1.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்றுகொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையின்றினை அவனுக்குதிர்த்தான்.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்று கொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையொன்றினை அவனுக்குதிர்த்தான்.

நண்பன்: "ஏ மச்சான். நீயும்தான் செய்யாத வேலையில்லை; முயற்சியில்லை. ஏன் இப்பிடிச் செய்தாலென்ன?"

அவன்: "எப்படி மச்சான்?"

நண்பன்: "ஏதாவது 'கொம்யூனிடி கொலிஜ்'ஜிலை ஒரு 'டெக் கோர்ஸ்' எடுத்துப் பார். அதை வைத்துக்கொண்டு 'ஐசிஎம்' கொம்பனியிலை வேலை எடுக்கலாம்தானே.. "

அவன்: "ஐசிஎம்'மிலை வேலையா! பெரிய கொம்பனியாச்சே"

ஐசிஎம் கொம்பனி சர்வதேசப் புகழ்பெற்ற தகவற் தொழில்நுட்பக் கொம்பனி. 'இன்டர்நாஷனல் கம்யூட்டர் மெஷின்ஸ்' (International Computer Machines) கொம்பனியின் கிளையொன்று அவனது ஸ்கார்பரோவில் இருப்பிடத்திற்கண்மையிலிருந்தது. அவன் பலமுறை நேரடியாகச் சென்று தனது 'ரெசியும்'மை பலதடவைகள் கொடுத்திருக்கின்றான். ஒருமுறையாவது இன்டர்வியூவுக்கு அழைத்ததேயில்லை. அதிலிருந்ந்து அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்: ஐசிஎம்மில் வேலை எடுப்பது மிகவும் சிரமமான காரியம். நிறையக் கனடிய அனுபவம் இருந்தால்தான் அங்கு வேலை எடுக்கலாம்.

இவ்விதமாக ஐசிஎம்மிலை வேலைக்கான இன்டர்வியூ கிடைக்காத ஏமாற்றத்தின் காரணமாக எப்படியாவது அந்த நிறுவனத்தில் ஒருநாளாவது வேலை செய்ய வேண்டுமென்று சங்கற்பம் செய்து கொண்டான். இதற்காக என்ன செய்யலாமென்று மண்டையைப் போட்டுக் குடைந்தும் ஒழுங்கான பதிலொன்றும் கிடைக்காத காரணத்தால் ' எம்பிளாய்மென்ட் சேர்விஸஸ்' வழங்கும் இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றின் 'கவுன்சிலர்' அவனுக்கு வழங்கிய அறிவுரைக்கேற்ப நகரிலிருந்த பிரபலமான 'கொமியூனிட்டி கொலிஜ்'  ஒன்றில் இரு வருட 'டெக்னிசியன் கோர்ஸ்' எடுத்து 'டெக்னியசியனா'க நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைந்தபோது அவனுக்கு உலகப் புகழ்பெற்ற ஐசிஎம்மில் வேலை செய்வதற்கான வாய்ப்பொன்று அவனது கொலிஜ் மூலம் கிடைத்தது.  ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலான வேலைதான். அவனது கொலிஜ்ஜிலிருந்து ஐந்து பேரைத் தேர்வு செய்யவிருந்தார்கள். அவனும் அதற்கு விண்ணப்பித்திருந்தான். அவனையும் அவ்வேலைக்கான இன்டர்வியூவுக்கு அழைத்திருந்தார்கள். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருந்தது. அவனது கனவொன்று நினைவேறப் போகிறதா? இந்த வேலை மட்டும் சர்வதேசப் புகழ்பெற்ற ஐசிஎம்மில் கிடைத்தால்... இந்த எண்ணமே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தந்தது. இன்டர்வியூவுக்குப் போவதற்கு முன்னால் நகரிலுள்ள நூலகக் கிளைகளிலெல்லாம் இன்டர்வியூவில் வெல்வதெப்படி என்பது சம்பந்தமான நூல்களையெல்லாம் தேடியெடுத்துப் படித்துத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். இன்டர்வுயூ நாளும் வந்தது. அவனிடப் பல கேள்விகள் கேட்டார்கள். அவனது பலம் என்ன? பலவீனமென்ன?  அவன் இன்னும் ஐந்து வருடத்தில் எவ்விதமாக இருக்கவேண்டுமென நினைக்கின்றான்? அவனது கடந்த கால வேலை அனுபவத்தில் ஏற்பட்ட சவாலான அனுபவங்களென்ன? அவற்றை அவன் எவ்விதம் சமாளித்தான்? அவனை ஏன் அந்த வேலைக்குத் தேர்வு செய்ய வேண்டும்? இது போன்ற பற்பல கேள்விகள். எல்லாவற்றுக்கும் அவன் படித்த இன்டர்வியூ சமப்ந்தமான நூல்களின் அறிவுரைகளின்படி பதிலளித்தான்.  அவனுக்கு வேலை கிடைத்தது.


