எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு வருட நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  என் வாசிப்பனுவத்தில் எழுத்தாளர் அகிலனின் படைப்புகளுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. அகிலனின் புகழ்பெற்ற படைப்புகள் பல கல்கியில் வெளியானபோது அவற்றை நான் அறிந்திருக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி' வெளியானபோது நான் தவழ்ந்துகொண்டிருந்தேன்.  எனக்கு மிகவும் பிடித்த 'பாவை விளக்கு' கல்கியில் தொடராக வெளியானபோது நான் இவ்வுலகில் அவதரித்திருக்கவில்லை. நான் 'பொன்னியின் செல்வன்'  உட்பட வாசிப்பை ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் ஆனந்தவிகடனில் ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் 'சித்திரப்பாவை' தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது. கலைமகளில் 'எங்கே போகின்றோம்' நாவலும் அக்காலகட்டத்தில்தான் தொடராக வெளிவந்தது. ஆனால் அவை என்னைப் பெரிதும் கவரவில்லை.

இந்நிலையில் என் கவனத்தை ஈர்த்த படைப்பாக அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' நாவலைக் குறிப்பிடலாம்.  என் அம்மாவின் கடைசித்தம்பி , மாமா, அண்மையில் கனடாவில் மறைந்தவர், 1970இல் கனடா செல்வதற்கு முன் சிறிது காலம்  புளியங்குளத்தில் ஏ9 பாதையில் அமைந்திருந்த பண்ணையொன்றை நிர்வகித்து வந்தார். நகரத்து இளைஞரான அவருக்குக் காட்டுச்சூழல் பெரிதும் பிடித்திருக்கவில்லை. அடிக்கடி 'அக்கா, அக்கா' என்று வவுனியாவுக்கு வந்து செல்வார். அவருக்கு என் வாசிப்பார்வம் தெரியும். அவ்விதம் வருகையில் ஒரு தடவை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட 'வேங்கையின் மைந்தன்' நாவலையும் கொண்டு வந்து தந்தார். அப்பொழுதுதான் 'பொன்னியின் செல்வன்' நாவலில் மூழ்கிக் கிடந்த எனக்கு , முதலாம் இராசராச சோழனின் மகனான முதலாம் இராசேந்திர சோழனின்  வரலாற்றைக் கூறும் 'வேங்கையின் மைந்தன்'  நாவல் பிடித்து விட்டது.  நாவலின் நாயகன் கொடும்பாளூர்க் கோமகன் இளங்கோவேளும், இராசேந்திர சோழரின் மகளான அருள்மொழி நங்கையும் என்னைக் கவர்ந்து விட்டார்கள். இராசேந்திர சோழரால் சிறை பிடிக்கப்பட்டு வந்த இலங்கை மன்னர் ஐந்தாம் மகிந்தரின் மகளான ரோகிணியும் இளங்கோவின் காதலுக்குரியவளாக வருவாள். தொடராக வெளியானபோது இறுதியில் ரோகிணி இறப்பதாக அகிலன் முடித்திருப்பார். பின்னர் நாவல் நூலுருப்பெற்றபோது அம்முடிவை மாற்றி ரோகிணியைத் தப்ப வைத்திருப்பார். நினைவிலிருக்கின்றது.

இதன் பின்னர் அக்காலகட்டத்தில் வெளிவரத்தொடங்கியிருந்த ராணிமுத்து பிரசுரமாக வெளியான அகிலனின் 'சிநேகிதி' என்னைக் கவர்ந்த அவரது சிறு நாவலாகக் கூறுவேன். அக்காலகட்டத்தில் வெளியான கல்கி, விகடன், தினமணிக்கதிர், கலைமகள் ஆகிய சஞ்சிகைகளின் தீபாவளி மலர்களில் ஏதாவதொன்றில் நிச்சயம் அகிலனின் சிறுகதையொன்றாவது பிரசுரமாகியிருக்கும். அவற்றையும் விரும்பி வாசிப்பேன். 'வேங்கையின் மைந்தன்' எனக்கு அகிலனின் ஏனைய படைப்புகளையும் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட வடிவில் கிடைத்த 'பாவை விளக்கு', 'கயல்விழி, 'புது வெள்ளம்' ஆகிய நாவல்களையும் வாசித்தேன். இவற்றை வாசித்தபோது நான் பதின்ம வயதுகளில் நடைபோட்டுக்கொண்டிருந்தேன். அவ்வயது காரணமாகக் காதலை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த 'பாவை விளக்கு' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் இன்று வரை அகிலனின் சமூக நாவல்களில் என்னைக் கவர்ந்த நாவலாக அதனையே கூறுவேன். அதன் காரணமாகவே 'பாவை விளக்கு' திரைப்படம் மீண்டும் யாழ் றிகலில் திரையிடப்பட்டபோது இரவுக் காட்சியாகச் சென்று பார்த்தேன்.

