இன்று என் வாழ்வில், உலகத் தமிழர்கள் வாழ்வில் மறக்க  முடியாத துயர நினைவுகளைச் சுமந்து நிற்குமொரு நாள். இருக்கும் வரையில் என் நினைவை விட்டு இந்நாள் ஒருபோதும்  ஓடி விடப்போவதில்லை. ஏனென்றால் இந்நாளில் நடந்த அந்தத் துயர நிகழ்வின் நேரடிச் சாட்சிகளில் ஒன்றாக நானிருந்திருக்கின்றேன். 1972இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10இல் , இரவில் நடந்த கூட்டத்தில் பொலிசார் ஏற்படுத்திய கலவரமும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக அறுந்து விழுந்த மின் கம்பியில் அகப்பட்டு உயிரிழந்த  துயரச் சம்பவமும்,  அது வரை அமைதி வழியில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திசை திருப்பின.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் முதன் முதலில் உரும்பிராய் சிவகுமாரனை ஆயுதம் தூக்க வைத்தது அன்று நடைபெற்ற தமிழ் மக்களின் மரணங்கள்தாம்.  அன்று யாழ் மேயராக விளங்கிய அல்ஃபிரட் துரையப்பா அவர்களைப் பொன்னாலையில் வைத்துத் தமிழ் இளைஞர்கள் பின்னர் படுகொலை செய்ததற்கும் முக்கிய காரணமாகவிருந்தது அன்று நிகழ்ந்த தமிழர்கள் மீதான வன்முறையும், அழிவும்தாம்.

அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். உரும்பிராய் சிவகுமாரனை முதன் முதலில்  நேரில் பார்த்தது  மாநாட்டையொட்டி நடைபெற்ற அலங்கார வாகன அணிவகுப்பில்தான். மாநாட்டையொட்டி யாழ் கே.கே.எஸ்  வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த அலங்கார வாகன ஊர்வலத்தில் அவரும் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் யாழ் கொட்டடி மீனாட்சி வர்த்தகக் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.  வாகன அணிவகுப்பை ஆச்சி வீட்டு வாசலிலிருந்து எனது உறவுக்கார அக்காமார் சிலருடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்பொழுது வாகன அணி வகுப்பில் சென்று கொண்டிருந்த சிவகுமாரனைப்பார்த்து அவர்களிலொருவர் 'இந்தப் பெடியன் எங்களுடன் மீனாட்சி டியூசன் சென்ரரில் படிக்குது' என்று சொன்னபோதுதான் முதன் முதலில் அறிந்தேன். ஆனால் அப்பொழுது சிவகுமாரன் ஆயுதம் தாங்கிய போராளியாக உருமாறியிருக்கவில்லை.

அதன் பிறகு நான் அவரைச்சந்தித்தபோது அவர் உயிருடனில்லை. அவரது மரண வீட்டுக்கு யாழ் இந்துக் கல்லூரி வகுப்பு மாணவர்களுடன் சென்றபோதுதான் அவரது உடலையும், அருகில் இலண்டனிலிருந்து வந்து அழுதுகொண்டிருந்த அவரது அக்காவையும், குடும்பத்தவரையும் பார்த்தேன். அவர் இறந்த சமயத்தில் அவர்தான் தங்களுடன் கொட்டடி மீனாட்சிக் கல்வி நிலையத்தில் படித்த சக மாணவன் என்று முன்பு அவரை ஊர்வலத்தில் சுட்டிக்காட்டிய  உறவுக்கார அக்கா  கூறியபோதுதான் முதன் முதலில் சிவகுமாரனைப் பார்த்த விடயத்தையும் உணர்ந்துகொண்டேன்.

       -  *மாநாட்டில் திருச்சி நைனார் முகம்மது உரையாற்றிக்கொண்டிருக்கும் தோற்றம். -

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி யாழ் நகரத்து வீதிகளெல்லாம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் மாநாட்டுக் கொடியொன்றைக் கட்டியபடி நண்பர்களுடன் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். இன்னும் பசுமையாக நினவிலுள்ளன. மாநாட்டின் இறுதி நாளன்று உரையாடிக்கொண்டிருந்த தமிழகத்துப் பேராசிரியர் திருச்சி நைனார்  முகம்மது நினைவிலிருக்கின்றார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


* திருச்சி நைனார் முகம்மது உரை - இப்புகைப்படத்தை முகநூல் நண்பர் சிறீ சிறீதரன் , 'காந்தளகம்' சச்சிதானந்தனின் முகநூல் பக்கத்திலிருந்து பெற்றுப் பகிர்ந்திருந்தார்.