பேராசிரியர் பசுபதி அவர்களை நான் ஒருபோதும் நேரில்  சந்தித்ததில்லை. ஆனால் அவர் என் முகநூல் நண்பர்களிலொருவர். அவ்வப்போது என் பதிவுகளுக்கும் வந்து கருத்துகளை, தகவல்களைத் தெரிவிப்பார். நானும் அவரது வலைப்பதிவான , 'பார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள்'  என்னும் தாரக  மந்திரத்துடன் வெளியாகும் 'பதிபசுகள்' தளத்தை அவ்வப்போது மேய்வதுண்டு. அவற்றிலிருந்து எனக்குப் பிடித்த  இலக்கிய ஆளுமைகள்,  அவர்கள்தம் படைப்புகள் பற்றிய விபரங்களை என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அண்மையில் கூட எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' ஓவியங்கள் சிலவற்றை  , சுதேசமித்திரனில் வெளியானவை,  கீழுள்ளவாறு பகிர்ந்திருக்கின்றேன்.

- தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவலான 'மோகமுள்'  'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அத்தொடரில் வெளியான ஓவியங்கள் சிலவற்றைப் பேராசிரியர் பசுபதி அவர்கள் தனது வலைப்பதிவான 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் பதிவுசெய்துள்ளார். அவற்றை இங்கு நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.  'பசுபதிவுகள' வலைப்பதிவு - https://s-pasupathy.blogspot.com -

பேராசிரியர் பசுபதி அவர்கள் சங்கக்கவிதைகளை முன்வைத்து 'சங்கச்சுரங்கம்' தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். 'கவிதை இயற்றிக் கலக்கு' என்னும் கவிதை இலக்கணம் நூலொன்றினையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் பசுபதியின் மறைவு எதிர்பாராதது. பெப்ருவரி 10 அன்றும்  முகநூல் பதிவுகள் பலவற்றை இட்டிருக்கின்றார்.  அன்று இருந்தார். இன்று இல்லர் என்பதை ஏற்க உள்ளம் மறுக்கின்றது. இருப்பு எவ்வளவு நிலையற்றது என்பதை அவரது மறைவுச் செய்தி மீண்டுமொரு தடவை உணர்த்துகின்றது. அவரது இழப்பால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

ஒரு முறை 'அறிவொளி சஞ்சிகையின் 1967 தை மாத இதழில் வெளியான இ.பத்மநாபன் (இ.பத்மநாப ஐயர்) எழுதிய 'இராமன் விளைவு' என்னும் அறிவியற்  கட்டுரையின்  பக்கங்கள் இவை. வாசித்துப் பாருங்கள் நல்லதொரு கட்டுரைஎன் முன்னைய பதிவில் தமிழில் வேறு யாராவது 'ராமன் விளைவு' பற்றி எழுதியுள்ளார்களா'  என்று  கேட்டிருந்தேன். அதற்குப் பேராசிரியர் எஸ்.பசுபதி   அவர்கள் 'ஆர்.கே.விஸ்வநாதன் என்பவர்  அவருடைய கண்டுபிடிப்பைப் பற்றிப் “பாரதமணி” இதழில் கட்டுரையொன்று எழுதியுள்ள விபரத்தைத்தந்துள்ளார். அது வெளியான ஆண்டு 1938' என்று பதிலிறுத்திருந்தார். அதனை நன்றியுடன்  என் முகநூற் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்னுமொரு தடவை அவர் முகநூல் பற்றியொரு  சுவிவையான , தன் அனுபவம் தோய்ந்த கவிதையினைத்  தன் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை நானும் பகிர்ந்திருந்தேன். மீண்டுமொரு தடவை அவர் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

பேராசிரியர் பசுபதியின் முகநூல் பற்றிய கவிதை!

காலை முகநூல் பார்ப்பேன்
. . கண்வி ழித்த வுடனே !
வேலைப் பளுவின் இடையே
. . விரைந்து முகநூல் நுழைவேன்
 மாலை இரவென் றாலோ
 . . மணிக்க ணக்கில் மேய்வேன்!
கால அருமை இன்றிக்
. . கணினி உலகில் அலைவேன்.! (1)

ஞானம் எனக்கு முகநூல்;
 . . ஞாலம் எனக்கு முகநூல்;
பானம் பருகும் போதும்
. . பார்வை முகநூல் மேலே!
கானம் கேட்கும் சபையில்
. . கைகள் கணினி மீது!
மானம் விட்டுச் சொல்வேன்,
 . . நானோர் முகநூல் அடிமை! (2)

வையப் போர்கள் தொடங்கி
. . வையும் மடல்கள் படிப்பேன் !
செய்தி என்ற பேரில்
. . சேட்டை வம்பு ரசிப்பேன் !
பொய்யர் புகழ்ச்சிச் சொல்லில்
. . புளகாங் கிதமே அடைவேன்!
ஐய மின்றிச் சொல்வேன்
. . அடியேன் முகநூல் அடிமை! (3)

துரத்து கின்ற வேலை
. . தொல்லை ஆகிப் போச்சே!
சுரக்கும் படைப்புத் திறனும்
. . தொலைவில் ஓடிப் போச்சே!
விரயம் ஆகும் வாழ்க்கை
. . விசனம் கொடுக்க லாச்சே!
எரியும் முகநூல் மோகம்
. . என்று மறைந்து போமோ? (4)