ஜூன் 1 1981 என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று.  தமிழர்களின் சர்வதேசப் புகழ்பெற்ற அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது சன நூல் நிலையம் எரிக்கப்பட்ட நாள். மனித நாகரிகத்தின் கறை படிந்த நாட்களில் ஒன்று.  தனிப்பட்டரீதியில் என் பால்ய பருவத்தில் நண்பனாக, ஆசிரியனாக விளங்கிய நிறவனம் அது. நான் செல்லும் அறிவாலயங்களில் ஒன்று.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக அன்றிருந்த த(ம்)ர்மிஷ்ட்டரின் அரசின் தூண்களாக விளங்கிய இனவெறி பிடித்த அமைச்சர்கள் சிலரின் தலைமையில் ,ஏவல் நாய்களாகப் படையினர் பாவிக்கப்பட்டு யாழ் நகர் எரிக்கப்பட்டது. யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் ,பூபாலசிங்கம் புத்தகக்கடையுட்பட, எரிக்கப்பட்டன. யாழ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.

இத்தருணத்தில் யாழ் பொது சன நூலகத்தில் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். யாழ் ஈழநாடு பத்திரிகை தனது மாணவர் மலரில் , வாரமலரில் எனது மாணவ, இளம் பருவத்து எழுத்துகளைப் பிரசுரித்து ஊக்குவித்ததை எண்ணிப் பார்க்கின்றேன்.

யாழ் நூலக எரிப்பு தமிழர்கள் உள்ளங்களில் ஏற்படுத்திய காயம் ஆறாதது. ஏனென்றால் அப்போது நடந்த வன்முறையில் அரிய வரலாற்று நூல்கள், ஓலைச்சுவடிகளையெல்லாம் நாமிழந்தோம். அவை திரும்பக் கிடைக்கப்போவதில்லை. தாவீது அடிகள் நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமான சம்பவமும் நடந்தது.

நூலகரும், வாழ்க்கைச் சரித நூலாசிரியருமான எச்.ஏ.ஐ.குணதிலக்க (H.A.I Goonetileke) யாழ் நூலக எரிப்பு பற்றிக் கூறுகையில்  அது ஒரு காட்டுமிராண்டித்தனமான , மிருகத்தனமான இனவெறுப்பின் சாட்சி என்றார்.  நூலகம் எரிக்கப்பட்டு இருபது வருடங்களுக்குப்பின் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெய்லி நியூஸ்  தனது ஆசிரியத் தலையங்கத்தில் அன்றிலிருந்த ஆட்சி குண்டர்களைப் பாவித்து  நூலகத்தை எரித்ததாகக் குற்றஞ்சாட்டியது.  பின்னாளில் இலங்கை ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாச பகிரங்கமாகவே  அப்போது அமைச்சர்களாகவிருந்த காமினி திசாநாயக்க, லலித அத்துலத் முதலி ஆகியோரே நூலகத்தை எரித்ததாகக் குற்றஞ்சாட்டினார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2016இல் தனது கட்சி ஆட்சியிலிருந்தபோது எரிக்கப்பட்ட யாழ் பொது சன நூலக அழிப்புக்காக வருத்தம் தெரிவித்தார்.

இன்று எரிக்கப்பட்ட யாழ்பொது சன நூலகம் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு தலை நிமிர்ந்து நிற்கின்றது. இலங்கை ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தில் இனங்களுக்கிடையிலான 'சுது நெலும்' குழுவின் மூலம் 700 மில்லியன் ரூபா செலவில் மீண்டும் புனருத்தாரணம் செய்தார். 2001இல் புனருத்தாரணம் செய்யப்பட்ட நூலகம் 2003இல் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் நிலவிய யுத்த நிறுத்தக் காலகட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. 'நூலக புனருத்தாரணமானது தெற்கு மக்களின் வடக்கு மக்களுக்கான நட்பின் குறியீடும், அரசியல் தவறுகள் மீதான கண்டனமுமாகு'மென்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை யாழ் நூலக எரிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்கச் சுயாதீனமான விசாரணைக்குழு எதனையும் இலங்கை அரசுகள் வைக்கவில்லை என்பதும், குற்றவாளிகள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்சூழலைத்தாண்டி நாம் வந்துள்ளோம். பல அழிவுகளை, துயர்களைத்தாண்டி நாம் வந்துள்ளோம். நடந்த , கடந்த கால அநீதிகளுக்கெதிராகச் சுயாதீன விசாரணகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியது இலங்கை மக்கள் அனைவருக்குமிடையிலான நல்லெண்ணப் புரிந்துணர்வுக்கு அவசியம்.  இரண்டாம் உலக யுத்தத்தில் மனிதப் படுகொலைகள் புரிந்த நாசிக் கட்சியினர் இன்றும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார்கள் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். இவ்விதமான தொண்ணூறு வயதுகளில் பல்வேறு பெயர்களில் புது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பலர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் மீண்டுமொரு போர்ச்சூழல் ஏற்படாமல் நாடு ஆரோக்கியமான எதிர்காலத்துக்குள் நுழைவதற்கு நடந்த யுத்தக் குற்றங்களுக்கானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம்.

உசாத்துணைச் சான்றுகள்:

1. https://www.aa.com.tr/en/world/burnt-rebuilt-jaffna-library-reminds-of-sri-lanka-conflict/153795

2. https://www.upi.com/Archives/1996/06/22/Sri-Lankans-to-rebuild-Jaffna-library/5196835416000/
3. https://en.wikipedia.org/wiki/Burning_of_Jaffna_Public_Library