள் அல்லது மாறுதல்கள், இருப்பின் பாரபட்சம், சூழற் பாதுகாப்பின் அவசியம், குழந்தைத்தொழிலாளர் நிலை, முதியவர் நிலை , தொழில் நாடி புலம்பெயர்வோர் நிலை இவ்விதம் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் கதைகள் இவை. அவரது சக மானுடர் மீதான அவதானிப்பும், அதன் மூலம் அவர் அடைந்த சிந்தனைகளுமே இக்கதைகள் உருவாக முக்கிய காரணங்கள். இவ்விதமான உருவான கதைகளூடு, சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் அவர் சமூகச் சீரழிவுகள் பற்றி, சூழற் பாதுகாப்பு பற்றியெல்லாம் கேள்விகளை எழுப்பவும் அவர் தவறவில்லையென்பதை வெளிப்படுத்தும் கதைகள் இவை. 

நினைவுக்கனல்

பானு மருத்துவர். சித்ரா அறுபது வயதுடைய, பாலியல் வன்முறைக்காளாக்கப்பட்ட விதவை. பானுவின் சகோதரி பாலியல் வன்முறையால் தன் உயிரை மாய்த்தவள். வறுமையில் வாழும் பாட்டி ஒருவரின் பேத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றாள். வறுமை காரணமாக அதனை எதிர்த்துப் போராடாமல், குற்றத்தை மூடி மறைக்கக் கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு   அவர்கள் அதனைக் கடந்து போகின்றார்கள். சித்ரா கணவனை இழந்தவள். இளமையில் அவளை விரும்பிய  ஒருவன், போதைப்பழக்கம் போன்ற பல்வேறு பழக்கங்களுக்கு உள்ளாகிய ஒருவன் ,  முதுமையில் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றான். அவள் அதனை எதிர்த்துக் காவல்துறைக்கு அறிவிக்கின்றாள்.  இளமையில் சித்ராவைக் காதலித்தவன் அவளது கையைப்பிடித்தும் இழுக்கின்றான். சிதரா வீட்டாருக்குச் சொல்லி , அவன் சிறை செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. தகப்பன் அவனை அடிக்கின்றான். காவல் துறைக்கும் முறையிட்டு அடி வாங்குகின்றான்.  காவல்துறையினரால் உடல்ரீதியாகத் தண்டிக்கப்பட்ட அவனால் அவள் மேல் வைதத காதலை , ஏமாற்றத்தை மறக்க  முடியவில்லை. அதன் விளைவாகக் காத்திருந்து , முதுமையில் அவளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றான். அதனை முதியவளான சித்ரா மறைத்திருக்க முடியும்? அவளுக்கு அவ்விதமே அவளது அன்புக்குரியவர்களால் ஆலோசனையும் கூறப்பட்டாலும், அவள் அப்பாலியல் வன்முறையினை வெளிப்படுத்த, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த முடிவு செய்கின்றாள்.  

கதையில் ஏன் ஆண்கள் ஆணாதிக்கம் மிக்கவர்களாக, பாலியல் வன்முறை புரிகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் சிந்தனையை ஓட விட்டிருக்கின்றார் கதாசிரியை. அது 'ஹார்மோன்'களின் சேட்டையா என்றும் ஆராய்கின்றார்.

இச்சிறுகதை பல விடயங்களைத்  தொட்டுச் செல்கின்றது.  சக மருத்துவர் அநோஜா. பெரும்பான்மையினத்தவள் ஆனால் இனத்துவேசம் அற்றவள்.  அநோஜா ஒரு சிங்களப்பெண் என்பதை அவரைப்பற்றி விபரிக்கையில் அவர் இனப்பாகுபாடு அற்றவர் என்னும் கூற்று புலப்படுத்துகின்றது.  பாலியல் வன்முறை பற்றிய வேறு வேறான இருவர் கண்ணோட்டங்களையும் கதை வெளிப்படுத்துகின்றது.  இவர்கள் இருவரும் வாழ்க்கையை நோக்கும் கண்ணோட்டம் வித்தியாசமானது.  ஆனால் அநோஜா மேனாட்டு வாழ்க்கை முறையின்  அம்சங்கள் பலவற்றை  ஏற்றுக்கொள்பவர். உதாரணத்துக்கு ஆணும் , பெண்ணும்  சேர்ந்து வாழ்தல் என்னும் வாழ்க்கை முறையினைக்கூறலாம். 

இச்சிறுகதையின் முக்கிய அம்சம் பெண்கள் மீதான ஆணாதிக்கச் சமூகத்தின் பாலியல் வன்முறை, நவீன சமூக, அர்சியல் , பொருளாதாரத்தில் பெண்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பாலியல் வன்முறையைப்  புரிந்தவர்கள் வெளிப்படுத்தப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் அவசியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பாலியக் வன்முறைக்குள்ளானவர்கள் எல்லாரும் சித்ராவைப்போல் குற்றவாளிகளைச் சட்டத்தின் துணையுடன் வெளிப்படுத்த முன்வருவதில்லை என்பதையும் இக்கதை விமர்சிக்கின்றது. இக்கதையில் நெருடக்கூடிய ஓர் அம்சம். ஒரு பெண் மீது காதல் கொண்ட ஒருவன், அக்காதலை முதுமை வரை மீற  முடியாது வாழும் ஒருவனைப் பாலியல் வன்முறையாளனாகச் சித்திரிக்க வேண்டுமா என்பதுதான்? ஆனால் துரதிருஷ்ட்டவசமாக அப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதையும்  கவனத்திலெடுக்காமல் இருக்க முடியாது என்று இக்கதை மூலம் எடுத்துரைத்திருக்கின்றார் கதாசிரியை.

