- ஜீவநதி சஞ்சிகையின் எழுத்தாளர் தாமரைச்செல்வி சிறப்பிதழில் வெளியான கட்டுரை. -

எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி  அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.

தாமரைச்செல்வி அவர்களின் ஓவியங்கள் பற்றி நினைவு கூர்கையில் இன்னுமொரு நினைவும் தோன்றுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்த என் அக்கா முறையிலான உறவுக்காரரான மீனா நகுலன் (அவரும் ஓர் ஓவியர்) தாமரைச்செல்வியைப்பற்றியும், அவரது சகோதரியைப்பற்றியும் கூறியது நினைவுக்கு வருவதுண்டு. தாமரைச்செல்வியின் சகோதரி அப்பொழுது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அவரும் தாமரைச்செல்விபோல் ஓவியர். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரியும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படிப்பதாகவும், அவர் சிறந்த ஓவியரென்றும் மீனா நகுலன் அவர்கள் கூறுவதுண்டு. மீனா நகுலன் தன் இறுதிக்காலத்தில் நகுலேஸ்வரி என்னும் பெயரில் வரைந்த ஓவியங்கள் சில பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.

இவ்விதம் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பெயர் பல்வேறு  தருணங்களில் என் வாழ்வில் எதிர்பட்டுக்கொண்டிருந்தது. இன்னுமொரு விடயத்திலும் அவரது பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. எனக்குப் பிடித்த புனைபெயர்களிலொன்று. அதற்கான காரணத்தை அண்மையில் முகநூலில் அவரது  பதிவொன்றின் அல்லது எதிர்வினையொன்றின் மூலமே அறிந்துகொண்டேன்.  எழுத்தாளர் மீ.ப.சோமுவின் கல்கி சஞ்சிகயில் வெளியான நாவலான 'நந்தவனம்' நாவலில் வரும் நாயகி தாமரைச்செல்வியின் தாக்கத்தால் அவர் வைத்துக்கொண்ட  புனைபெயர் என்பதை  அப்போதே அறிந்துகொண்டேன். அது போல் மீ.பா.சோமுவின் இன்னுமொரு புகழ்பெற்ற் வரலாற்று நாவலான 'கடல் கொண்ட கனவு' நாவலின் நாயகி யாழ்நங்கையின் தாக்கமே எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் தன் புனைபெயராக 'யாழ்நங்கை' என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்பதையும் அண்மையில்தான் அறிந்தேன். அதுவும் எனக்குப் பிடித்த இன்னுமொரு புனைபெயர்.

எழுத்தாளர் தாமரைச்செல்வியின்  இயற்பெயர் ரதிதேவி. இவரது கணவர் கந்தசாமி அவர்களும் ஓர் எழுத்தாளர் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்.  வரணியூர் சி .கந்தசாமி  என்னும் பெயரில் எழுதியவர். அவரது எழுத்துலக வாழ்வுக்கு உறுதுணையாகவிருக்கும் அவரது கணவரின் எழுத்துகள் பற்றி ஒரு முறை தாமரைச்செல்வி அவர்களுடனான முகநூல் உரையாடலொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"வரணியூர் சி .கந்தசாமி என்ற பெயரில்தான் எழுதியவர் சின்ன என்று அப்போது தவறாக வந்துவிட்டது.  ஐந்தாறு கதைகள் எழுதியிருக்கிறார் . ஒருதடவை கிளிநொச்சி நீர்பாசனத்திணைக்களம் வெளியிட்ட  அருவி சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் கணவரின் 'மேட்டுக்காணி' என்ற கதை முதலாம் பரிசையும் என்து சிறுகதை பாராட்டுப்பரிசையும் பெற்றது. வருடம் சரியாக நினைவில்லை. 78-80. களாய் இருக்கலாம். முதன் முதலில் அவரது ஏமாற்றம் என்ற சிறுகதை ஈழநாடு பத்திரிகையில் வந்தது. அப்ப அவருக்கு 18 வயது. அதைவிட நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்.  பின்னர் எழுதாமல் விட்டுவிட்டார். என் எழுத்தோடு சேர்ந்து தானும் பயணித்தார்."

