இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின்  ' CHAI WITH CHITHRA -SOCIAL TALK' புகழ்பெற்ற யு டியூப் சானல். அதில் பல்வேறு கலை, இலக்கிய ஆளுமைகளுடன் சித்ரா லட்சுமணன் நடத்தும்  நேர்காணல்கள் இடம் பெறும். அண்மையில் அவ்விதமான உரையாடல்களில் என்னைக் கவர்ந்த உரையாடல் எழுத்தாளர் இந்துமதியுடன் அவர் நடாத்திய நேர்காணல்.

எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாலார் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந்  தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.

சிவசங்கரியின் வரவுடன் அவரைப்போன்ற எழுத்து நடையுடன் வந்தவராகவே எனக்கு இந்துமதி நினைவிலுள்ளார். அவரது 'கீதமடி நீ எனக்கு' நாவல்தான் விகடனில் தொடராக வெளியான முதல் நாவல். ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளிவந்திருக்க வேண்டும்.  அதிலும் சிவசங்கரியின் நாவலில் வரும் நாயக,நாயகியர்போல் காதலை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் இருந்ததாக நினைவு. கதை மறந்து விட்டது. அதனைத் தொடர்ந்து மேலுமிரு நாவல்கள் விகடனில் தொடராக வெளிவந்தன. ஒன்று 'மலர்களில் அவள் மல்லிகை' (ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளியானதாக நினைவு). அடுத்தது ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான  'தரையில் இறங்கும்  விமானங்கள்'. இவற்றில் 'தரையில் இறங்கும் விமானங்கள்' அக்காலகட்டத்தில் எம்மை மிகவும் கவர்ந்த நாவல். நாயகன் விஸ்வம், அவனது அண்ணன் பரசு, அண்ணி ருக்மிணி இவர்கள் மறக்க முடியாத பாத்திரங்கள். பல வருடங்களின் பின் மீண்டும் வாசித்தபோது இந்நாவலில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் ஆகியோரின் பாதிப்பு இருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக விஸ்வம் தன் அண்ணி ருக்மிணியின் பாதங்களைப்பற்றி நினைப்பதை ஆசிரியர் விபரிக்கும்போது நா.பா.வின் 'பொன்விலங்'கில்  நாயகன் சத்தியமூர்த்தியின் பாதங்களைப்பற்றி விபரிப்பது நினைவுக்கு வந்தது. நாவலில் வரும் பெண்களைப்பற்றிய விபரிப்பு தி.ஜா.வின் பெண்களை நினைவுக்குக் கொண்டு வந்தது.  . இந்துமதியின் நாவல்களிலேயே மிகவும் முக்கியமான நாவலாக நினைவு கூரப்படும் நாவல் இதுவாகவே இருக்குமென்பது என் கணிப்பு

இவை தவிர அதற்குப் பின் அவர் எழுதிய நாவல்களை நான் படித்ததில்லை.. ஆனால் அவர் தொடர்ந்து ஊடகங்களில் எழுதிக்கொண்டிருந்ததை அவதானித்திருக்கிறேன். இவ்விதமானதொரு சூழலில் கல்கியில் வெளியான ஒரு கட்டுரையில் இயக்குநர் ஆபாவாணனின் படமான 'கறுப்பு ரோஜா' வின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டிருந்தததும் , அதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தில் கோடிக்கணக்கில் நட்டமடைந்ததையும் அறிந்திருந்தேன். அதன் பின்னர் பல வருடங்கள் அஞ்ஞாதவாசம் சென்றிருந்த அவர் மீண்டும் தலையைக் காட்டினார்.  புத்துயிர்ப்பு பெற்றிருந்தார்.

            - எழுத்தாளர் இந்துமதி -

இந்த நேர்காணல் எழுத்தாளர் இந்துமதியின் வாழ்க்கை அனுபவங்களை விபரிப்பதுடன், அவரது ஆளுமையையும் நன்கு அறிய வாய்ப்பினைத் தருகின்றது. இன்னுமொரு விடயத்திலும் இந்நேர்காணல்  முக்கியத்துவம் மிக்கது. தமிழகத்தின் கலை, அரசியல் ஆளுமைகளான முன்னாள் தமிழக முதல்வர்களான  கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா , வி.என். ஜானகி ஆகியோருடன் அவருக்கிருந்த நெருங்கிய தொடர்புகளை இந்நேர்காணல் மூலமே முதன்முதலாக அறிந்தேன். ஜெயலலிதாவின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருவராக இருந்திருக்கின்றார். இவர்களுடனான தனது அனுபவங்களையெல்லாம் மனந்திறந்து இந்நேர்காணலில் இந்துமதி விபரிக்கின்றார். தற்போது தமிழக முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் ஆகியோருடனும் இவருக்கு நட்பு இருப்பதையும் இந்துமதி இந்நேர்காணலில் விபரிக்கின்றார்.

எம்ஜிஆர் இவரைத் 'தாய்' சஞ்சிகைக்கு ஆசிரியராக இருக்கும்படி வேண்டிய விபரத்தை, அதை இவர் மறுக்கவே, இவரையும் , ஜெயலலிதாவையும் இணைத்து சஞ்சிகையொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட விபரத்தையும் இந்நேர்காணல் வெளிப்படுத்துகிறது. அதன் பின்னர் ஜெயலலிதாவின் அரசியல் ஈடுபாடு அம்முயற்சியை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றது. இந்துமதி தனது மேற்படி ஆளுமைகளுடனான அனுபவங்களைத் தனி நூலாக எழுதி வெளியிட்டால் அது நல்லதோர் ஆவணமாகவிருக்கும்.

நேர்காணலில் ஒருமுறை தன்னை வெள்ளந்தி என்று தன்னைப்பற்றிக் கூறினார். அதனை இந்நேர்காணல் வெளிப்படுத்துகின்றது,. இந்துமதி என்னும் எழுத்தாளர்  பற்றி, அவரது இலக்கிய, திரைப்பட அனுபவங்கள் பற்றி, கலை, அரசியல் ஆளுமைகளுடனான தனது அனுபவங்களைப்பற்றி இந்நேர்காணல் மூலம் அறிந்துகொள்கின்றோம். அவ்வகையில் முக்கியமான நேர்காணல்.

நேர்காணலின் நான்கு பகுதிகளுக்குமான இணைய இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன்:

எழுத்தாளர் இந்துமதியுடனான உரையாடல் - பகுதி 1- https://www.youtube.com/watch?v=YTxC3oluSgc...
எழுத்தாளர் இந்துமதியுடனான உரையாடல் - பகுதி 2 - https://www.youtube.com/watch?v=agVsyvSMeXM...
எழுத்தாளர் இந்துமதியுடனான உரையாடல் - பகுதி 3 -  https://www.youtube.com/watch?v=2mgeAyv8Ozo...
எழுத்தாளர் இந்துமதியுடனான உரையாடல் - பகுதி 4  https://www.youtube.com/watch?v=fZs2ktyk2bs...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.