தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.

இவரது எழுத்துகள் எழுபதுகளில், எண்பதுகளில் தமிழக வெகுடன இதழ்களை ஆக்கிரமித்திருந்தன. இவரது எழுத்து நடை அதுவரை எழுதி வந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்து நடையிலிருந்து சிறிது வேறுபட்டது. ஆண், பெண்ணுக்கிடையிலான  உறவினை, அன்பினை, அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் எழுத்து. 'இந்தும்மா' போன்ற அன்பொழுக இவரது நாயகர்கள் தம் இதயங்க கவர்ந்த காதலிகள், மனைவிகளை அதிகம் அழைப்பதை இவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அதன் பாதிப்பை இந்துமதி போன்ற எழுத்தாளர்களிடம் காணலாம். அதிகமாகத் தமிங்கிலிஸ் பிரயோகங்களை இவரது எழுத்தில் காணலாம்.

இவரது நாவல்கள் பல தமிழ்த்திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவரது நாவல்களை அதிகம் வாசிக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கின்றேன். 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை , நண்டு போன்ற இவரது கதைகளின் திரைப்பட வடிவங்களைப் பார்த்திருக்கின்றேன்.

என் பால்யப் பருவத்தில் விகடனில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான சிறு நாவல் 'எதற்காக?'

அந்நாவல் தொடராக வெளியானபோது வாசித்துள்ளேன். என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் அந்நாவலும் ஒன்று.  அதன் கரு   வாசிப்பவர் மனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அது என்னை ஏன் பாதித்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.  இந்த மானுட இருப்பு பற்றிய  தேடல் எனக்கு எப்போதுமுண்டு. ஏன் எதற்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் படைக்கப்பட்டுள்ளன?  எதற்காக எதிர்பாராத விளைவுகள் உயிர்களின் இருப்பில் ஏற்படுகின்றன? இவரது 'எதற்காக' என்னும் நாவலும் இப்பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளதால்தான் முதல் வாசிப்பிலிருந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. காதல் மிகுந்த , ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொட்டி வாழ்ந்து வரும் தம்பதிக்குக்  குழந்தை பிறக்கின்றது. இன்பத்தில் வளம் , நலத்துடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் அந்தப்பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில் மின்  ஒழுக்கினால் தீண்டப்பட்டு கருகி இறந்து விடுகின்றாள். எதற்காக இப்படி நடக்கின்றது என்று  கேட்கும் நாவலாசிரியை கடவுளிடமும் அதே கேள்வியைக் கேட்கின்றார் 'எதற்காக?'  வாசிக்கும் ஓவ்வொருவரும் கேட்கும் கேள்வி 'எதற்காக?'  

நாவல் முழுவதும் தம்பதியினரின் அன்பை விரிவாக விபரித்து விட்டு இறுதியில் இவ்விதமானதொரு முடிவைக் கதாசிரியைப் போட்டு விடுகையில் வாசகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகவிருக்கும். அந்த அதிர்ச்சியே இச்சிறுநாவலை முதல் வாசிப்பிலேயே மறக்க முடியாததாகச் செய்து விடுகின்றது.

அவரது  'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தொகுப்புகள் அவரது  காத்திரமான இலக்கியப்பங்களிப்பு. பலவேறு இந்திய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு.  இவரது சொந்த  முயற்சியில் உருவான தொகுப்புகள் இவை. சக இந்தியர்களைத் தமிழர்களும் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள உதவும் ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் தொகுப்புகள்.

இவர் இவ்வளவு தூரம் பயணித்து விழாவுக்கு வருவாரென்று நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் எண்பத்தியொரு வயதிலும் இன்னும் தேக ஆரோக்கியத்துடன் இருக்கின்றார். விழாவில் தன் தொகுப்புகளைப் பற்றி நல்லதொரு உரையினையும் ஆற்றியிருந்தார்.

இவர் எழுதிய முதல் சிறுகதை மே 12 1968 கல்கி இதழில் வெளியானது. சிவசங்கரி சந்திரசேகரன் என்னும் பெயரில் எழுதியிருந்தார். கதையின் தலைப்பு - 'அவர்கள் பேசட்டும்'  நல்லதொரு கதை. குழந்த இல்லாத பெண் ஒருத்திக்குப் பிராமண சமூகத்தில் ஏற்படும் அனுபவங்களை, உணர்வுகளை விபரிக்கும் கதை.

விழாவில் என் பால்ய காலத்தில்  ஈர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதால்  இவருடன் ஒரு சில நிமிடங்களாவது பேச வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.  ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. என் கடைசித்தங்கை தேவகி இவரது தீவிர வாசகி. விழா பற்றிக் கேட்கையில் என்னிடம் கேட்ட முதல் கேள்வி 'சிவசங்கரியைச் சந்தித்தாயா?' 'சந்திக்கவில்லை'யென்றேன். அவளுக்குப் பெரிய ஏமாற்றம். நான் கூறினேன் 'சந்திக்காவிட்டாலும் அருகிலிருந்து அவர் உரையாற்றுவதைப் பார்த்தேன்.'