இதன் பின்னர் அவரது 'வாழ்வு எங்கே' நாவலை யாழ்  பொதுசன நூலகத்தில் இரவல் பெற்று வாசித்தேன். அது 'குலமகள் ராதை'  என்னும் பெயரில் திரைப்படமாகவும் வெளியானது. அது மீண்டும் யாழ் புது வின்சர் திரையரங்கில் திரையிடப்பட்டபோது பார்த்திருக்கின்றேன். படத்தின் பாடல்கள் எல்லாம் இனியவை.

அகிலன் காந்தியக் கருத்துகளில் ஊறிப்போனவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது படிப்பை இடை நடுவில் நிறுத்தியவரென்று வாசித்திருக்கின்றேன்.  அதே சமயம் அவரது படைப்புகளில் சமூக மீறல்கள் துணிச்சலாக வெளிப்பட்டிருக்கும். பொருந்தா மணத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து மீண்டும் தம் காதலருடன் இணையும்  பெண்களை அவரது  சித்திரப்பாவை, சிநேகிதி போன்ற நாவல்கள் வெளிப்படுத்தின. 'வாழ்வு எங்கே' தீண்டாமையைச் சாடிய நாவல்.  பொதுவாக வெகுசன எழுத்தாளர்கள் பலரிடம்  இல்லாத துணிச்சல் அகிலனிடமிருந்ததை இவ்வகைப்படைப்புகள் வெளிக்காட்டின.  முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட எழுத்தாளர் நாரண துரைக்கண்ணனிடமும் இத்தகையை துணிச்சலைக்  காணலாம்.

அகிலனின் நூற்றாண்டு நிகழ்வுகள் பற்றிய இணையச் செய்திகள் மீண்டும் எழுத்தாளர் அகிலனின் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்திவிட்டன.   என் வாசிப்பனுவத்தின் பரிணாமப் படிக்கட்டுகளில் அகிலனின் படைப்புகளுக்கும் நிச்சயம் இடமுண்டு.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இப்பதிவை முகநூலில் பிரசுரித்தபோது பதிவான எதிர்வினைகள்

Vijaya Baskaran
நான் வாசித்த முதல் நாவல் அகிலனின் வெற்றித்திருநகர். அடுத்து சித்திப்பாவை.

Sivanesaselvan Arumugam
The writer who developed my reading habit during my school years later even during my university life I had the pleasure of rereading all his flow of writing excellent

Kopan Mahadeva
MY CONGRATULATIONS TO PATHIVUKAL EDITOR Giritharan Navaratnam FOR HIS SERIES OF EXPERT & COMPREHENSIVE REVIEWS ON THE STALWART TAMIL WRITERS OF THE PAST DECADES LIKE TODAY'S AHILAN. FANTASTIC! -- Prof. Kopan Mahadeva.
   
Vetri Chelvan
கடந்த கால வாசித்த புத்தகங்களில் நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி

Akilan Kannan
மிகவும் ஆழமான உள்வாங்கல் ! அழகான பிரதிபலிப்பு ! மகிழ்ச்சி நண்பரே. அகிலன் நூல்களின் பட்டியல் காண வலைத்தளம் : tamilputhakalayam.in புத்தகங்கள் பெற ஆன்லைன் புத்தக விற்பனையாளர்கள் எண்கள் இதோ. அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள லாம் : சிட்டி ஆட்ஸ் : +91 98410 16016 , Common folks : +91 90948 01812

VN Giritharan
நன்றி அகிலன் கண்ணன் உங்கள் கருத்துகளுக்கு. அகிலன் அவர்களின் மகனிடமிருந்து இவ்வார்த்தைகள் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

Akilan Kannan
VN Giritharan நல்வரவு நண்பரே

Nadarajah Karuppaiah
பால்மரக் காட்டினிலே

Yogananthan Kanakasooriyam
அகிலன் பற்றிய பதிவு அருமை. அவரின் வாரிசுகள் எழுத்துத் துறையில் உள்ளார்களா? அறியத் தரவும்

VN Giritharan
Yogananthan Kanakasooriyam மேலுள்ள அகிலன் அவர்களின் மகன் அகிலன் கண்ணனின் கருத்துகளை நீங்கள் வாசிக்கவில்லையென்று நினைக்கின்றேன். எழுத்தாளர் அகிலன் கண்ணன் அகிலனின் மகன். தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தின் உரிமையாளர். தமிழ்ப்புத்தகாலயம் இணையத்தளத்தில் (அகிலன் கண்ணனின் குறிப்பிலுள்ளது) அவரது நூல்களையும் வாங்கலாம். அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு - https://ta.wikipedia.org/.../%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF...

Akilan Kannan
VN Giritharan  அகிலன் , அகிலன் கண்ணன் நூல்களின் பட்டியல் காண வலைத்தளம் : tamilputhakalayam.in புத்தகங்கள் பெற ஆன்லைன் புத்தக விற்பனையாளர்கள் எண்கள் இதோ. அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள லாம் : சிட்டி ஆட்ஸ் : +91 98410 16016 , Common folks : +91 90948 01812

Yogananthan Kanakasooriyam
VN Giritharan உண்மைதான், தகவலுக்கு நன்றி கவிஞரே

VN Giritharan
அகிலனின் 'சிநேகிதி' ராணிமுத்தாக வெளியாவது பற்றிய அறிவிப்பு.

