- ஜீவநதி சஞ்சிகையின் 189ஆவது  இதழ் எழுத்தாளர் முருகபூபதி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் வெளியான வ.ந.கிரிதரனின் கட்டுரை. ஜீவநதி சஞ்சிகையினைப் பெற  விரும்புபவர்கள் அதன் ஆசிரியர் பரணீதரனுடன்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -


1. உருவக் கதைகளும் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகளும்'!

எழுத்தாளர் முருகபூபதியின்  மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்த 'பாட்டி சொன்ன கதைகள்' நூலைப்படித்தபோது இந்நூல் என் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. முருகபூபதி  ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க எழுத்தாளர். தன் ஊடகத்துறை அனுபவங்களைத் தவறாமல் தனது கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தி வருபவர். சிறுகதைகள், நேர்காணல்கள், பயண அனுபவங்கள், நூல் விமர்சனங்கள், உருவகக் கதைகள் என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.தொடர்ச்சியாகப்  பத்திரிகைகள், இணைய இதழ்களில் எழுதி வருபவர்.  இக்கட்டுரை அவரது 'பாட்டி சொன்ன கதைகள்' என்னும் உருவக்கதைகளின் தொகுப்பு பற்றிய  திறனாய்வுக் குறிப்புகள் எனலாம்.

உருவகக் கதைகள் என்றதும் நினைவுக்கு வருபவவை கலீல் கிப்ரானின் கதைகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள். தமிழகத்தில் உருவகக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஐ.சாமிநாதன்.  அறுபதுகள், எழுபதுகளில் இவரது உருவகக் கதைகள் பல தமிழக வெகுசன இதழ்களில் வெளியாகின.  இவர் கலைமகள் ஆசிரியராக விளங்கிய கி.வா.ஐகநாதனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் விந்தனும் உருவகக் கதைகள் எழுதியிருக்கின்றார்.  எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் உருவகக் கதைகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரைல் தமிழில் உருவக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் சு.வே என்றழைக்கப்படும் எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை.  அடுத்தவர் எழுத்தாளர் எஸ்.முத்துமீரான்.  எஸ்.பொ, செம்பியன் செல்வன், செங்கையாழியான் போன்றவர்களும் உருவக்கதையின் பக்கம் தம் கவனத்தைத் திருப்பியிருக்கின்றார்கள். 'நான்' (யாழ்ப்பாணம்) பதிப்பக வெளியீடாக செம்பியன் செல்வனின் 'குறுங்கதை நூறு' (!986)  தொகுதியில் சமூக, அரசியலைச் சாடும் சிறப்பான உருவகக் குறுங்கதைகள் சில உள்ளன.

பொதுவாக மிருகங்களை உள்ளடக்கி , ஒரு கருத்தொன்றை அழுத்திக் கூறுவதற்காக எழுதப்பட்ட  கதைகள் என்று இவற்றைக் கூறலாம்.   உருவகக்கதைகள் பெரும்பாலுன் மிருகங்களை உள்ளடக்கியவையாக இருந்தாலும் அவை அவற்றினூடு மானுட சமுதாய இருப்பின் சீர்கேடுகளைச் சீண்டுபவையாக , விமர்சிப்பவையாக, அறிவுரை கூறுபவையாகவும் இருக்கின்றன. வெளிப்பார்வைக்கு அவை குழந்தைக் கதைகளைப்போல் தென்பட்டாலும், உண்மையில் மிருகங்களை உள்ளடக்கிய குழந்தைக் கதைகளுக்கும், உருவகக் கதைகளுக்குமிடையில் அவை கையாளும் பொருள், கருத்து ,  மொழி என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடுகளுள்ளன. குழந்தைகளுக்குக் கூறப்படும் மொழியில், கருத்தில், கதைகள் ஏற்படுத்த வேண்டிய உணர்வில் பலத்த வேறுபாடுகளுள்ளன. மிருகங்களை உள்ளடக்கியிருப்பதால் மட்டும் குழந்தைக்  கதைகளை உருவகக்கதைகள் என்று கூறி விட  முடியாது. ஆனால் குழந்தைக்கதைகளை குழந்தைகளின் உளவியலுக்கேற்ப படைக்கப்பட்ட எளிமையான வடிவலமைந்த , ஒரு குறிப்பிட்ட எல்லையினைத் தாண்டாத உருவகக் கதைகள் என்று கூறலாம்.