                 - எழுத்தாளர்  ரஞ்ஜனி  சுப்ரமணியம் -

அன்றொரு நாள்

மொழி சிறப்பானது. கடற் றொழில் சமூகம் பற்றிய விபரிப்புகள் மண் வாசனை  மிக்கவை. ஆசிரியை தன் மாணவன் மீது வைத்திருந்த ஒருவித 'கிரேஸ்' காரணமாகப் பல வருடங்களின் பின்னர் சந்திக்கச் செல்கின்றாள்.  ஐம்பது வருடங்கள் கடந்தும் அவன் நினைவுகளால் அவள் மனது நிறைந்திருக்கின்றது. 69 வயது இருக்கலாம்.  அவனைச் சந்திக்க ஆவலுடன் சென்றவளின் அவன் பற்றிய மனச்சித்திரத்தை அவனது பருத்த, விகாரத் தோற்றம் உடைத்து விடுகின்றது. சந்திக்கச்சென்றவள் அவனிடம் தான் யார் என்பதை வெளிப்படுத்தாமலே , ஒரு வித ஏமாற்றத்துடன் திரும்புகின்றாள். 

அவன் கடற்றொழிலாளி ஒருவனின் மகன். அவளது அபிமான மாணவன். அவளும் அவனது அபிமான ஆசிரியை. அதன் காரணமாக, அவனது குடும்பச்சூழல் காரணமாக அவ்வப்போது அவன்  பாடசாலைக்கு வராமால் நின்று விடுவதுண்டு. அச்சமயங்களில் அவள் அவனிருப்பிடம் சென்று பாடசாலைக்குக் கூட்டி வருவதுமுண்டு. அவள் அணியும் செந்நிறச் சேலை அவனுக்குப் பிடிக்கும். அதை அவளுக்குக்கூறுவான். இதனால் அவன் மேல் ஒருவித ஈர்ப்பும் அவளுக்குண்டு.  இதன் காரணமாக வாழ்வின் சுழல்களுக்குள் அடிபட்டு ,அவனுடனான தொடர்பை இழந்திருந்த நிலையிலும் அவனை மீண்டும் ஒரு தரம் சந்திக்க வேண்டும் என்னும் ஆர்வம் அவளுக்குண்டு. அதற்குக் காரணம் ஆசிரியையான அவளுக்கு அம்மாணவன் மீது ஏற்பட்ட  ஒருவகை பாலியல் சார்ந்த  ஈர்ப்பா என்பதையும் கதாசிரியை ஆராய்கின்றார். இந்நிலையை விபரிப்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. சிறிது தவறினாலும் அவளது உளவியலைத்தவறாகச் சித்திர்க்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதனைச் செய்யாமல், மிகவும் இலாகவமாகக் கதையினை நடத்திச் செல்கின்றார் கதாசிரியை.

சிறப்பான மொழி நடையில் படைக்கப்பட்டுள்ள கதை. உதாரணங்களாகப் பின்வருபவற்றைக் கூறலாம்:

'அவளது மனது  பச்சை நிறக் கனவுகளால் இதயம் நிறைந்திருந்தது.' 

'பயணம் எதை நோக்கமாககொண்டது  என்பது கண்ணாடியில் படிந்திருக்கும் புகைமூட்டம் போல தெளிவில்லாமே இருந்தது. அதை விலக்கிப் பார்க்கவும் மனம் விரும்பவில்லை.'  

'வினை முற்றுக்கள் எல்லாம் அவர்களின் பேச்சு வழக்கிற்கு வசதிப்பட்டபடி வினை எச்சங்களாகும் சுவாசியமான தமிழ்நடை அது.... இவை எவையுமே காரணமில்லையே. இன்னுமொன்றும் இருக்கிறதே என்றோர் இரகசியக் குரல் உள்ளிருந்து கூவியது. ஆனாலும் அதற்கு செவிமடுப்பதையும் சம்மதம் சொல்வதையும் சம்பிரதாயச் சிறைக்குள் வளர்த்தெடுத்த தார்மிக உணர்வொன்று தடுத்தது.'

அம்மாணவன் மீதான ஈர்ப்பை மிகவும் இலாகவமாக விபரிப்பதைப் பின்வரும் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன:

'ஒரு ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் இவ்வாறான ஈர்ப்புகள் இருப்பதை கலாச்சாரத்தின் துணை கொண்டு மறுதலிப்பது  எனக்கு வசதியாக இருந்தது.  ஆனாலும் பின்னொரு  காலத்தில் பத்து வயது அதிகமான ஆசிரியை ஒருவரை மாணவனாக  இருந்த இளம் பையனொருவன்  இழுத்துக்கொண்டு ஓடியது ஞாபகத்தில் வர மனதுக்குள் சஞ்சலமான கள்ளப்புன்னகை ஒன்று மலர்ந்தது.'

'வயதில் மூத்த ஆண் ஆசிரியர் இளைய மாணவியை விரும்புவதை ஏற்கும் சம்தாயம் , ஏன் வயது கூடிய பெண் அவ்விதம் செயற்படுவதை ஏற்பதில்லை.'