Akilan Kannan
VN Giritharan அருமை ! ராணிமுத்து உருவாக ஐயாவே மூலகாரணம்.‌ "சாமான்யர்களைச் செய்தித் தாள் படிக்கச் செய்த நீங்கள் அவர்களை இலக்கியம் நாவல்கள் படிக்கவும் வைக்க வேண்டும்" என்று ஆதித்தனார் அவர்களிடம் அகிலன் கோரினார். உடனே ஆதித்தனார் , " நீங்களே ஒரு திட்டம் தாருங்கள் " என்றார். அப்போது " ஏற்கனவே அச்சு வடிவில் புத்தகமாக பதிப்பகங்கள் மூலம் வெளிவந்த நாவல்களை மலிவு விலையில் மாதமொரு நாவலாக பெருவாரியான சாமானிய வாசகர்களுக்கு வழங்கும் மாத நாவல் " திட்டத்தைத் தந்தார் அகிலன். " நல் ஆரம்பம்.‌ இதில் முதல் நாவலாக உங்கள் நாவலே வரவேண்டும்.‌அதோடு வருடந்தோறும் முதல் நாவல் உங்கள் நாவலாகவே இருக்கவேண்டும்" என அன்புக் கட்டளை இட்டார்.‌ இப்படி உருவானதே ராணிமுத்து மாதநாவல் முன்னோடியாக ! இதில் முதல் நாவலாக அகிலனின்" பொன் மலர் " வெளிவந்தது. முதல் நாளிலேயே சில மணிநேரங்களிலேயே முதற் பதிப்பு லட்சம் பிரதிகள் விற்பனையானது ! சில நாட்களில் மறுபதிப்பும் வந்தது.‌ இந்த சிநேகிதி பொன்மலரை நினைவுபடுத்தி விட்டாள். நண்பர் VN Gritharan அவர்களுக்கு நன்றி

VN Giritharan
Akilan Kannan //இதில் முதல் நாவலாக அகிலனின்" பொன் மலர் " வெளிவந்தது.// நினைவிலுள்ளது. அப்பா ராணிமுத்துவை அதன் இரண்டாவது பிரசுரத்திலிருந்துதான் வாங்கத்தொடங்கினார். இரண்டாவது பிரசுரமாக அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பீ.ஏ' வெளிவந்தது. முதலாவது பிரசுரமான 'பொன்மலர்' கிடைக்கவில்லை. வந்த பிரதிகள் அனைத்தும் உடனடியாக விற்றுப்போனதே காரணமாகவிருக்க வேண்டும். உங்கள் பிரசுரம் வெளியிட்ட நூல்கள் பலவற்றை (அகிலன் , நா.பா உட்பட) எழுத்தாளர் திலீப்குமார் மூலம் தமிழகத்திலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். அதில் 'பொன்மலரு'ம் ஒன்று. என் பால்ய பருவத்து வாசிப்பு நினைவுகளைப் பேணுவதற்காக அவற்றில் பலவற்றை வாங்கி வைத்துள்ளேன்.

VN Giritharan
Akilan Kannan ராணிமுத்து பிரசுரத்தின் நோக்கம், தோற்றம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இவை எனக்குப் புதிய தகவல்கள். முதலிரண்டு வருட ராணிமுத்துப் பிரசுரங்கள் எங்களிடமிருந்தன.

Akilan Kannan
VN Giritharan மகிழ்ச்சி நண்பரே. பழைய இதழ்கள் சேகரிப்பு ஒரு பெட்டகம் அடுத்த தலைமுறைக்கும். அகிலனை ஆதித்தனார் தாம் தொடங்க நினைத்த வார இதழுக்கு ஆசிரியராக இருக்க வேண்டும் என்று அகிலனிடம் கேட்டார்.‌அகிலன் தனது இயலாமையைத் தெரிவித்தார். பின்னரே ராணி பிறந்தார் ! இப்படிப் பலப்பல ... தீபம் இதழில் அகிலன் எழுதிய' எழுத்தும் வாழ்க்கையும்' தொடர் நூலில் பதித்துள்ளார்.

VN Giritharan
மேலும் சில ராணிமுத்து பிரசுரங்களாக அகிலனின் 'பால் மரக்காட்டினிலே', 'வாழ்வு எங்கே' மற்றும் 'முப்பது இரவுகள் 'ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன. இவை வெளிவந்தபோது நான் ராணிமுத்து பிரசுரங்களை வாங்குவதை நிறுத்தி விட்டிருந்ததால் எனக்குக் கிடைக்கவில்லை. அண்மையில் யு டியூப் காணொளியொன்றில் இவற்றைக் கண்டெடுத்தேன்.

Akilan Kannan
VN Giritharan மகிழ்ச்சி நண்பரே . முன்னர் குறிப்பிட்டது போல வருடந்தோறும் ஜனவரி நாவல் அகிலன் நாவலாக வந்தது... பெரிய நாவலைக்கூடச் சுருக்கித் தந்தார் அகிலன் - ஆதித்தனார் அன்புக் கட்டளையால்...