இந்நிலையில் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்'நாவலைப்பற்றி எழுத முடியுமா என்று ஜீவநதி சஞ்சிகை ஆசிரியர் பரணீதரன் அவர்கள் கேட்டபோது மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.  எழுத்தாளர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'மீரா பதிப்பகத்தின் மூலம் மார்கழி 1993இல் வெளியான நாவல்.

இந்நாவலை ஆராய்வதற்கு முன் தாமரைச்செல்வி அவர்களின் எழுதுலகக்கோட்பாடுகள் பற்றிச் சிந்திப்பதும் அவசியமானது. எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் 'பூங்காவனம்'  என்னும் வலைப்பூவொன்றில் வெளியான அவருடனான நேர்காணலொன்றில் அவர் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:

"சமூகத்தின் நன்மை சார்ந்தே என் படைப்புக்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். போரின் தாக்கத்தால் துயரை அனுபவித்த மக்களுக்குள் ஒருத்தியாக வாழ்ந்தவள் நான். இடப் பெயர்வுகளால் ஏற்பட்ட அத்தனை இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்தவள் நான். அந்த மக்களின் துயர் வாழ்வை என் படைப்புக்கள் மூலம் வெளியுலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அது எனது கடமை என உணர்ந்திருக்கிறேன்......  நான் சார்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் துன்பியல் வாழ்வை என்னால் இயன்ற வரை பதிவு செய்திருக்கிறேன். அந்த வாழ்வை மற்றவர்களின் பார்வைக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன்."

'தாகம்' நாவலும் அவருடைய எழுத்துலக நோக்கங்களுக்கமைய அமைந்துள்ளதை இதனை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். போர்ச்சூழற் காலத்தில் கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கல் அடைந்த துன்பங்களை, உளவியல் பாதிப்புகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. நாவலில் வரும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையைப் போர் சீர்குலைத்துள்ளதை நாவல் பேசுகின்றது. உறவுகளை இழத்தல், உடமைகளை இழத்தல், அங்க ,அவயங்களை இழத்தல் என்று ப்ல்வேறு வகைப்பட்ட இழப்புகளை நாவல் எடுத்தியம்புகின்றது. யாழ்ப்பாணம் நோக்கிய தரை வழிப்பயணம் போர்ச்சூழலில் தடுக்கப்பட்ட நிலையில், மக்களின் கிளாலிக் கடல் வழிப்பயணங்கள் பற்றியும் , அவற்றில் மக்கள் அடைந்த இழப்புகள், சிரமங்கள் பற்றியும் நாவல் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் படையினரின் விமானக்குண்டு வீச்சுத்தாக்குதல்கள் ஏற்படுத்திய அழிவுகளையும் , உளவியல் பாதிப்புகளையும் நாவல் கூடவே பதிவு செய்துள்ளது.

           - எழுத்தாளர் தாமரைச்செல்வி -

நாவலின் பிரதான கதை இதுதான்: நாவலின் பிரதான கதாபாத்திரமான போர்ச்சூழற் காலத்தில் வாழ்ந்த ஓரிளைஞனின் வாழ்க்கைக் கனவுகள் மீது எவ்விதம் அக்காலகட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும்  அரசியல் சூழல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை விபரிக்கின்றது நாவல். அவனது தீராத தாகமாகவிருந்த  கனவுகள் நிறைவேறினவா என்பதை நாவல் விபரிக்கின்றது. அதே சமயம் எவ்விதமான எதிர்விளைவுகளை இருப்புச்சூழல் அவனுக்கு வழங்கியபோதும் அவன் நிலை தளர்ந்து மூலையில் ஒடுங்கி விடவில்லை. மீண்டும் மீண்டும் துடிப்புடன், மன உறுதியுடன் எழுகின்றான். சூழலைத் துணிவுடன் எதிர்கொள்கின்றான். அவன் வாழ்க்கையில் அப்போர்ச்சூழலில் ஏற்பட்ட இழப்புகள்தாம் எத்தனை?  எதிர்கொண்ட சவால்கள்தாம் எத்தனை? எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அவன் தன்  இருப்பைக் கொண்டு செல்கின்றான்.

