இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.  என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.

சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள்,  இயற்கை , எழுத்து ,  பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர்  பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை  வெளிப்படும் வரிகள்.

தமிழ் இலக்கிய உலகில் என்னைப் பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.  தன் குறுகிய காலத்தில் இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.

எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக,  தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.

அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதையொன்று - https://dheivegam.com/nirpathuve-nadapathuve-bharathiyar-kavithai/


கவிதை முழுமையாகக் கீழே:

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே
,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,
நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?-
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-
இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ? -

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
 காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக்
காட்சி நித்தியமாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.