சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில்  வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'  (2019) நூலில் இடம் பெற்றுள்ள எனது கவிதை 'நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'.  இக்கவிதை எது பற்றிப் பேசுகிறது, இக்கவிதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதைக் கூறினால் அது உங்களது சுதந்திரமான புரிதலுக்குத் தடையாக இருக்குமென்பதால் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கின்றேன்.  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்  கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன்.   தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் இறுதியிலுள்ளன.

கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!  - வ.ந.கிரிதரன் -

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவொளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.
எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்து விடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவம்
உண்டு; புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம், வலம், மேல், கீழ்
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒரு திசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?

இரவி, இச் சுடர் இவையெல்லாம்
ஓய்வாயிருத்தலுண்டோ?
பின்
நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறைதான்
உள்ளிருந்து
எள்ளி
நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ போடும் புதிர்களுக்கு
விளக்கம்
காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.
வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?


முகநூல் கருத்துகள் சில:

மாலன் நாராயணன்
இந் நூலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

Raju Kauthaman Raju Kauthaman
புகலிடத்தின் அனைத்து நாடுகளிலும், கவிஞர்கள் உள்ளனர். பல கவிஞர்கள் இந்தத் தொகுப்பில் இல்லை. கவிதை மீதான ஓர் போலித்தொகுப்பே இது.

VN Giritharan
Raju Kauthaman Raju Kauthaman தொகுப்புகள் எல்லாவற்றுக்கும் இக்கூற்று பொருந்தும். ஆனால் போலித் தொகுப்புகள் அல்ல. போலித் தொகுப்புகள் என்பதற்கு நீங்கள் தொகுப்பினை வாசித்திருக்க வேண்டும். ஏன் போலித் தொகுப்பு என்பதற்கான காரணங்களை முன் வைக்க வேண்டும். மேலுள்ள தொகுப்பினை வாசித்தீர்களா? வாசித்திருந்தால் தொகுப்புக் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலுள்ள கவிதை பற்றிய உங்கள் புரிதலையும் இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

J P Josephine Baba
சிறப்பு.

Arni Narendran
A Global Collective ?


Selvaranjany Subramaniam
அருமையான கவிதை. 'பிரபஞ்ச ரகசியம்' என்பது கவிதையின் உள் கிடக்கையாக இருக்கலாம் என உணர்கிறேன். இரவு வானினை சலிப்பில்லாது உற்று நோக்கி பிரபஞ்சத்தின் ரகசியங்களைப் புரிந்து கொள்ள முயலுதலான உங்கள் உணர்வுகளை பலதடவைகள் வாசத்துள்ளேன். அதனால் இந்த எண்ணம். வாழ்த்துகள்.

VN Giritharan
Selvaranjany Subramaniam ஓரளவுக்கு நெருங்கி வந்து விட்டிருக்கின்றீர்கள். ஆனால் இக்கவிதை இருப்புடன் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான ஒரு விடயம் பற்றிப் பேசுகிறது. கவிதை வரிகளில் அதற்கான விடை இருக்கின்றது. அவ்வரிகளில் விடை நேரடியாக இருக்காவிடினும், சிறிது சிந்தித்தால் புரிந்து விடும். உங்கள் கருத்துக்கு நன்றி.

Selvaranjany Subramaniam
VN Giritharan மனம்?
இதற்கு மேல் தெரியவில்லை.
??

VN Giritharan
Selvaranjany Subramaniam  "ஓரெல்லையினை ஒளிச்சுடருனக்குத் தந்து விடும் பொருளறிந்த",

 "வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?",

"இடம், வலம், மேல், கீழ்
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒரு திசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?"

இவ்வரிகளில் இக்கவிதை கூறும் பொருளுள்ளது. இதற்குமேல் உதவுவதற்கில்லை. ? ஏனையவர்களும் சிந்திக்கட்டும். மேலும் எழுதியவன் சிந்திப்பது மாதிரி வாசிப்பவர்களும் சிந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் வேறு பொருளறிந்தும் சிந்தித்துக் கவிதையில் களிப்புறலாம். நீங்கள் மனம், பிரபஞ்ச இரகசியம் என்று சிந்தித்ததும் அவ்வகையில் அடங்கும். இவ்விதம் சிந்திப்பும் வேறுபடுவதனால்தான் பழந்தமிழ் இலக்கியங்களுக்குப் பல பொழிப்புரைகள் உள்ளன. நானே என் கருத்தைக் கூறுவதன் மூலம் அதற்கு இடைஞ்சல் விளைவிக்க விரும்பவில்லை.


நூல்: 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'  (2019) 

பதிப்பகம் - சாகித்திய அகாதெமி.  சென்னை முகவரி - குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018.   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  044-24311741 | 24354815.

இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அமெரிக்கா:
1. கோகுலக் கண்ணன் - அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை
2. பெருந்தேவி - உடைமை
3. வேதம் புதிது கண்ணன் - வீடுபேறு, மணம்
4. கவிநயா - கைப்பைக் கனவுகள்

ஆஸ்திரேலியா:
1. ஆழியாள் - உப்பு, குமாரத்தி

இங்கிலாந்து:
1. நா.சபேசன் - நான் காத்திருக்கிறேன்
2. தவ சஜிதரன் - படர்க்கை
3. நவஜோதி ஜோகரட்னம் - சதா மெளனம், வயது வந்தாலென்ன

இலங்கை:
1. நுஃமான் - பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு
2. அனார் - இரண்டு பெண்கள்
3. சோலைக்கிளி - எலி
4. தீபச்செல்வன் - ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
5. எம்.ரிஷான் ஷெரீப் - ஆட்டுக்குட்டிகளின் தேவதை
6. அபார் - தாள் கப்பல்

ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி
1. செல்வராஜன் ஜெகதீசன் - சில
2. முபாரக் முகமது - காதற் கடிதம்

ஐக்கிய அரபு அமீரகம் - கத்தார்
1. கென்னடி - மீன்

ஐக்கிய அரபு அமீரகம் - துபை
1. அய்யனார் - சிலிர்ப்பு, முப்பத்தைந்து டிகிரி விடியல்
2. அன்பாதவன் - மாற்றம், அமைப்பு
3. நாகப்பன் - ஆரஞ்சு மிட்டாய்
4. ஜெஸிலா பானு - குறையேதுமில்லை, விடியல்

ஐக்கிய அரபு அமீரகம் - ஷார்ஜா
1. சென்ஷி - இலையுதிர் காட்டு மரங்கள்

கனடா:
1. சேரன் - மழைக் காலமும் கூலிப்பெண்களும், மழைநாள்
2. கீதா சுகுமாரன் - உரையாடல்
3. வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் காலம்