அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட.    இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல  இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது.  அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர்.  அந்நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் , ஒரு சில மாறுதல்களுடன் ஒளிபரப்பப்பட்டது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். சோக்கல்லோ என்னும் அடைமொழியை இவருக்கு வழங்கிய இந்நாடகத்தை இவரைப்பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் முதலில் பார்க்க வேண்டிய நாடகமாக நிச்சயம் பரிந்துரைக்கலாம்.

சோக்கல்லோ கதம்ப நிகழ்ச்சிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=bczucriNi38

இவரது நாடகங்கள், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள்  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சிச்சேவை ஆகியவற்றில் ஒலி/ஒளிபரப்பாகிப் பெரும் புகழ் ஈட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தயாரிப்பில், நடிப்பில் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத்தின் "எந்தையும் தாயும்", மஹாகவி உருத்திரமூர்த்தியின் "கோடை" நாடகங்கள், கவிராஜன், கண்மணியாள் காதை வில்லுப்பாட்டு  நிகழ்ச்சிகள் முக்கியமானவை.

இவர் தனது இளமைக்காலத்தில்  "கோமதியின் கணவன்" என்னுமொரு நாவலையும் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கட்டுரைத்தொடர்கள் பத்திரிகை, சஞ்சிகைகளில்  வெளியாகியுள்ளன.

தெய்வம் தந்த வீடு , பொன்மணி  ஆகிய இலங்கையில் தயாரிக்கபப்ட்ட  தமிழ்த்திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார் என்பது இவரைப்பற்றி அறிய வேண்டிய  மேலதிகத் தகவல்.

கலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் சோக்கல்லோ சண்முகம் அவர்களின் வாழ்க்கை நிறைவானது. மகிழ்ச்சி தருவது. பலருக்குத் தம் வாழ்வைத் தொடர்வதற்கு முன்மாதிரியானது. வாழ்த்துகள்.