மாணவனைப்பற்றிப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் செல்லும் ஆசிரியை  அவனது அவலட்சணமான , விகாரமான தோற்றம் காரணமாக, அவனைப்பற்றிய  தன் எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்த நிலையில் , அவனுக்குத் தான் யார் என்று கூறாமலே, திரும்பி விடுகின்றாள்.  இது ஒரு கேள்வியை எழுப்புகின்றது.  அப்படியானால் ஆசிரியையான அவள் தன் மாணவன் மேல் கொண்டது அவனது அக ஆளுமை மீதான ஈர்ப்பா அல்லது புறத்தோற்றம் மீதான ஈர்ப்பா?  ஒரு வகையில் உடல் வனப்பும் அவளது ஏமாற்றத்துக்குக் காரணம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது கதை முடிவு. பொதுவில் யதார்த்தமான மானுடரின்  நடைமுறையும் இவ்விதமாகவே இருக்கும் . அதனை வெளிப்படுத்தும் கதையென்றும் கூறலாம். அதே நேரம் ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈர்ப்பை  வயதின் அடிப்படையில் எடை போடும் சமூதாயத்தின் நிலையினைப் பற்றி, 'வயதில் மூத்த ஆண் ஆசிரியர் இளைய மாணவியை விரும்புவதை ஏற்கும் சமுதாயம் , ஏன் வயது கூடிய பெண் அவ்விதம் செயற்படுவதை ஏற்பதில்லை' என்று கேள்வி எழுப்புமொரு கதையாகவும் இக்கதையினைக்கூறலாம். ஆனால் கதையின் பிரதான சாரம் அதுவல்ல. அது ஆசிரியையின் மாணவன் மீதான ஈர்ப்பு பற்றியது.  அது எத்தகையது? அதனை வாசிக்கும் வாசகரின் முடிவுக்கே விட்டு விடுகின்றார் கதாசிரியை.

கதையோட்டம்  இவ்விதமாக இருந்தாலும், இக்கதை வறிய மக்களின் குழந்தைகளின் கல்வியை எவ்விதம் அவர்கள்தம பொருளாதாரச் சூழல் பாதிக்கின்றது என்பதையும் கூடவே சுட்டிக்காட்டுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறை, நிறைகளுடன் கூடிய பாத்திரப்படைப்பை இத்தொகுப்புக் கதைகள் பலவற்றில் காணலாம். இங்கும் பிரதான பாத்திரமான ஆசிரியை கதா பாத்திரம் அவ்விதமே குறை ,நிறைகளுடன் படைக்கப்பட்டுள்ளது.

 இக்கதையை வாசித்தபோது வ.அ.இராசரத்தினத்தின் சிறுகதையொன்று நினைவுக்கு வந்தது. அவரது இளம்பருவத்துக் காதலி அல்லது சிநேகிதியைப் பல வருடங்களுக்குப்பின்னர் , முதிய வயதில் கண்டபோது அப்பெண் முதுமையின் தாக்கத்தால்  வனப்பிழந்திருந்த  அவளது தோற்றம் கண்டு  ஏமாந்த அவரது  மனநிலையைப் பற்றிக் கூறும் கதை. எனக்கு அவரது கதையாகத்தான் நினைவிலுள்ளது. ஒருவேளை இன்னுமொருவரின் கதையாகவும் இருக்கக்கூடும்.

ஆசை முகம் மறந்து போச்சு

மன நோயால் பாதிக்கப்பட்ட தாயாருக்குப் போதிய கவனிப்பைப்  பொருளாதாரம் காரணமாக மகனால் வழங்க  முடியவில்லை.  மகளே அவளிருந்தவரையில் கவனித்துக்கொள்கின்றாள். இருந்தும் மன நோய் வாய்ப்பட்ட அவளைச் சரியான முறையில் கவனித்தோமா , இன்னும் சிறிதும் அதிகமாகக் கவனித்திருக்கலாமோ என்னும் குற்ற உணர்வு அவளை வாட்டுகின்றது.   அதன பயனாகத்  தாய் மறைந்த பின்னர் ,அவரது பிறந்த நாளை நினைவு கூர்வதையும், அதன் பொருட்டு மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்குவதையும்  கதை விபரிக்கின்றது.  அதே சமயம் தாயாரினால்தான் தான் சமையலில் சிறந்தவளாக இருக்க முடிந்ததையும், அதையே வாழ்க்கையைக் கொண்டு நடத்துமொரு தொழிலாகககொள்ள முடிந்ததையும் இக்கதை எடுத்துரைக்கின்றது.  மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை வாழ்வாதாரமாகக் கொண்ட  மகள், தாயாரின் பிறந்த நாள் அன்று  மட்டும் , தாயார் நினைவாக , இலவசமாக வழங்குவாள்.  இவற்றை விபரிப்பதும், நோய்வாய்ப்பட்ட முதியோரை இருக்கும்போது நன்கு கவனிக்க வேண்டும் என்பதையும்  சுட்டிக்காட்டும் வகையில் உருவான கதையாக இதனைக் கருதலாம். 

அதே சமயம் இக்கதை ஒரு விதத்தில் அங்கதச் சுவை மிகுந்ததும் கூட.  நோயால், முதுமையால் வாடும் தாய் தந்தையரைக் கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்காமல், அவர்கள்தம் மறைவுக்குப் பின்னர் அவர்கள் பெயரால் உதவித்திட்டங்கள் வழங்குவோரை நோக்கி முன் வைக்கும் விமர்சனமே அந்த அங்கதச் சுவைக்கு முக்கிய காரணம்.  ஆனால்  அந்த அங்கதச் சுவையையும் மீறி  மகளின் தாய் மீதான பாச உணர்வுகளையும், அவள் பற்றிய நனவிடை தோய்தலையும், இன்னும் க்வனித்திருக்கலாமே என்னும் குற்ற உணர்வையுமே வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள்.   

கதை ஆசிரியரின் சூழல் பாதுகாப்பு பற்றிய பிரக்ஞையினையும் காணலாம்.  உதாரணத்துக்குச் சூழற் பாதுகாப்பின் பொருட்டு 'பிளாஸ்டிக்'கிற்குப் பதிலாகக் கடதாசிப்பெட்டியைப் பாவிப்பதைச் சுட்டிக்காட்டலாம். அத்துடன் வாழ்க்கைச் சூழல்களைக் கண்டு துவண்டு விடாது , பெண்கள் சுய  தொழில் செய்து , தொழிலதிபர்களாக விளங்குவதும் அவசியம் என்பதையும் கோடிட்டுக் காட்டுமொரு கதையாகவும் இதனைக் கருதலாம். 