இத்தருணத்தில் எழுத்தாளர் ஞானசேகரனின் கூற்றொன்றினை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.  'ஈழத்து உருவகக்கதை முன்னோடி சு.வே' என்னும் தலைப்பில் அவர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு உருவகக் கதை பற்றிய எளிமையான , பொதுவான ஆனால் சுருக்கமான விளக்கமொன்றினைக் கூறியிருப்பார். 'வாழ்க்கை வெளிப்படுத்துகின்ற உண்மைகளையும் இயற்கையின் தன்மைகளையும் எடுத்துக்கூறி மக்களின் உள்ளங்களில் பதியவைப்பதற்கும் அவர்களைச் சிந்திக்க வைப்பதற்கும் உருவகக்கதைகள் இலக்கிய உலகில் பெரும் பங்களிப்பினைச் செய்கின்றன. வாழ்க்கைத் தத்துவங்களையும் அதன் உண்மைகளையும் பல்வேறுபட்ட மிருகங்கள், ஜீவராசிகள், இயற்கை சக்திகள் வழியாக காண்பிப்பது உருவகக்கதை. ' மிகவும் எளிமையாக அதேசமயம் சுருக்கமாக உருவக்கதையின் தன்மையினை எடுத்துக்கூறியுள்ளார் ஞானசேகரன்.

இலங்கையில் தமிழ் உருவகக்கதைகளின் முன்னோடியான எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை  தனது 'மணற்கோயில்' தொகுப்பின் 'கபாடம் திறமினோ' என்ற முன்னுரையில் உருவகக்கதை பற்றிய சிறப்பானதொரு, ஆழமானதொரு  விளக்கத்தைப் பின்வருமாறு அளித்துள்ளார்:

“இன்று உருவகக் கதைகள் எனப்படுபவற்றை உற்று நோக்கினால், உருவகக் கதைகளிலே சாதாரண உருவகத்தின் அமைப்பு உண்டு. உள்ளுறை உவமத்தின் சாயல் குறிப்பிடத்தக்க அளவு படிகிறது. இறைச்சிப் பொருளின் நிழல் பெருமளவில் விழுகிறது. எனவே இந்த உருவகக் கதை என்ற பண்டமானது உருவகம், உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் என்ற மூன்றின் கூட்டுறவால் பிறந்த ஒன்று எனக்கொள்ளல்     பொருத்தமுடைத்து. இது சிறுகதையை வடிவமாக – உருவகமாகக் கொண்டு உலாவிவருவதால் அந்தப் பெயர் பூண்டிருக்கலாம்.   உருவகக் கதை, தன்னாற் கொள்ளப்பட்டுக் கருவுயிர்க்கப்பட்ட வித்தின் வன்மையிலேயே உயிர் வாழ்கிறது. அந்த உயிர்ப் பொருளே உரிப்பொருள். உரிப்பொருள் சம்பிரதாய எல்லைகளுக்குட்பட்டோ, வழிவழியாகப் பலராலும் எச்சிற்படுத்தியவற்றைச் சுற்றியோ எழவேண்டுமென்ற     நியதியில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது பிணத்துக்கு மாலைசூட்டி அழகு பார்ப்பதையொத்தது. முக்கால உலக நிகழ்ச்சிகளுக்குள்ளே பலபல வேளைகளிலே பலபல பொருள்கள் மின்னற் கீற்றுப்போலத் துடித்து நெளிவதைச் சிந்தனையாற்றல் கொண்டு காணல்முடியும். அந்தப் பொருள்களே தத்துவங்கள். உண்மையென்பது அவற்றின் மறுபெயர். அந்த உண்மை சமய தத்துவமாகவோ அரசியற் தத்துவமாகவோ பிறவாகவோ  தத்துவங்கள் கால தேச வர்த்தமானங்களையும் மரபுகள் என்று பெரிதுபடுத்துவனவற்றையுங் கடந்து நிற்கும் நிலைபேறுடையவை. கூர்த்த மதிகொண்டு தேடிக்கண்டறிய வேண்டியவை. அந்தத்     மையப் பொருளாக,     உரிப் பொருளாகக் கொண்டு அதனை அழகாகவுந் தெளிவாகவும் காட்டுவதற்கு எழுந்த ஓர் உத்தியே உருவகக் கதை. எனவே, அதன் உரிப்பொருள் மிகமிக வலுவுடையதொன்றாக அமைய வேண்டும்.....  உரி, கரு, கற்பனை என்ற மூன்றின் சேர்க்கையாலும் மனத்தகத்து உருவகக் கதையென்றொரு கர்ப்பம் விளைந்து விட்டாலும் அதனை வெளிக்கொணர்ந்து  வாசகர்களிடையே பரிமாற்றஞ் செய்வதற்கேற்ற சொல்லுந்திறன் உருவகக் கதையின் மற்றோரம்சமாக அமைகிறது.”

