இன்றுதான் இலங்கைத்தீவு  
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த்தீவானது.
இந்து சமுத்திரத்தின் சொர்க்கம்
இன்றுதான்
இந்து சமுத்திரத்தின் நரகமானது.
இலங்கைத் தீவின் இருண்ட யுகம் உதித்த நாளும்
இன்றுதான்.
இலங்கைத் தமிழர்தம்
இரத்தம் குடிக்கப்பட்ட நாள்.
இப்பாரின் திக்குகளெங்கும் அவரைப் பேர்
இடரால்  பெருமளவில் அகதிகளாக
இடம் பெயர வைத்தநாள்!

இன்னும் அந்தச் சில தின நினைவுகள்
இன்று நடந்ததுபோல் எம்
இதயத்தில் இருக்கின்றன.
இலங்கைத் தமிழர்தம்
அமைதிப்போரின்
அடுத்த கட்டமான
ஆயுதப்போர் பற்றியெரிய
அகில உலக, உபகண்ட பிரச்னையாக
அவதாரமெடுக்க வைத்த நாள்.
இதற்கெல்லாம் காரணம்
இவன். ஆனால்
இவனைப்பற்றி
அரசியல் அமைப்புகளோ,
ஆயுத அமைப்புகளோ
அரசியல் ஆய்வாளர்களோ
அதிகமாக விமர்சித்ததாக நான்
அவதானித்ததில்லை. நீங்கள்
அவதானித்துள்ளீர்களா?
அது ஏன் என்று நான்
அடிக்கடி சிந்திப்பதுண்டு.
அதில்தான் இருக்கிறதிவனின்
அரசியல் இராஜதந்திரம்.
அரவணைத்துத் தம் எதிரிகளை
அணுகுபவன் இவன்.
அவசியமேற்பட்டால் இவன்
அடிபணியவும் தவறுவதில்லை.
அதற்கு முக்கிய காரணம்
அக, புற அரசியல் நிலைமைகளை
அணுகி, ஆராய்ந்து
அடுத்த கட்டத்துக்குத் தன் திட்டங்களை
எடுத்துச் செல்வதற்குத்தானே தவிர பிற
எதுவுமில்லை.
முகத்தில் குத்துவதுபோல்
முன் நிற்கும் எதிரியில் வயிற்றில் குத்துபவனென்று
அடிக்கடி தன்னைப்பற்றி பெருமைப்பட்டவன்.
அதனால்தான் அரசியலில் இவன் ஒரு குள்ள நரி.
இனவாதப்பாம்பை
இலங்கைத்தீவில்
ஆடவிட்டு வேடிக்கை பார்த்த
அரவப் பிடாரன் இவன்.

இவன் ஆட்சியில்
இரு தடவைகள் மிகப்பெரும்
இனக்கலவரங்கள் நிகழ்ந்தன.
பிரதமராகப் பதவிக்கு வந்தவுடனொன்று.
பின்னர் ஜனாதிபதியாக வந்தவுடன் மற்றொன்று.
பிரசித்தி பெற்ற தமிழர்தம் யாழ் நூலகத்தைப்
பற்றி எரிய வைத்தவர் இவர் கீழிருந்த அமைச்சர்கள்.
இனத்தீயால் இலங்கை
இரண்டாவது தடவை பற்றியெரிந்தபோது
இவனது இனவாத அமைச்சர்களே
இனவாதக் குண்டர்களைக் களத்தில்
இறக்கி முன்னின்று நடத்தினர்.
இடர் விளைவித்தனர்.
இரத்த ஆற்றை
இலங்கை எங்கும் ஓட விட்டனர்.
இனவாதச் சட்டமான பயங்கரவாதச் சட்டத்தை
இவனே நாட்டில் சட்டமாக்கியவன்.
இன்றுவரை அதனை நீக்க முடியவில்லை.

இன்று கறுப்பு ஜூலையின் தொடக்க நாள்.
இவனை நினைக்காமல்
இருண்ட அத்தினத்தை
இன்றும் நினைக்க  முடிந்ததில்லை.
இளைஞனாக இவன் இருந்தபோது
இலங்கையில்
இவன்  கண்டி பாதயாத்திரை நடத்தாமல்
இருந்திருந்தால்
இலங்கையில் ஒரு வேளை அமைதி
இருந்திருக்கக் கூடும்.
போரா? அமைதியா? என்றிவன்
போர்ப்பிரகடனம் செய்யாதிருந்தால்
இவன் ஆட்சியின் முதற் கலவரத்தை
இவனால் முளையில் கிள்ளியெறிந்திருக்க முடியும்.
இரண்டாம் கலவரத்தையும்
இனவாத அரவத்தின் நச்சினை
இவன் கக்காமல் வைத்திருந்தால்
இல்லாமல்  செய்திருக்க  முடியும். ஆனால்
இனவாதப் பாம்புப் பிடாரன் இவன்,
இனவாதப் பாம்பை
ஆடவிட்டான். இலங்கையெங்கும்
அதன் விடத்தைக் கக்க வைத்தான்.

இவன் மட்டும் ஆட்சியில் , அரசியலில்
இல்லாதிருந்தால்
இலங்கையின் வரலாறு எப்படியிருந்திருக்கும்?
இதயத்தில்  எண்ணிப்பார்க்கின்றேன்.
இவன் யார்? யார் இவன்?
இந்நேரம் இவன் யாரென்பதை உணர்ந்திருப்பீர்கள்.
இவன் ஆர்? ஜே .ஆர்!