இவ்விதம் கூற வந்த கதைகளூடு , சமூகம் , சூழல், பெண் உரிமை, குடும்ப வாழ்க்கை, இனநல்லிணக்கம் போன்ற பல விடயங்களைப் பற்றிய தனது எண்ணங்களையும் தூவிச் செல்வதை ஆசிரியர் ஒரு பண்பாகவே வைத்திருக்கின்றார்

கண்ணான கண்ணே 

முஸ்லீம் , தமிழர் வாழும் பகுதியில் வாழும் பெண் ம்ருத்துவர் ஒருவரின் பார்வையில் கூறப்படும் கதை. ஒரு வகையில் உருக்கம் மிக்கது.  அவர்  பணி புரியும் மருத்துவ நிலையத்துக்கு வருவதால் அவருடன் பழ்க்கமாகி விட்ட முஸ்லிம் பெண் ஒருத்திக்கு பல வருடங்களின் பின் பிறக்கும் பெண் குழந்தைக்குப் பெரு மூளை வியாதி ( சிரபிறல் போல்சி) .  ஏன் தன் வாழ்க்கையில் இவ்வளவு துயரம் என்று அப்பெண் கவலைப்படுகின்றாள்.  அப்பெண் குழந்தை  இறுதியில் இறந்து விடுகின்றாள்.  ஒரு விதத்தில் அக்குழந்தைக்கு அந்நோயிலிருந்து விடுதலை.  இனிமேல் மகள் நோயால் கஷ்ட்டப்பட மாட்டாள் என்று ஆறுதல் அடைந்தாலும், மகளைப்பிரிந்த துயரமும் அவளை வாட்டுகின்றது. தான் மருத்துவ  நிலையம் வரும்போதெல்லாம்  கனிவுடன் தன்னைக் கவனித்துக்கொள்ளும் அப்பெண் மருத்துவருக்கு நன்றி கூறவும், மகளின் மறைவுச் செய்தினை அறிவிக்கவும் வரும், மருத்துவரின் கைகளைப் பற்றி தன் அன்புக்கு, நன்றிக்கு அடையாளமாக முத்தமிடுகின்றாள் அந்த முஸ்லிம் பெண். ஞானம் சஞ்சிகையில் வெளியான இக்கதை இவ்விதம் முடிவுறுகின்றது. 

இனங்களுக்கிடையிலான பரஸ்பர பரிந்துணர்வு, மானுட நேயம், மருத்துவரின் பண்பு  என்பற்றினை அடிப்படையில் புனையப்பட்ட கதையென்பதை வாசித்து முடிக்கையில் உணர முடிகின்றது. உணர்வு பூர்வமான முடிவு இச்சிறுகதையின் முக்கிய அம்சங்களிலொன்று. 

நான் சந்தியில் நிற்கிறன்

கதை சந்தியில் நிற்கும் தன் அனுபவங்களைக்  கதை சொல்லி  விபரிப்பதுடன் ஆரம்பமாகின்றது. சந்திக்குச் சந்தி நிற்கும் பல்வகை மனிதர்களை, பிச்சைக்காரர்களை, நடைபாதை வியாபாரிகளை எல்லாம் அவதானிப்பதில் பிரியம் மிக்கவர் கதை சொல்லி. சுவாரசியமாகத் தன் சந்தி அனுபவங்களை விவரித்துச் செல்கின்றார். ஒருவேளை கதை முழுவதும் சந்தியை விபரிப்பதில், காணும் மனிதர்களை விபரிப்பதில் விவரணச்சித்திரமாக அமைந்து விடுமோ என்று கருதினேன். ஆனால் கதை அவ்விதம் முடியவில்லை. விவரிப்பில் தொடங்கி, உள்ளே ஒரு திருப்பத்துடன் கூடிய கதையொன்றையும் ஆசிரியர் புனைந்துள்ளார். நடக்க முடியாத, சக்கர நாற்காலி பாவிக்கும் மனைவியை முதுகில் தூக்கி வந்து பிச்சையெடுக்கும் முனுசாமிக்கு இரண்டாயிரம் ரூபாவைக் கொடுத்துவிட்டு, அன்றிரவு படம் பார்க்கச் செல்கின்றார் கதை சொல்லி. அங்கு அருகில் இடையூறு விளைவித்த ஒருவர் மேல் எரிச்சலுற்று திட்டத்  திரும்பியபோது அவரும், அருகிலிருந்த பெண்ணும் பிச்சைக்காரர்கள் என்பதை அறிந்து திடுக்கின்றார். குறிப்பாக அப்பெண் குருட்டுப்பெண்ணாக நடித்துப் பிச்சை யெடுப்பவர்.  விருதுக்குரிய நடிகர்கள் திரையில் அல்ல வெளியில் தான்  என்று கதை முடிகின்றது. 

வறுமை காரணமாகப் பிச்சைக்காரர்கள் உருவாகின்றார்கள். மன நோய்கள் காரணமாக, அனைவராலும் ஒதுக்கப்பட்டவர்களிலிருந்தும் பிச்சைக்காரர்கள் உருவாகின்றார்கள். அவர்கள் நிலை காரணமாக , பல்வேறு வகைகளில் நடித்தும் சிலர் பிச்சை எடுக்கின்றார்கள். அவர்கள் வயிற்றுக்காக நடிக்கின்றார்கள். ஆனால் அன்றாடம் , தேவைக்கு மீறிச் சம்பாதிப்பதற்காகப் பல்வேறு வேடங்களைப்போடும் பல்வகைப் பிச்சைக்காரர்களை விட , உண்மைப்பிச்சைக்காரர்கள் மோசமானவர்கள் அல்லர். அக்கோணத்திலும் கதாசிரியை  தன் கவனத்தைத் திருப்பியிருக்கலாமோ என்று கதையை வாசித்தபோது தோன்றியது.