இதனைப் புரிந்து கொள்வதற்குத் தமிழ் இலக்கணத்தில் வழங்கப்பட்டும் சொற்கள் சிலவற்றின் அர்த்தங்கள் புரிந்திருக்க வேண்டும். உள்ளுறை உவமம், இறைச்சி  போன்றவை பற்றிய புரிதலற்று இக்கூற்றினைப் புரிந்து கொள்ள முடியாது. இத்தருணத்தில் சு.வேலுப்பிள்ளை அவர்கள் பண்டிதர் என்பதையும், தமிழ் இலக்கணப் பாட நூல்களை எழுதியவரென்பதை நினைவில் வைப்பதும் அவசியமானது. உள்ளுறை உவமென்பது சங்கக்காலக் கவிஞர்களால் தலைவன், தலைவியரின் அக உணர்வுகளை அவர்கள் வாழும் திணைகளுக்குரிய உயிரினங்கள், மரங்கள்  போன்ற கருப்பொருட்களை உவமைகளாக்கி வெளிப்படுத்தும் ஓர் உத்தியாகும். இறைச்சி என்பதும் கவிதையொன்றில் பாவிக்கப்படும் சொல்லொன்றினை இன்னுமொரு பொருளைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் எழுதும் உத்தியென்று எளிமையாகக் கூறலாம்.

'உருவகக்கதை இலக்கியத்தில் சுடர் விடும் எஸ்.முத்துமீரான்' என்னும் 'தினகரன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில்  ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் அவர்கள்  உருவகக்கதை பற்றிப் பின்வருமாறு கூறுவார்:

"சிறுகதைகள், நெடுங்கதைகள் என்பன உலகில் உருவாவதற்கு முன்னரே உருவக் கதைகள் தோன்றின. நெடுங்கதைகள் மூலம் நிலைத்திருக்க முடியாத நீதிகளை, ஒழுக்கநெறிகளைச் சின்னஞ் சிறிய உருவகக் கதைகள் மூலம் மக்கள் மனதில் நிலை நிறுத்த முடியும் எனும் உண்மையை சான்றோர் ஆய்ந்து கூறியுள்ளனர். இலக்கிய உலகில் உருவகக் கதைகள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.   வாழ்க்கையின் உண்மைகளைத் தத்துவ நோக்கில் எடுத்துக் கூறுகின்ற போது, கற்பனை நயத்தினையும் உண்மையையும் கவிதைத் தன்மையினையும் சொல்நடை அழகினையும் ஒன்று சேர்த்து வளம் சேர்த்து இருக்கின்றார்கள் இலக்கியவாதிகள்.'

முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்  உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்' என்னும் கட்டுரையில்   தகவம் வ. இராசையா அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"உருவகக்கதை  என்பது     சிறுகதை     இலக்கியத்தினது    ஒரு     கிளை. இதற்குச்சில     தனித்துவங்கள்    உண்டு.     இங்கேவரும்  பாத்திரங்கள் பெரும்பாலும்      படிமங்கள்.   அத்துடன்    பேசாத    பொருட்கள்.     அதனூடு கருத்தொன்று  ஊடுநூல்  போலப்போகும்.  கதை  திடீரென்று  நின்றுவிடும். அந்நிலையில்  வாசகர்  பெரும்பாலும்  மின்வெட்டில்  அதிர்வுற்றதுபோல ஒருகணம்  திகைப்பார்.  படைப்பாளியினது  சாதுரியமான  சித்திரிப்பும் வாசகனது  வாசிப்பு  கூர்மையும்  இணைந்துகொண்டால்  இந்தத்திகைப்பு நீங்கி  வெளிச்சம்   பிறக்கும்."

