அமரர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு  ஈழத்தமிழ் இலக்கிய உலகில்  சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்குத் தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம்.  தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக் கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.

அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.  மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு,  அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.

கலை, இலக்கியம் மற்றும் சமூக, அரசியல் பற்றி ஆக்கங்களைப்பிரசுரித்தார். பிறமொழி ஆக்கங்களைத்தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.  இதுவரை வெளிவந்த மல்லிகை சஞ்சிகைகளை வாசிப்பதன் மூலம் ஈழத்தின் முற்போக்குத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றின் குறுக்கு வெட்டினை ஒருவர் அறிந்துகொள்ள முடியும். மல்லிகை சஞ்சிகை ஆற்றிய முக்கிய சேவைகளிலொன்றாக இதனைக்குறிப்பிட முடியும்.

டொமினிக் ஜீவா அவர்களைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகம் வருபவை எழுபதுகளில் அவரைக்கண்ட நினைவுகள்தாம். மாணவனாக யாழ் நகரில் சைக்கிளில் நண்பர்களுடன் அலைந்துகொண்டிருந்த காலகட்டம். யாழ் பஸ் நிலையத்தில் அமைந்திருந்த பூபாலசிங்கம் புத்தகசாலையில் சஞ்சிகைகள்,  பத்திரிகைகள் வாங்குவதற்காகச் செல்லும்போது 'நாஷனலும்',  வேட்டியுமாக அவரைப்பார்த்திருக்கின்றேன். ராஜா திரையரங்கிற்கருகாகச்செல்லும் ஒழுங்கை வழியாகச் செல்கையில், அங்கிருந்த மல்லிகை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்திருக்கின்றேன். அவரது விடாமுயற்சியும், எழுத்தை ஆயுதமாகக்கொண்டு அவர் நடாத்திவந்த  போராட்டமும் அன்று மட்டுமல்ல இன்றும் என்னைக்கவர்ந்த விடயங்கள். என்பேன்.

'மல்லிகை' டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல் போன்ற எழுத்தாளர்கள் வர்ணப்பிரச்சினையின் தீர்வை வர்க்க விடுதலையூடு அடையலாம் என்று நம்பியவர்கள். மார்க்சியத் தத்துவத்தைத் தெளிவாக அறிந்து, உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்கள். இறுதிவரையில் இவ்விடயத்தில் தளராது உறுதியுடன் நின்றவர்கள்; இயங்கியவர்கள். அதனால் எனக்கு இவர்கள்மேல் பெரு மதிப்புண்டு.