நெய்தல் நடை

விமானப்படையில் இலத்திரனியல் துறையில் பதவிக்காகத் தேர்வு பெற்ற கதரீன் என்னும் பெண்ணுக்கு வெளிக்களப் பயிற்சி கொடுக்கிறான் ஹரி. அவன் கதரீனுக்குப் பயிற்சி கொடுக்கும் அதே சமயம் அஞ்சு என்னும் பெண்ணுடன் அலைபேசியில் அவ்வப்போது உரையாடிக்கொண்டிருக்கின்றான். உரையாடல்களை வைத்து ஹரிக்கும் , கதரீனுக்குமிடையிலான உறவின் தன்மை, அஞ்சுவுக்கும் ஹரிக்குமிடையிலான உ றவின் தன்மை இவற்றைப்பற்றிய சந்தேகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் உத்தியில் கதை புனையப்பட்டுள்ளது. இறுதியில் அஞ்சுவுக்கும் ஹரிக்குமிடையிலான உறவு எத்தகையது , ஹரிக்கும் கதரீனுக்குமிடையிலான உறவு எத்தகையது என்பதைப் போட்டுடைப்பதுதான் ஆசிரியரின் நோக்கம் என்பதை உணர முடிகின்றது. 

வாசகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியையும், இன்பத்தையும் கொடுப்பதற்காகக் கதையின் முடிவில் திருப்பத்தை வைத்து முடிப்பது வெகுசனப் புனைகதைகளின் பொதுவான பண்புகளில்  ஒன்று. இக்கதை அவ்வகையான கதைகளிலொன்று. வழக்கமான ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் கதை சொல்லும் பாணியிலிருந்து சிறிது விலகியுள்ள தொகுப்புக்கதை 'நெய்தல் நடை'.  உண்மையில் அஞ்சு என்பவள் அவனுக்குத் தாய் போன்ற ஒருத்தி. அவன் மணமானவன். கதரீனை அவன் மகள் போல் கருதுகின்றான்., ஆனால் இவையெல்லாவற்றையும் வாசகர்கள்  ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாத வகையில், ஒருவித மர்மமாக அல்லது பூடகமாக வைத்து,   அவர்களுக்கிடையிலான  உறவுகளின்  தன்மை பற்றிப் பல்வேறு சந்தேகங்களை வாசகர்கள் மத்தியில்   தூண்டி விட்டு, இறுதியில் உணர வைப்பதுதான் ஆசிரியரின் நோக்கமாக  இருக்க வேண்டும். வாசகர்களின் விருப்பதைத்தூண்டும் வகையில் பின்னப்பட்டுள்ள கதை.

பரிமாணம் 

வானதி என்னும் தமிழ்ப்பெண் கொழும்பு வீதியொன்றில் காரில் பயணிக்கையில் சிங்கள் இனத்தில் 'ஸ்போர்ட்ஸ் பைக்'கில் வந்த ஒருவரை மோதி விடுகின்றாள். தவறு 'ஸ்போர்ட்ஸ் பைக்'கில் வந்தவருடையதுதான். ஆனால் அங்கிருந்து மீன்கடைக்காரன் ஒருவர், அவரது தொழில் நேர்த்தியைக் கண்டு வியப்பவள் வானதி, அந்த அடிபட்டவருக்குச் சார்பாகப்ப் பொய்ச்சாட்சியாகிவிடுகின்றார். அதனால் சிங்களவரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் வானதியில்தான் குற்றம் என்று முடிவெடுக்க, நீதிம்னற வழக்காகின்றது. விபத்து நடந்த இடத்தில் அவளுக்குச் சாட்சியாக ஒருவர் முன்வந்தபோது அதை அப்போதிருந்த பதற்றத்தில் வானதி பயன்படுத்தவில்லை. இப்போது நினைவுக்கு வர (அவரும் அவளிருப்பிடத்துக்கு அண்மையில் இருப்பவர்) , அவள் அவர் உதவியை நாடிச் சென்று சந்திக்கின்றாள். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான அவர்  சிங்களவர். அவரது பெயர் பவித்திர தேசப்பிரிய ஹெட்டியாராச்சி.  வானதிக்கு உதவ முன்வருகின்றார். 83 இனக்கலவரத்திலும் சிங்களவர் ஒருவரால் வானதி குடும்பம் காப்பாற்றப்பட்டது. இப்போதும் சிஙகளவர் ஒருவர், தன் சகோதரரான  இராணுவ வீரர் ஒருவரை யுத்தத்தில் பலி கொடுத்த ஒருவர், அவளுக்கு , அவள் மேல் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள விபத்து  வழக்கொன்றின் சாட்சியாக முன்வருகின்றார்.  

இக்கதையின் முக்கிய அம்சம் மானுட நேயம். அது இன, மத வேறுபாடுகளைக் கடந்தது.  இக்கதையில் விபத்துக்குள்ளான  சிங்கள வாகனமோட்டி ஒருவர் , தன்னில் தவறிருந்தும், சக சிங்களவரான மீன்கடைக்காரர் ஒருவரைச் சாட்சியாக்கி. தன் வாகனத்துடன் மோதிய தமிழ்ப்பெண் மேல் குற்றஞ்சாட்டுகின்றார். ஆனால் அத்தமிழ்ப்பெண்ணை , விபத்தை அவதானித்த  சிங்களவரான முன்னாட் படைவீரர் ஒருவர்  உண்மையை எடுத்துரைத்துக் காப்பாற்ற முன் வருகின்றார்.   'இந்தத் தேசத்தின் உண்மையான பிரியர்கள் பவித்திரமான மனம் கொண்டவர்களாக இனியும் வந்து பிறப்பார்கள். நம்பிக்கை இருக்கிறது. வசந்தம் ஒரு நாள் வரக்கூடும்'  என்று கதை முடிகின்றது. நாட்டின்  இன நல்லிணக்கத்துடன் கூடிய எதிர்காலம் நன்றாக அமையுமென்ற நம்பிக்கையை எதிர்வு கூறும் கதை.  இக்கதையை நாட்டின் இன விரோதங்கள் அற்ற எதிர்காலத்துக்காக அறை கூவல் விடுக்கும்  குறியீட்டுக் கதையாகவும் கருதலாம்.  அவ்வகையில்  முக்கியத்துவமானது. 