நாவலின் ஆரம்பத்தில் அவனது தம்பி  பார்த்திபன் இயக்கத்தில் சேர்ந்து இந்தியப்படையுடனான மோதலில்  பலியான இழப்பு பற்றிப் பேசப்படுகின்றது. அவன் நினைவாகவே அவன் தனது கராஜுக்கும் 'பார்த்திபன் மோட்டார் வேக்ஸ் ' பெயரை வைத்திருந்தான்.  அவனது கராஜில் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த ஓட்டோ மெக்கானிக்கான திருகோணமலையைச் சேர்ந்த முதியவரான பரஞ்சோதி தன் குடும்பத்தினர் அனைவரையும் படையினரின் தாக்குதலில் இழந்திருந்தார். அவனது அப்பா சைக்கிள் கடை வைத்து அவனது குடும்பத்தைக் காப்பாற்றியவர் தனது குடிப்பழகத்தினால் அதனையும் சரிவரச் செய்ய முடியாமலிருந்தவர் எண்பத்துமூன்றில் திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப்பலியெடுத்த தாக்குதலைத்தொடர்ந்து பரந்தனில் பொதுமக்கள் மேல் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறுபேர்களிலொருவர். நாவலின் இறுதியில் அவனது மச்சானும், அவனது நெஞ்சில் நிறைந்தவளுமான மச்சாள் மனோஹரியின் அண்ணன் தேவாவையும் கிளாலில் பயணத்தின்போது படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலியெடுக்கின்றது. தேவா மட்டும் திரும்பி வந்திருந்தால் அவனுக்கும்  மனோஹரிக்கும் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அவனது மறைவால் நிர்க்கதியாகித் தவித்துக்கொண்டிருந்த மாமி குடும்பத்தினருக்கு மனோஹரியைத் திருமணம் செய்ய சம்மதித்துக் கனடா மாப்பிள்ளையொருவர் வருகின்றார். அச்சந்தர்ப்பத்தில் அவளுள்ள நிலையில் தன்னைக்கட்டி வறுமையில் வாடுவதை விட அவளாவது நன்றாகவிருக்கட்டுமென அவளையும் விட்டுக்கொடுக்கின்றான். அவளது இழப்புடன் நாவல் முற்றுப் பெறுகிறது. அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய இழப்பது. எத்தனை வருடங்களாக அவன் மனோஹரியை மனத்துக்குள் பூட்டி வைத்து உருகியிருப்பான். அவள் மீதான அவனது காதலை மென்மையாக நாவலாசிரியர் கையாண்டிருக்கின்றார். அந்தக் காதலின் தூய்மையினை அவர் வாசகர்கள் மனங்களை ஈர்க்கும் வகையில் நாவல் முழுவதும் வெளிப்படுத்தியிருப்பார்.

நாவலின் நாயகனான சதானந்தனின் பாத்திரப்படைப்பு நன்கு நாவலில் அமைந்துள்ளது. அது நாவலாசிரியரின் முக்கிய வெற்றி. வறுமை, போர் என்று எத்தனை விதமான எதிர்ப்புகளை அவனது இருப்பு எதிர்கொள்கின்றது. இறுதியில் அவனது மனங்கவர்ந்த மச்சாள் மனோஹரியையும் இழந்து  விடுகின்றான். மனோஹரியின் குடும்பத்தைத் தாங்கிப்பிடித்த அவளது சகோதரன் தேவா கிளாலியில் படையினரின் தாக்குதலுக்குப் பலியாகிவிட்ட நிலையில், அவளை மணம் முடிக்கச் சம்மதம் தெரிவிக்கின்றான் கனடா மாப்பிள்ளை.  அவனை அவள் கட்டுவது அவளுக்கும் , அவளது குடும்பத்துக்கும் நல்லதென்று ஒதுங்கி விடுகின்றான் சதானந்தன். அப்பொழுது  அவன் கூறுவான்:

"மனம் தானே.. இதுவரைக்கும் எத்தனை இழப்பு வந்தது. எல்லாத்தையும் தாங்கினது தானே. இதையும் தாங்கும். கிளாலியில படகில வெட்டியும் சுட்டும் எத்தனைபேர் செத்தவை. சனம் என்ன போய் வரமால் விட்டதுகளே. எத்தினை இழப்பு வந்தாலும் தாங்கிக்கொண்டு வாழத்தானே வேணும்."