2.
அன்று அவன் தனது கனவு வேலையான ஐசிஎம் நிறுவன வேலையை ஆரம்பிக்க இருக்கிறான். அவனது மனம் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தது. முதல் முதலாக ஐசிஎம் போன்ற பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை செய்யவிருக்கின்றான்.  எப்படிப்பட்ட வேலையாகவிருக்கும்? நிச்சயமாக அவனது தொழில்நுட்பக் கல்வித்தகைமைக்கேற்ற வேலையாகத்தானிருக்கும். ஐசிஎம்மில் கம்யூட்டர்களுக்கான 'மதர்போர்ட்'டுகள் , 'மெமரி கார்ட்'டுகள்' 'பவர் சப்ளை'கள் போன்ற பல்வேறு விதமான கம்யூட்டருக்கான பாகங்களைச் செய்கின்றார்கள். இவற்றை உருவாக்குவது சம்பந்தமான வேலைகளிலேதாவதாகவிருக்கும்.

அவனை அறிந்தவர்கள் , அவனது உறவினர்களெல்லாரும் அவனுக்கு ஐசிஎம்மில் வேலை கிடைத்தது பற்றியே பேசிக்கொண்டார்கள். அவன் கெட்டிக்காரனென்று தங்களுக்குள் வேறு பேசிக்கொண்டார்கள்.

இது இவ்விதமிருக்க அவன் தன்னுடைய பணியினை  'கிரேவ் யார்ட் ஷிவ்ட்' என்றழைக்கப்படும் நள்ளிரவுப் பணியாக ஆரம்பிக்கவிருக்கிறான்.. இரவு பதினொரு மணியிலிருந்து காலை ஏழு மணி வரையில் வேலை. அன்றிரவு பத்து மணிக்கு அவனை ஐசிஎம் நிறுவனத்தின் , அவன் வேலை பார்க்கவிருந்த ஸ்ஹார்பரோ கிளைக்கு அழைத்திருந்தார்கள்.  ‘கிரேவ் யார்ட் ஷிவ்ட்'டின் மானேஜரைச் சந்திப்பதாக ஏற்பாடு. ரிஷப்ஷனில் அச்சமயம் பணியிலிருந்த பாதுகாவல் அதிகாரியிடம்  அவன் தன்னை அறிமுகம் செய்தான்; மானேஜரைச் சந்திக்க அழைத்திருந்த விபரங்களைத் தெரிவித்தான். சிறிது நேரத்திலேயே மானேஜர் வந்தார்.

உக்ரேனியாவிலிருந்து இரண்டாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்து கனடா வந்து குடியேறிய தலைமுறையின் இரண்டாவது தலைமுறையினைச் சேர்ந்தவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டவர் அவனை அழைத்துகொண்டு உள்ளே சென்றார். வழக்கமான சம்பிரதாய நடவடிக்கைகள் முடிந்ததும், அவனுக்கு 'ஷேவ்டி சூ'வும் , வெண்ணிறத்திலான 'ஒவரோ'லும் எடுத்துத் தந்தார். அவற்றை அணிந்துகொண்டால்தான் சர்வதேசத் தரத்திற்கமைய விளங்கிய அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க முடியும்.  

'ஷேவ்டி சூ'வையும், 'ஒவரோலை'யூம் அணிந்தபின் அவனை மானேஜர் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

மானேஜர் கூறினார்: 'மதர்போர்ட் தைவானிலிருந்து இங்கு எடுப்பிக்கிறோம். அதற்குப் பல 'பார்ட்ஸ்' போட வேண்டும். சிபியு , 'பட்டரி'கள்,  மேலும் எட்டு 'ஸ்குருஸ்' இவையெல்லாம் போட வேண்டும். 'அசெம்பிளி லைனி'ல் பலர் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வேலை. ஆரம்பத்தில் போர்ட்டைப் பரிசோதிப்பார்கள். எல்லா 'பார்ட்ஸ்'களையும் போட்டதும் மீண்டும் பரிசோதிப்பார்கள். அதன்பின்னர்  'போர்ட்டை'ப் பல்வேறு வகையான 'டெஸ்ட்டு'களுக்கு ஆளாக்குவார்கள். ஃபெயிலாகும் போர்ட்டைப் பல்வேறு வகைகளில் பரிசோதித்துச் சரிபிழைகளைக் கண்டுபிடித்து மீண்டும் அவற்றைப் பயனுள்ளதாக்குவார்கள்.'

