எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன.  அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதைச்  போதமும் காணாத போதம் 07,  என் கவனத்தை ஈர்த்தது.  அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக்  கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.

-  சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது.

“நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார்.

“அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன்.

சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார்.

வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன.  சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு  என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின.

துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான்.

புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. -


இப்பகுதியை வாசித்தபோது எனக்கு என் நாவலான 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' பகுதியின் இறுதிப் பகுதி நினைவுக்கு வந்தது. சிறுவன் என்பவன் தானிருந்த  அமைப்புக்குத் தன் நண்பன் ஒருவனைச் சேர்க்கின்றான். அவனை அவனது இயக்கமே ஒரு கட்டத்தில் கொன்று விடுகின்றது. சிறுவன் தற்போது கனடாவில் வசிக்கின்றான். கொல்லப்பட்ட அவனது நண்பனின் தம்பியும் அண்ணன் கொல்லப்படக் காரணமாகவிருந்த சிறுவனைக் கொன்று பழி தீர்ப்பதற்காகக்  காத்திருக்கின்றான். இறுதியில் சிறுவனைக்கொல்ல பிஸ்டலுடன் கொல்லப்பட்டவனின் தம்பி வருகின்றான். அவனிடமிருந்து பிஸ்டலைத் திறமையாகப் பறித்தெடுத்த சிறுவன் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்துவிட்டு பிஸ்டலைக்கொடுத்து  நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறுகின்றான்.

அகர முதல்வனின் கதையில் தன் தந்தையைக் கொன்றவனைப் பழி வாங்க இயக்கத்தில் சேர்ந்தவனிடம் கொன்றவன் பிஸ்டலைக் கொடுத்து சுடு என்கின்றான்.

எனது கதை தொண்ணூறுகளில் தாயகம்(கனடா)இல்  வெளியானபோது அகரமுதல்வன் பிறந்திருக்க மாட்டார். அல்லது தவழும் பருவத்திலிருந்திருப்பார்.  ஆனால் என் நாவல் வெளியாகிச் சுமார் முப்பது வருடங்கள் கடந்து அகரமுதல்வனின் கதை வெளியாகியுள்ளது. இரண்டுக்குமிடையிலிருக்கும் ஒற்றுமை ஆச்சரியத்தைத் தந்தது. சில வேளைகளில் இவ்விதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரே மாதிரி ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே சிந்திப்பதுண்டு என்பதற்கு இவ்வொற்றுமை ஓர் உதாரணம்.

இப்பொழுது என் நாவலின் இறுதி அத்தியாயத்தை முழுமையாக வாசித்துப் பார்க்கவும். கிழே தந்திருக்கின்றேன்.

முழுமையாக வாசிக்க - https://vngiritharan230.blogspot.com/2024/03/blog-post_15.html#more