உண்மையில் முருகபூபதியின் கதைகள் உருவகக் கதைகளா அல்லது உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியமா? என்னும் கேள்விக்கான விடையினை முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' மூலம் கண்டறிய முயற்சி செய்வதே நியாயமான செயற்பாடு. அதே சமயம் மேற் குறிப்பிட்ட உருவகக் கதைகள்  பற்றிய  பல்வகைப்பட்ட கூற்றுகளின் அடிப்படையில்   முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்'  உருவகக்கதைத்தொகுப்பினையும் அணுகுவதும் பொருத்தமானது.

இக்கூற்றுகள் மூலம் உருவகக் கதை என்றாலென்ன என்பது பற்றிய  பொதுவானதொரு  மனச்சித்திரத்தை உணர முடியும். உருவகக் கதைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள், கருத்துகள் இவற்றையெல்லாம் வெறும் மிருகங்களின் வாழ்க்கை நிகழ்வுகளாக, உணர்வுகளாகக் குறுக்கி விட முடியாது.  உண்மையில் உருவகக் கதைகளில் மிருகங்கள் மனிதர்களைப் போல் செயற்படுகின்றன. சிந்திக்கின்றன. மிருகங்களை மனிதமயமாக்குவதன் மூலம் கூறப்படும் கதைகள் ஓரு விதத்தில் மனிதர்களின் இருப்புக்கு வழி காட்டுபவையாக,  நல் கருத்துகளைப் போதிப்பவையாக இருக்கின்றன. அவர்களைச் சிந்திக்க வைக்கின்றன.  அதே சமயம் நீதிக்கருத்துகளின் அடிப்படையில் அமைந்துள்ள உருவகக்  கதைகளை மானுட சமுதாயத்தின் சீர்கேடுகளை நையாண்டி  மூலம் சாடவும் எழுத்தாளர்கள் சிலர் பயன்படுத்துவர்.

2. பாட்டி தையலம்மாவும் முருகபூபதி மீதான அவரது பாதிப்பும்!

நூலை முருகபூபதி தன் பாட்டியான 'தையலம்மா'வுக்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.  அப்பாட்டியின் ஆளுமையினை, அந்த ஆளுமை முருகபூபதியின் மேல் செலுத்திய பாதிப்பினை நூலுக்கான முருகபூபதியின் முன்னுரை நன்கு, உள்ளத்தைத்தொடும் வகையில் விபரிக்கின்றது. வாழ்க்கையின் சவால்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு, எச்சமயத்திலும் தன் பேரன் மேல் கொண்டுள்ள பாசத்தை விட்டு விடாமல் வாழ்ந்த  அப்பாட்டி சொன்ன கதைகள் சிறுவன் முருகபூபதியின் மேல் ஏற்படுத்திய தாக்கம்தான் இன்று பன்முக ஆற்றல் மிக்க படைப்பாளியாக அவர் பரிணாமமடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை இம்முன்னுரை வாயிலாக அறிய முடிகின்றது. தன் பாட்டிக்கு நூலினைச் சமர்ப்பணம் செய்திருப்பது முற்றிலும் தகுதியானதொன்று. இந்நூலிலுள்ள கதைகளின் மூலக்கருக்கள் அவரது பாட்டி சொன்ன கதைகளிருந்து பெறப்பட்டவை என்பதை நூலில் முருகபூபதி  குறிப்பிட்டிருக்கின்றார். அக்கதைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்ததன் மூலம் அக்கதைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கச்செய்திருக்கின்றார் முருகபூபதி.  பாட்டி தையலம்மாவின் கதைகள் இனிமேல் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

3. தொகுப்பின் கதைகள் பற்றி.....

'விதி' யில் மிருகங்களைப் பிரித்து அதில் குளிர் காய நினைக்கிறது நரி. இதற்காக அது கடுமையாக உழைக்கின்றது. இறுதியில் அது அதற்கே  ஆபத்தாக வந்து முடிகின்றது. இதனை மையமாகக்க்கொண்ட கதை தொகுப்பின் முதலாவது கதையான 'விதி'.

