இன்று டிசம்பர் 1 எழுத்தாளர் இன்குலாப் (எஸ். கே. எஸ். சாகுல் அமீது)  அவர்களின் நினைவு தினம். அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான  'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

'சமயம் கடந்து மானுடம் கூடும்,
சுவரில்லாத சமவெளி தோறும்,
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்;
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்'

என்று பாடிய மக்கள் கவிஞன்.  அவன் தன் மானுட நேயம் மிக்க எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

இத்தருணத்தில் தனக்குத் தமிழக அரசினால் அளிக்கப்பட்ட கலைமாமணி விருதினை ஈழத்தமிழர்களைக் காக்க அரசு தவறி விட்டதெனக்கூறி அவர் திருப்பி அனுப்பியதை நினைவு கூர்கின்றேன்.

அதே சமயம் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர் அழியக் காரணமாகவிருந்த மகிந்த  அரசு , யுத்தம் முடிந்த சூடு தணிவதற்குள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், போர்க்குற்றங்களுக்கான சுயாதீனமான விசாரணை நடத்தாத நிலையில் வழங்கிய இலக்கிய விருதுகளையெல்லாம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலர் பவ்வியமாக நின்று வாங்கிய ஊடகக்  காட்சிகளையும் நினைவு கூர்ந்துகொள்கின்றேன்.

இன்குலாப் அவர்கள் 1965இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பற்றி காவற் துறையினரின் தடியடி உதைகளுக்குள்ளாகிச் சிறை சென்று மீண்டதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.

ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராகத் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த இன்குலாப் 1968இல் தமிழகத்திலுள்ள கீழ்வெண்மணியில் 47 தலித் மக்கள் படுகொலைசெய்யப்பட்டதன் பாதிப்பால் மார்க்சியபோராளியாக உருவெடுத்தார்.  மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திச் செயற்பட்ட இன்குலாப் அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கியவர்.

இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "இன்குலாப் என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்."

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.