தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள்  பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை.  'மாமனிதர்'  சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.  தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.

பணமுடிப்புடன் கூடிய விருதுகள் அவற்றைப்  பெறும் எழுத்தாளர்களுக்கு பொருளியல்ரீதியில் உதவும் தன்மை மிக்கவை. விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளைப் பொறுத்தவரையில் அவை பின்வரும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

1. அனுப்பப்படும் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் பலர் அனுப்புவதில்லை.  
2. நடுவர்களின் விருப்பு, வெறுப்புக்கேற்பத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சில சமயங்களில் நடுவர்களுடனான அறிமுகம் விருதுகளைப்பெற உதவுகின்றது.

மேலும் எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு விருதுகள் கிடைக்கின்றனவா என்றால் பெரும்பாலும் அவ்வாறு கிடைப்பதில்லை.  சில சமயங்களில் சரியான படைப்புகளுக்கும் விருதுகள் கிடைப்பதுண்டு. உதாரணத்துக்கு ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கு விருது கிடைத்தது. ஆனால் கிடைத்திருக்க வேண்டியது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலுக்கு. தமிழகத்தின் வெகுசன எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளுக்கும் விருதுகள்  தாராளமாகக் கிடைத்துள்ளன.  இது அவற்றைத் தேர்வு செய்த நடுவர்களின் இலக்கிய ஆளுமையினை, ஆழத்தைப் புலப்படுத்துகின்றன.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான எஸ்.பொ.வுக்கு சாகித்திய விருது கிடைக்கவில்லை. மு.தளையசிங்கத்துக்குக் கிடைக்கவில்லை. முக்கிய தமிழ்க் கவிஞர்களுக்குக் ( வ.ஐ.ச.ஜெயபாலன் உட்பட)  கிடைக்கவில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கும் சாகித்திய விருது கிடைக்கவில்லை. இப்படி  கூறிக்கொண்டே செல்லலாம். இது விருதுகளின் தன்மையினை வெளிப்படுத்தப்போதுமானது.

என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த விருதுப்பித்து மனப்பான்மையிலிருந்து வெளிவந்து தம் ஆற்றலைத் தம் படைப்புகளில் காட்ட வேண்டும்.  உண்மையான விருது அப்படைப்புகளை வாசகர்கள் இனங்கண்டு வாசித்து மகிழ்வதில்தானுண்டு. இவ்விதம் வாசகர்களால் வாசிக்கப்பட்டு காலத்தில் அழியாது நிலைத்து நிற்கும் படைப்புகள் உண்மையில் விருது பெற்ற படைப்புகளே.