'மூளை' என்னும் கதையில் ஓநாயின் பேச்சைக்கேட்டு ஒட்டகத்தின் மூளையைச் சாப்பிட்டால் தானும் உயரமாக வளரலாம் என்று ஆசை கொண்டு இறுதியில் தந்திரமாக ஒட்டகத்தைச் சிங்கத்தின் மூலம் கொன்று அதன் மூளையை உண்டு விடுகின்றது. ஒட்டகத்தைச் சாப்பிட வந்த சிங்கம் மூளையைக் காணாமல் திகைக்க அதற்கும் தந்திரமாக ஒரு காரணத்தைக் கூறித் தப்பி விடுகின்றது. இக்கதையைச் சிறுவர்களுக்கான உருவகக்கதையென்று தகவம் வ.இராசையா கூறுவதுபோல் கூறிவிட  முடியாது. ஏனென்றால் இக்கதையில் வன்முறை அதிகமாக உள்ளது. ஒட்டகத்தைக்கொல்ல முயற்சி செய்து தோற்று விடவே , மறுமுறையும் முயற்சி செய்து கொல்லப்படுவதாகக் கதை கூறப்படுகின்றது. இதனை வளர்ந்தவர்களுக்கான உருவகக் கதை என்று கூறலாம்.

'குணம்' நல்லதொரு உருவகக் கதை. அமைதியாகவிருந்த நகரின் அமைதி குலைந்து போகின்றது என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட கதையை ஒரு குறியீட்டுக் கதையாகவும் கருதலாம். சேவலின் கூவலுடன் அமைதியாகக் காலை விடிந்த நகரில் செல்வந்தர் ஒருவர் பாதுகாப்புக்காக நாயொன்றை வளர்க்கின்றார். அதன் குரைப்பால் நகர் அதன்  அமைதியை  இழக்கத்தொடங்குகிறது. அடுத்த வீட்டுக்காரனும் போட்டியாக இன்னுமொரு நாயை வளர்க்கின்றான். அதுவும் பதிலுக்குக் குரைத்து நகரின் அமைதியை மேலும் சீர்குலைத்து விடுகின்றது.   அத்துடன் பாதுகாப்புக்கு நாய்கள் வந்தவுடன் நகரில் செல்வந்தருக்கும் மக்களுக்குமிடையில் நிலவிய நெருக்கம் மறைந்து மதிலொன்று எழுந்து விட்டதென்றும் கதை விபரிக்கின்றது.

அதுவரை காலமும் இருந்த நகரின் அமைதி போனாலும் பாதுகாப்புக்காக நாய் என்று இருந்த நிலை மாறி, நாய் வளர்ப்பதும் நகரத்தின் நாகரிகமாக மாறி  விடுகின்றது. பலரும் நாய் வளர்க்கத் தொடங்குகின்றார்கள். ஒரு நாள் அச்செல்வந்தர் தன் நாயைத் தன்னுடன்  வெளியில் கூட்டிச் செல்கின்றார். அதனைப்பார்த்து ஊரிலுள்ள ஏனைய நாய்களும் தம்மையும் அவ்விதம் கூட்டிச் செல்ல வேண்டுமென்று அடம் பிடிக்கின்றன. இவ்விதமாக எல்லா நாய்களும் வீதிக்கு வந்து விட்டன.  இவ்விதம் வீதிக்கு வந்த நாய்களினால் நகரின் அமைதி குலைந்து  போகின்றது. நாய்களும் ஒன்றுடனொன்று  முட்டி மோதிக்கொள்கின்றன. கதை இவ்விதமாக முடிந்திருக்கும்: "அந்த நகரம் அமைதி இழந்தது. ஒரு சேவல் அருகிலிருந்த கோழியிடம் சொன்னது.  "நாய் நன்றியுள்ள மிருகம்தான். ஆனால் பல நாய்கள் சேர்ந்தால் இப்படித்தான்'."

நகரமொன்றில் மனிதர்களுக்கிடையிலான  நெருக்கம் குறைந்து மதில்கள் எழும்பி விடுகின்றன. நாகரிக என்ற பெயரில் புதிய புதிய செயற்பாடுகள் உருவாகி ,அவை ஏனையவர்களாலும் பின்பற்றப்படுகின்றன.  இயற்கையுடன் இணைந்து வாழும் கிராமத்தின் அழகையும், அமைதியையும் நகர்கள் இழந்து விடுகின்றன.  இவற்றை நினைவூட்டும் இக்கதையினை நகரமொன்றின் எதிர்மறையான விளைவுகளை நையாண்டி செய்யுமொரு (Satire) குறியீட்டு உருவகக் கதையாகக்கருதலாம். அவ்வகையில் சிறப்பான உருவகக் கதையாக இதனைக் கருதலாம். இக்கதைக்கு 'நகரம்' என்றும் பெயர் வைத்திருக்கலாமோ என்னும் சிந்தனையினை எழ வைக்கும் கதையிது என்றும் கூறலாம்.