இக்கதையில் இன்னுமோர் அம்சம் மானுட அவதானிப்பு. உதாரணத்துக்காக , இக்கதையில் வரும் மீன்கடைக்காரனின் தொழில் நேர்த்தியை அத்தமிழ்ப்பெண் அவ்வழியால் செல்லும் சமயங்களிலெல்லாம் அவதானித்து ஆச்சரியப்பட்டிருக்கின்றாள். அது விரிவாக இக்கதையில் விபரிக்கப்பட்டிருக்கின்றது. இவ்விதம் சக மானுடர் மீதான அவதானிப்பு இவர் கதைகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களிலொன்று.  இவ்விதமான மானுட அவதானிப்பை 'நான் சந்தியில் நிற்கிறன்' கதையிலும் அவதானிக்கலாம்.

பைரவி கதை சொன்னாள்

கவித்துவம் மிக்க நடை.  'அவள் தன் விழிகளை மூடி அகவுலகில் நுழைந்தாள். மனக்குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்.'  ஆரோக்கியமான , மனத்தை ஈர்க்கும் கருத்துகளை ஆங்காங்கே பதுக்கி வைத்திருக்கும் எழுத்து நடை. 

வித்தியாசமான கதை.  இந்தக் கதை பெண்கள் அன்றாடம்  எதிர்கொள்ளும் ஆணகளின் பாலியல் வன்முறைகள் (பஸ்ஸில், குளிக்கையில் , வாடகைக்குத்  தனித்திருக்கும் சமயங்களில் திருமணமான வீட்டுச் சொந்தக்காரர் மூலம் என) , சீதனம் வாங்குவதற்குப்  பெண்களும் காரணம், என முக்கிய பிரச்னையைப்பற்றிப்  பேசுகிறது. பைரவி என்னும் பெயருக்கான விபரிப்பில் பைரவி இராகம் பற்றிய தகவல்கள் ஆசிரியரின் இசை பற்றிய ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. 

பவானி சற்குணசெல்வம் என்னும் எழுத்தாளர் ஒருவரின் 'மனச்சோலை' நூலை வாசிக்கும் அனுபவம் (எழுத்தாளர் உண்மையில் வாழ்பவர்) இக்கதையின் தோற்றுவாய். ஆண்களும் பெண்ணியம் பேசினால் மட்டுமே பிரச்னை தீரும் என்ற நூலின் அத்தியாயம் ஒன்று தந்த பாதிப்பே இச்சிறுகதை.  பைரவியின் ஆண் நண்பர்கள் இருவர். ஒருவர் இளையவர். இன்னுமொருவர் அவளுடன் நன்கு பழகும் சம வயதுடையவர். இளையவர் மிகவும் முற்போக்கானவர். சம் வயதுடையவர் ஆணாதிக்க மனம் மிக்கவர். ஆனால் நல்லவர். மனக்குதிரைகள் பல் வகைப்பட்டன. அவற்றை அடக்கி ஓட்டுவதன் மூலம் தன் பிரச்னைகளுக்குத்  தீர்வு காண்பவள் பைரவி.

இவ்விடயத்தில் மாற்றம் நிகழும் என்னும் நம்பிக்கையுடன் முடிகின்றது கதை. இக்கதையின் முக்கிய அம்சம் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் நிலையினை விபரிப்பது. எடுத்துக்காட்டுவது. ஆனால் பெண்களின் உரிமைகளை ஆண்களை எதிரிகளாகப் பார்ப்பதன் மூலம் அடைய முடியாது என்பதையும் கதை கோடிட்டுக் காட்டுகின்றது. கருத்தைக் கருத்தால்தான் வெல்ல முடியும். வெல்ல வேண்டும்  என்பதைத்தான் அவரது நல்லவரான, ஆணாதிக்கம் மிக்க நண்பரின் பாத்திரப்படைப்பு தெரிவிக்கின்றது. அதே சமயம் ஆணாதிக்க மனநிலை அற்ற, பெண்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இளைய ஆண் நண்பர் ஆணாதிக்கம் அற்ற எதிர்காலத்தின்  குறியீடு. இவ்விதம் கருதும் வகையிலேயே இக்கதை புனையப்பட்டுள்ளது. 