இந்த ஆரோக்கியமான இருப்பை எதிர்கொள்ளும் போக்கு அவனது மனப்போக்கு  முக்கியமானது. நாவலின் முக்கியமானதோர் அம்சம். போரினால் பாதிக்கப்பட்ட ,இழப்புகளைச் சந்தித்த  அனைவரின் பிரதிநிதியாக இங்கு சதானந்தன் உருவாக்கப்பட்டிருக்கின்றான். இழப்புகள் எத்தனைதான் துயரகரமானவையாக இருந்தாலும், தாங்க முடியாதவைகளாகவிருந்தாலும் அவற்றைக் கண்டு ஓடி விட முடியாது. வாடி மூலையில் முடங்கி விட முடியாது. அவற்றையும் தாங்கிக்கொண்டு இருப்பில் எதிர்நீச்சல் போட வேண்டும். இதுதான் நாவல் எடுத்துரைக்கும் பிரதான கருத்து. இதனைத்தான் நாவலின் நாயகன் சதானந்தனும் செய்கின்றான். சமூக, அரசியல், பொருளியற் பிரச்சினைகள் அவனை ஆட்டிப்படைக்கின்றன. இறுதியில் அரசியற் பிரச்சினை உருவாக்கிய போர்ச்சூழல், பொருளியற் பிரச்சினை, சமூகப் பிரச்சினைகள் இவையாவும்  ஒன்றிணைந்து அவன் காதலுக்குரியவளையும் அவனிடமிருந்து பிரித்து விடுகின்றன. இருந்தும் அவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு தன் வாழ்வை நம்பிக்கையுடன் தொடர்கின்றான் அவன்.

சதானந்தனை நினைக்கையில் எனக்கு நாவலாசிரியர் தாமரைச்செல்வியின் வாழ்க்கையும் நினைவுக்கு வருகின்றது. நேர்காணலொன்றில் அல்லது கட்டுரையொன்றில்  அவர் போர்ச்சூழலில் இடத்துக்கிடம் ஓடி ஓடி தப்பிப்பிழைத்த அனுபவங்களை விபரித்திருந்ததை வாசித்தது நினைவுக்கு வருகின்றது.  முன்னர் குறிப்பிட்டுள்ள 'பூங்காவனம்' நேர்காணலிலும் இதனை அவர் விபரித்திருக்கின்றார். "போரின் தாக்கத்தால் துயரை அனுபவித்த மக்களுக்குள் ஒருத்தியாக வாழ்ந்தவள் நான். இடப் பெயர்வுகளால் ஏற்பட்ட அத்தனை இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்தவள் நான்" என்று குறிப்பிட்டிருக்கின்றார். அச்சூழல்களையெல்லாம் உறுதியுடன் எதிர்கொண்ட அவர் வாழ்க்கையில் இன்றுவரை தளர்ந்து போய்விடவில்லை.  இன்னும் எழுதிக்கொண்டேயிருக்கின்றார்.  இத்தகைய அவரது உறுதியான மனப்போக்கின் விளைவுதான் இத்தகைய ஆளுமை மிக்க நாயகன் சதானந்தனின் படைப்புமென்று தோன்றுகின்றது.

தன் எழுத்துகளைப் பற்றிக்குறிப்பிடுகையில் மேலே சுட்டிக்காட்டியபடி " நான் சார்ந்த மண்ணில் வாழும் மனிதர்களின் துன்பியல் வாழ்வை என்னால் இயன்ற வரை பதிவு செய்திருக்கிறேன். அந்த வாழ்வை மற்றவர்களின் பார்வைக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன்." என்று கூறியிருக்கின்றார் தாமரைச்செல்வி. நாவல் 'தாக'மும் அதனையே செய்கின்றது. போர்ச்சூழல் மிகுந்திருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் எவ்விதம் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, உள்வாங்கி, தம் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள் என்பதை விபரிப்பதன்  மூபம் அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல். ஒரு காலகட்ட ஆவணப்பதிவும் கூட.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.