'தனித்துவம்' கதையும் நல்லதொரு உருவக்கதை.  இவ்வுலகில் ஒவ்வோருயிரும் தத்தமது தனித்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் பெருமைப்படத்தக்க நல்ல அம்சங்கள் உள்ளன. விமர்சனத்துக்குரிய அம்சங்களுமுள்ளன. இதனைப் புரிந்துகொண்டால் இருப்பு இனிக்கும். இதனைப்புரிந்து கொள்ளாத பசுவும், நாயும்  இருவரில் யார் சிறந்தவரென்று மாறி மாறித் தர்க்கம்  செய்கின்றன. இவற்றின் தர்க்கத்தை அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த கோழி 'அவரவர் தமது தனித்துவத்தைப் பேணுவதுதான் பெருமை. நீயா நானா  உயர்வு என்னும் வாதத்தில் நன்மையெதுவும் விளையாது. பகைமைதான் விளையும். இதனை இவற்றுக்குப் புரிய வைக்க வேண்டுமென்று நினைக்கின்றது. நல்லதொரு குழந்தைகளுக்குமுரிய நீதியொன்றினைப் போதிக்கும் உருவகக்கதையாக இக்கதையினைக் கூறலாம்.

'பலம்' தொகுப்பின் இன்னுமொரு நையாண்டிக்கதை.  சுரண்டலை அனுமதிக்கும் இன்றுள்ள மானுட சமுதாய அமைப்பில் அச்சுரண்டலை ஒழிக்காமல் நன்மை ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதைச் சிறப்பாக எலிகள், பெருச்சாளி, பூனை, சுண்டெலி மூலம் வெளிப்படுத்தும் கதை.  வெளியில் எலிகளுக்கும், பூனைக்குமிடையிலான முரண்களை மையமாகக்க்கொண்டுள்ள கதையாகத் தென்பட்டாலும், இம்மிருகங்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டும் விடயங்கள் மானுட சமுதாயத்திலுள்ள முரண்களை,  சீர்கேடுகளை. உள்ளுறை உவமம் என்பது இதுதான். வெளிப்படையாகத் தெரிவது ஒன்று.  குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுவது இன்னுமொன்று.

கதையின் சுருக்கம் இதுதான் : எலிகளை அடக்க வீட்டுக்காரன் பூனையொன்றைக் கொண்டு வருகிறான். பூனையிடமிருந்து தம் சுதந்திரத்தைக் காப்பாற்றப்  பெருச்சாளியொன்றை சில நிபந்தனைகளின் பேரில் எலிகள் அழைத்து வருகின்றன . எலிகள் பெருச்சாளியைத் தலைவராக ஏற்க வேண்டும். பெருச்சாளிக்குத் தானியங்களை வழங்க வேண்டும். பூனையின் தொல்லை நீக்கிய பின்னும் அங்கு பெருச்சாளி தொடர்ந்துமிருக்கும். இவை பெருச்சாளியின் நிபந்தனைகள்.  எலிகள் முதலிரு நிபந்தனைகளுக்கும் இணங்கின. பெருச்சாளியோ தந்திரத்துடன் அவற்றின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பூனையை அழிப்பது போல் பாவனை செய்து கொண்டு தொடர்ந்தும் அங்கிருந்து வந்தது. இவ்விதம் எலிகளைச் சுரண்டி பெருச்சாளி வாழத் தொடங்கியது. இறுதியில் சுண்டெலியொன்றின் ஆலோசனையில் பெருச்சாளியை முதலில் துரத்துவதென்றும், பின்பு  ஒற்றுமையாகப் பல்முனைகளில் பூனையை எதிர்த்துப் போராடுவதென்றும் முடிவு செய்கின்றன. இவ்வுருவக்கதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமுரிய சிறந்த, தொகுப்பின் இன்னுமொரு சுரண்டல் மிக்க மானுட சமுதாயத்தை நையாண்டி செய்யும் கதை. பல்வேறு வயதினரும் தத்தமது அறிவு, சிந்தனை விருத்தி என்பவற்றுக்கேற்பக் கதையினை , அது கூறும் நீதியினை, அதன் நையாண்டியைப் புரிந்துகொள்வர்.