மகேஸ்வரியை மனம் மறக்கவில்லை

நாடு வந்து மீண்டும் வெளிநாடு செல்லும் தோழியை வழியனுப்பக் கட்டுநாயக்க விமான நிலையம் செல்கிறாள்  அன்பரசி. அங்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பச் செல்லும் கணவனையும், அவனது பத்துவயதுச் சிறுமையையும், அவள் தூக்கி வைத்திருக்கும் இரண்டு வயதுத் தங்கையையும் காண்கின்றாள்.  இப்பொழுதும் வீட்டு வேலைக்குப் பெண் ஒருத்தியை வைத்திருப்பவள் அன்பரசி. தன் சுய நலத்தை முதன்மைப்படுத்துபவள் அவள்.. அவளுக்குப் பல வருடங்களிம்  முன் வீட்டு வேலைக்காரியாக வந்த மலையகச் சிறுமி மகேஸ்வரி நினைவு வந்தது. அவளைச் சுயநலததுடன் நடத்தியது நினைவுக்கு வந்தது. குற்ற உணர்வும் ஏற்படுகின்றது. அவள் இப்போது எப்படி இருப்பாள்  என்று எண்ணுகின்றாள். கடவுச்சீட்டில் உள்ள பிழையைத் திருத்துவதற்காக அரச அதிபரைச் சந்திக்கச் செல்கின்றாள். அங்கு அரச அதிபராக இருப்பவள் மகேஸ்வரி.  தன் குற்ற உணர்வுகள் நீங்கி அவளைப் பார்க்கின்றாள். அவள் நன்றாக இருந்தால் இவளது குற்ற உணர்வுகள் ஏன் நீங்க வேண்டும்? குற்ற உணர்வு அப்பொழுதுதானே தோன்ற வேண்டும்? இருந்தாலும் இவ்விடயத்தில்  அன்பரசியை குறை , நிறைகளுடன் படைத்திருக்கின்றார் ஆசிரியர் என்றே கருத வேண்டும். அவளது குற்றவணர்ச்சியை தன்னால் பாதிக்கப்பட்ட சிறுமியான மகேஸ்வரியின் வெற்றிகரமான நல்வாழ்க்கை குறைக்கின்றது என்னும் நோக்கில் இப்பிரச்னையை ஆசிரியர் அணுகியிருக்கின்றார். 'நல்ல வேளை, அச்சிறுமியின் வாழ்வைத் தன் நடத்தை பாதிக்கவில்லை. தான் புரிந்த  குற்றத்தின் பாதிப்பையும் மீறி அவள் நன்றாக வாழ்கின்றாள்' என்று திருப்திப்படுவதால் அவளது குற்றவுணர்ச்சி குறைந்தது என்று ஆசிரியர் சித்திரித்திருக்கின்றார்.

இக்கதையும் பல விடயங்களைத்தொட்டுச் செல்கிறது. குழ்ந்தைத்தொழிலாளர் நிலை, சுயநலம்  வீட்டுப் பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதில் வகிக்கும் பங்கு, அதனால் எழும் குற்ற உணர்வு ஆகியவற்றுடன் , வாழ்க்கையின் கடும் முயற்சி , கல்வி முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் ஒருவர் பொருளாதார நிலையினை உயர்த்தி உச்சத்தைத் தொடலாம் என்பதையும் வெளிப்படுத்துமொரு கதையாக இக்கதையினைக் கூறலாம். 

வருகிறான்

உதயன் ரம்யாவுடன் படித்தவன். அவளை விரும்பியவன். அவ்ளுடன் ஒப்பிட்டால் பொருளாதாரரீதியில் குறைந்தவன். பார்ப்பதற்கு முன் துருத்திய பற்களுடன் அவலட்சணமாக இருப்பவன். அவனது காதலை நிராகரிக்கின்றாள் ரம்யா. ரம்யா வயது அதிகமான ,பொறியியலாளரான ஒருவரை மணம் முடிக்கின்றாள். அவர் பாரிசவாதம் வந்து படுக்கையில் கிடக்கின்றாள்;. ரம்யாவும் அழகிழந்து இருக்கின்றாள். குழந்தைகள் இருவரும் சாதாரண் வேலைகள் செய்கின்றார்கள். பொருளாதாரரீதியில் சிரமத்துடன் வாழ்கின்றாள் ரம்யா. இந்நிலையில் உதயன் இலண்டனிலிருந்து  வருகின்றான். அவளைப் பார்க்க வருகின்றான். அவளை மட்டும் பார்த்து விட்டுத் திரும்புகின்ன்றான். அங்கு நிறுவனமொன்றின் உயர் பதவியில்  இருக்கின்றான். மனைவியும் , குழந்தைகளும் மருத்துவர்கள். வந்தவன் அவளது இளமைக்காலப் புகைப்படத்தை அலைபேசியில் அகப்படுத்துச் செல்கின்றான். 

இந்தச் சிறுகதை பல விடயங்களைத் தொட்டுச் செல்கிறது. வர்க்க வேறுபாடுகள், புற அழகு எவ்விதம் மானுடரின் காதல், திருமணம் போன்றவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இருப்பின் மாறும் நிலையற்ற தன்மை மானுடரின் நிலையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம்  ஒருவர் இருப்பைப் பாதிக்கின்றது. அத்துடன் இக்கதையில் மானுட உளவியலின் விசித்திரத் தன்மையினையும் கதாசிரியை சுட்டிக்காட்டுகின்றார். ஒரு காலத்தில் தன்னால் நிராகரிக்கப்பட்டவன் தன்னைச் சந்திக்க வருகையில் அவனது செல்வந்த நிலையினை உணராமல், அவனும் தன்னைப்போல்தான் தாழ்ந்த நிலையில் இருப்பான் என்று எண்ணுகின்றாள் கதையின் நாயகி.   அவ்விதமான தோற்றத்தில் வீடு மாறி வந்த ஒருவரைத் தவறாக அவனாக எண்ணி ஒருவிதத்  திருபதியும் கொள்கின்றாள். இதனை இச்சிறுகதை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கின்றது. அதே சமயம் வெளிநாட்டில் உயர்ந்த நிலையில் வாழும் அவளை ஒரு காலத்தில் விரும்பிய  அவனை அவளது வறிய , தாழ்ந்த  நிலை பாதிக்கவில்லை. இன்னும் அவள் மேல் ஒரு காலத்தில் கொண்டிருந்த அவனது காதல் நீறு பூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கின்றது. அதனால்தான் கதையின் இறுதியில் அவன் அவளது இளமைக்காலப் புகைப்படத்தை இரகசியமாகத்  தனது அலைபேசியில் பத்திரப்படுத்திக்கொள்கின்றான்.  இருவரது உளவியலையும் குறை , நிறைகளுடன் கதையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் கதாசிரியை. 