இவ்விதமாக மானேஜர் அந்த அசெம்பிளி லைனில் நடைபெறும் வேலைகளைப் பற்றி விபரித்தார். அவற்றைக் கேட்கக் கேட்க அவனுக்கு வியப்பாகவிருந்தது. அவனது மனதில் அச்சமயம் பலவேறு விதமான எண்ணங்கள் எழுந்தோடின. அவனுக்கு எந்த வகையான வேலையினை மானேஜர் தர உத்தேசித்திருக்கிறாரோ? அநேகமாக அவனது கல்வித்தகைமைகளுக்கேற்ற வேலைகளிலேதாவதாகவிருக்கும்? குறிப்பாகப் ஃபெயிலாகும் போர்டுகளைச் சரிபிழை பார்க்கும் வேலையாகவிருக்கலாம். இவ்விதமாக அவனது சிந்தனையோட்டங்களிலிருந்தன.

அதன் பின்னர் மானேஜர் அவனை அந்த அசெம்பிளி லைனில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவனை அவளிடம் அழைத்து வந்தார். அவள் மானேஜரின் உறவுக்காரப் பெண். அவள்தான் அந்த அசெம்பிளி லைனில், பாகங்களை அனைத்தும் பொருத்தப்பட்டு வரும் மதர்போர்ட்டுகளை டெஸ்ட்டுக்கு அனுப்பும் முன்னர் விசுவலாக எல்லாம் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்ப்பவள். மானேஜரின் செல்வாக்கினால் அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருப்பவள். அவளிடம் அவனை ஒப்படைத்த மானேஜர் அவனிடம் அவள் எல்லாம் அவனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விபரமாக விளக்குவாள் என்று கூறிவிட்டுப் பிரிந்தார். அதன் பின்னர்தான் அவனுக்கே அவன் செய்ய வேண்டிய வேலையின் விபரங்கள் புரிந்தன.  அந்தப் பெண்ணே எல்லாவற்றையும் விபரமாக விளக்கினாள். அசெம்பிளி லைனில் பலவேறு செயல்முறைகளுக்கூடாக அவளிடம் வருவதற்கு முன்னர் இறுதியாக ஒரு வேலையிருந்தது. அது: அந்த மதர்போர்ட்டிற்கு எட்டு ஸ்குரூஸ் இட வேண்டும். அதற்கென்றொரு 'எலக்ட்ரோனிக் ஆர்ம்' இருந்தது. அதைக்கொண்டு அந்த எட்டு ஸ்குரூஸ் இட வேண்டும். இதுதான் வேலை. எந்தவிதத் தொழில்நுட்பக் கல்வியும் கற்காத அந்த மானேஜரின் உறவுக்காரப் பெண் மதர்போர்ட்டுகளின் தரத்தை விசுவலாக மதிப்பிடும் பணியினைச் செய்கின்றாள். இது போன்ற பலர் , எந்த விதத் தொழில் நுட்பத் தகைமைகளுமில்லாத பலர் 'டெஸ்டிங்', 'ட்ரபுள்ஸூட்டிங்' போன்ற பணிகளை சிறிதுகால 'ட்ரெயினிங்'கிற்குப் பின் செய்கின்றார்கள். மூன்றாம் உலகத்துப் பட்டதாரிகளிலொருவனான அவன்,  தொழில் நுட்பத்தில் கனேடியக் கல்வித்தகைமையைப் பெறுவதற்காக இருவருடங்கள் கடுமையாகக்  கற்றுத் தேர்ந்து, அதிதிறமைச் சித்திகள் பெற்று சர்வதேசத தகவற் தொழில்நுட்ப நிறுவனமான 'ஐசிஎம்'மில் 'கிரேவ் யார்ட் ஷிவ்ட்'டான நள்ளிரவுப் பணியில் சேர்திருக்கின்றான். 

வேலை: மதர்போர்ட்டிற்கு எட்டு ஸ்குரூஸ் இடுவது.

3.

கடந்த ஒரு வருடமாக அவன் ஐசிஎம்மில் நள்ளிரவுப் பணியிலிருக்கின்றான். யாராவது கேட்டால் உள்ளூரச் சிரித்துக்கொண்டே ஆனால் வெளியில் பெருமிதமாக 'ஐசிஎம்'மில் வேலை செய்வதாகப் பதிலிறுக்கின்றான். அவனது கடுமையான உழைப்பினைப் பார்த்துவிட்டு மானேஜர் அடிக்கடி கூறுவார்: 'நீ நல்லா ஸ்கூரூஸ் இடுகிறாய்'

அவ்விதமான சமயங்களில் அவன் சிரித்தபடியே "யேஸ், ஐ ஆம் ஸ்குரூயிங் ஐசிஎம் இன் நைற்ஸ்' என்று வேடிக்கையாகப் பதிலிறுப்பான்.

'ஐசிஎம்'மின் மிகவும் வேகமான நள்ளிரவுத் தொழிலாளர்களிலொருவனான அவனின் அந்தப் பதிலில் தொக்கிநிற்கும் இரட்டை அர்த்தங்களை இரசித்தவாறு மானேஜருட்பட அருகிலுள்ள பணியாளர்களும் சிரிக்கின்றார்கள்.

'கூர் 2012' கலை இலக்கிய ம்லருக்காக எழுதப்பட்ட சிறுகதை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.