'அடக்கம்' கதையின் முக்கிய அம்சங்கள்  அதில் இடம் பெறும் ஆமைக்கும், கோழிக்குமிடையிலான உரையாடலும், இறுதியில் அதனால் பெறப்படும் நீதியும்.  உரையாடல் சுவையாகப் பின்னப்பட்டிருக்கும்.  பிரிவுகளற்றுப் படைக்கப்பட்ட கடலும் நிலமும் மனிதர்களால் எல்லைகளிடப்பட்டுப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அரிதாகக் காணப்படும் ஆமையைக்கொல்வதற்குச் சட்டத்தடை உண்டு. ஆனால் கோழிக்கில்லை. மனிதரின் முக்கிய விருந்துகளில் ஒன்றாக இலட்சக்கணக்கில் அவை நாள் தோறும் கொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் அவற்றுக்கிடையிலான உரையாடல் தொட்டுச் செல்லும். இறுதியில் முட்டையிடச் சென்று திரும்பிய கோழி அதனையொரு பெரிய விடயமாகக் கருதி  'நான் ஒரு முட்டை இட்டு விட்டேன்' என்று ஆடிப்பாடும்.  இதனைப்பார்த்த ஆமை 'நான் ஆயிரக்கணக்கில் முட்டைகள் இடுகின்றேன். அமைதியாகவிருக்கிறேன். ஒரு முட்டையிட்டுவிட்டு இந்தக் கோழி அடிக்கும் கூத்தைப்பார்' என்று நினைக்கின்றது. அதனைக்கோழியிடம் கூறிவிட்டுக் கடலுக்கு மீண்டும் செல்கின்றது. அற்பருக்குப் பவுசு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பார் என்னும் பழமொழியினை நினைவூட்டும் கோழியின் நடவடிக்கை. சுவையான தொகுப்பின் இன்னுமோர் உருவகக்கதை.

தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகளுள்ளன.  மேற் குறிப்பிடப்பட்ட ஆறு கதைகளைத் தவிர மேலும் ஞானம், சமர்ப்பணம், உழைப்பு, தகுதி, கறை, மனிதர்கள் என்னும் தலைப்புகளில் ஆறு உருவகக் கதைகளுள்ளன. மொத்தத்தில் 'பாட்டி சொன்ன கதைகள்' தொகுப்பு பல விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவது முருகபூபதி தன்னைப் பாதித்த, தன் எழுத்துலகத் தோற்றத்துக்கு உந்து சக்தியாகவிருந்த பாட்டி சொன்ன கதைகள் காற்றோடு காற்றாகப் போய்விடாமல் , அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுத்து , சிறந்த உருவகக் கதைகளாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும் வகையில் ஆவணப்படுத்தியிருக்கின்றார். நீதிக்கருத்துகளைப் போதிக்கும் கதைகளைப் படைத்ததன் மூலம் குழந்தைகள், வளர்ந்தவர்கள் அனைவருமே இலக்கிய இன்பம் பெற வழி சமைத்திருக்கின்றார். மானுட சமுதாயம் உருவாக்கிய எதிர்மறை விளைவுகளை நையாண்டி மூலம் விமர்சித்திருக்கின்றார். இக்கதைகள் அவரது பாட்டி உயிருடனிருந்திருந்தால் நிச்சயம அவரைப்பெருமிதப்பட வைத்திருக்கும். மகிழ்ச்சிடைய வைத்திருக்கும். இக்கதைகள் மூலம் தன் பாட்டிக்கு மிகப்பெரிய கைம்மாறினைச் செய்திருக்கின்றார் முருகபூபதி.

உசாத்துணை நூல்கள்

1.  ஈழத்து உருவகக்கதை முன்னோடி சு.வே. - தி.ஞானசேகரன் ( கட்டுரை, தினகரன் வாரமஞ்சரி)
2.  நயப்புரை: முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்; உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்     - தகவம் வ. இராசையா   ( பதிவுகள் இணைய இதழ் )
3.  'கபாடம் திறமினோ' (சு.வேலுப்பிள்ளையின் 'மணற்கோயில்' உருவகக்கதைத்  தொகுப்பின்  முன்னுரை)
4.   வீ.அரசு  - தமிழ்ச்சமூக இயக்கத்தில் (1930-1975) விந்தனின் ஆளுமை ( கீற்று இணைய இதழ்)
5.  உருவகக்கதை இலக்கியத்தில் சுடர் விடும் எஸ்.முத்துமீரான் - ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்  (தினகரன்)
6. பாட்டி சொன்ன கதைகள் -   லெ.முருகபூபதி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.