வானவில் போலொரு வாலிபம்

சமூக ஊடகம் கதையில் வருகிறது . திருமணமான இளைஞன் ஒருவன் தன் முதற் காதல் அனுபவங்களையெல்லாம் வாட்ஸ் அப் உரையாடலில் முதிய பெண்  ஒருத்தியுடன் பகிர்ந்து கொள்கின்றான். சுவையான விபரிப்பு, அவரும் பதிலுக்குத்  தன் இளமைக்காலத்துக்  'கிற்ஷ்' பற்றி நனவிடை தோய்தலுடன் கதை முடிகின்றது. கதை இன்றுள்ள 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்', 'டிவோர்ஸ்' பற்றியெல்லாம் மேலோட்டமாகக் உரையாடிச் செல்கிறது. சுவையான மொழியில் கதையை விபரிக்கின்றார். பாடல்களைத் துணைக்கழைக்கின்றார். பொருளாதாரம் தீர்மானிக்கும் போலிக் கெளரவம் எவ்விதம் மானுடரின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவற்றுக்கு மத்தியில் மானுட வாழ்க்கையில் முதல் காதல் எவ்விதம் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருகின்றதாக அமைந்து விடுகின்றது. இவற்றை வெளிப்படுத்துமொரு கதையாகவே இதனைக் காண முடிகின்றது. 

இக்கதையின் முக்கிய அம்சம் சமூக ஊடகங்கள் எவ்விதம் மானுடரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதுதான். இவை மட்டும் இல்லாவிட்டால் , இக்கதையில் நடக்கும் உரையாடல்கள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதே. வயது வேறு பாடற்று , முதிய பெண்ணொருத்தியும், இளைஞன் ஒருவனும் எவ்விதம் நண்பர்களாகி, மனம் விட்டு உரையாடுகின்றார்கள்.கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார்கள்.  இதுவோர் ஆரோக்கியமான விளைவாகவே தென்படுகின்றது.

இருக்கிறன்

முதியவரான ஆறுமுகத்தாரை  முதியோர் இல்லமொன்றுக்கு அனுப்பாமல் . அவருக்குத் துணையாகப் பராமரிப்பதற்குத்  தர்மா என்பவரை அவரது மகன் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான்.  அவரது மனைவி கூட் அண்மையில் இருதய வருத்தம் காரணமாக் அவரை விட்டுப் பிரிந்திருந்தாள்.  அவரது உறவினனான , பாலன் என்பவன்  ஒழுங்காக மருந்துகள் எடுக்காமல் ,நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றான்.  அவனைச் சென்று பார்ப்பதற்குப் பல தடவைகள் அவர் தன் மகனிடம்  கேட்டாலும், அவன் செவிமடுப்பதாயில்லை. தன் தங்கள் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைக்குள் சிக்கிப் பம்பரமாகச் சுழன்றோடியபடியிருக்கின்றான். அவர் எவ்வளவுதூரம் அவனது  நல்வாழ்வுக்காக உழைத்திருப்பார். இப்போதோ ஒவ்வொன்றுக்கு கெஞ்ச வேண்டியிருக்கிறதே என்ற கவலையும் அவருக்குண்டு.  பாலன் உயிருடன் இருக்கும்போது தந்தையக் கூட்டிச் செல்லாத மகன் , அவன் இறந்ததும்  உடலைப் பார்க்கக் கூட்டிச் செல்கின்றான். இதுதான் கதையின் முக்கிய சாரம். 

இக்கதை இன்று நிலவும் சமூக, பொருளாதாரச்சூழலில் எவ்விதம் குழ்ந்தைகளின் நல்வாழ்வுக்காக உழைக்கும் முதியவர்கள் வாழ்க்கை, அபிலாசைகள் எல்லாம் அவர்கள்தம் முதுமைப்பருவத்தில் கவனத்திலெடுக்கப்படுவதில்லை என்பதை விமர்சிக்கின்றது. ஒருவிதத்தில் பொருள் நாடிப் பறக்கும் மானுடரின் இக்கால வாழ்க்கையில் எவ்விதம் மனித நேயம், மனித உறவுகள் எல்லாம் சீர்குலைந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும்  கதையாக இக்கதையைக் கவனத்தில் கொள்ளலாம்.

முடிவாக..

ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின்  தன் ஒரு மருத்துவராக, மானுடராகச் சக மானுடர்களை, அம்மானுடரின் வாழ்வை, அவர்தம் நிறை, குறைகளுடன் உளவியலை, சூழலை அவதானிப்பவர்.  அதன் விளைவே இக்கதைகள். வாசகர்களுக்கு உவப்பானதோர் எழுத்து நடையில் , குறை, நிறைகளுடன் கூடிய மானுடர்களை விபரிக்கும் கதைகளூடு, சமூக ஊடகங்கள் போன்ற நவீனத்  தொழில்நுட்பத்தின் ஆரோக்கியமான விளைவுகள், சூழற் பாதுகாப்பின் அவசியம், பொருளாதாரச் சூழலின் தாக்கத்தில் கவனிப்பாரற்று விடப்பட்டிருக்கும் முதியவர் நிலை, ஆணாதிக்கச் சமூதாயத்தில் தொடரும் பெண் எதிர்கொள்ளும் சிரமங்கள், அவர்கள் மீதான் பாலியல் வன்முறை, இன நல்லிணக்கத்தின் அவசியம், குழந்தைத்தொழிலாளர் நிலை எனப் பல்வேறு விடயங்களில்  கவனத்தைத் திருப்பிடும் கதைகள் இவை. இவை  கதாசிரியையின் சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்துபவை.

ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் மானுட அவதானிப்பும், சமுதாயப் பிரக்ஞையும் அவரிடமிருந்து , எதிர்காலத்தில் மேலும் பல நம்பிக்கையூட்டும் படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்பதை எதிர்வு கூறுமொரு தொகுப்பாக இத்தொகுப்பினைக் கூறலாம்.

* புகைப்படம் - வ.ந.கிரிதரன் - டிஜிட்டல் தொழில் நுட்ப மெருகூட்டல் - இரமணிதரன் கந்தையா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.