கவிஞர் திருமாவளவனைப் பற்றிய நினைவுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இன்றும் அவ்விதமே எழுந்தது. இப்பொழுதுதான் உணர்ந்தேன் அவரது நினைவுதினம் அக்டோபர் ஐந்து, 2021. எவ்வளவு இலகுவாக அவரை மறந்து விட்டிருக்கின்றோமென்று  தோன்றியது. கவிஞர் திருமாவளவனைப் பற்றி எண்ணியதுமே கூடவே கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவும் எழுந்து விடுகின்றது. திருமாவளவனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். திருமாவளவன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் பதிவுகள் இணைய இதழ் மூலம் அறிந்து மனம் வாடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கவிஞர் திருமாவளவன் மறைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் அக்டோபர் 15, 2015 அன்று அவரும் மறைந்து விட்டார்.

சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இலக்கியம் பற்றி  என்னுடன் கதைத்த, கதைக்கும்  கனடா எழுத்தாளர்கள் வெகு சிலர். பலரும் இலக்கியம் தவிர்ந்த வேறு  பல விடயங்களைத்தான் கதைப்பார்கள். இவ்விதம் இலக்கியம் பற்றிக் கதைத்த ஒரு சிலரில் கவிஞர் திருமாவளவன் ஒருவர். கவிஞராக அறியப்பட்டாலும் சிறந்த சிறுகதையாசிரியரும் கூட. இது போல் பதிவுகள் இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பும், என் மீது மிகுந்த அன்பும் வைத்திருந்தவர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இறுதிவரை பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவ்வப்போது கனடா வந்திருந்தபோது என்னை நேரில் சந்திக்க முடியாமல் போனது பற்றி வருந்தி எழுதிக்கொண்டிருந்தார்.

அக்டோபரில் மறைந்த இவ்வீர் இலக்கிய ஆளுமைகளையும் காலம் கடந்தாவது இத்தருணத்தில் நினைவு கொள்கின்றேன். கூடவே கவிஞர் திருமாவளவன் பற்றி அவ்வப்போது எழுதிய  எனது குறிப்புகளிலிருந்து சில பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன். கூடவே வெங்கட் சாமிநாதன் திருமாவளவனின் உடல் நிலை குறித்து அனுப்பிய மின்னஞ்சலையும் பகிர்ந்துகொள்கின்றேன்.


கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் மின்னஞ்சல்:

Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>    10/02/15 at 2:08 AM

அன்புள்ள நண்பர்களுக்கு, இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அனபர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது ;பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது. எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் e/mail  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா? அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா


கவிஞர் திருமாவளவன பற்றிய சில குறிப்புகள்....

எழுத்தாளர் கலைச்செல்வன் கவிஞர் திருமாவளவனின் கூடப்பிறந்த சகோதரர். ஒருமுறை அவர் கனடாவுக்கு வருகை தந்திருந்தபோது திருமாவளவன் கலைச்செல்வன் என்னைச்சந்திக்க விரும்புவதாக எனக்குத் தொலைபேசியினூடு அழைப்பு விடுத்திருந்தார். அன்று திருமாவளவனின் இருப்பிடம் சென்று, அவரையும், கலைச்செல்வனையும்  அழைத்துக்கொண்டு விக்டோரியாப் பார்க் வீதியும், டான்ஃபோர்த் வீதியும் சந்திக்குமிடத்தில், வடகிழக்குத்திசையிலிருந்த உணவகமாகவும், இரவு கேளிக்கை விடுதியாகவும் இயங்கிக்கொண்டிருந்த 'ட்ரொபிகல் நைற்ஸ்' (Tropical Nights) உணவகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அந்த கேளிக்கை விடுதியில் பின்னர் ஒரு சமயம் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அக்கேளிக்கை விடுதி நிரந்தரமாகவே மூடப்பட்டு விட்டது. இன்று அந்தக் கேளிக்கை விடுதி இருந்த இடத்தில் பள்ளிவாசலொன்று அமைந்திருக்கின்றது.  அவ்வுணவகத்தில் நான் திருமாவளவன், கலைச்செல்வனுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டிருந்தேன். மறக்க முடியாத சந்திப்புகளிலொன்றாக அச்சந்திப்பு அமைந்து  விட்டது,


கவிஞர் திருமாவளவனின் கவிதைகளில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் புகலிடம் கொடுத்த நகர்கள் பற்றிய தகவல்கள், உணர்வுகள் காணப்படுகின்றன. அவரது 'நுகத்தடி மனிதர்' புகலிடம்  தந்த மாநகர்கள் அகதியொருவருக்கு  அளித்த அனுபவங்களை விபரிக்கும். நகரத்தின் தொடர்மாடிக்கட்டடங்களில் உறைந்து வாழும் அகதிகளின் இருப்பிடங்களைப்பற்றி கூறுகையில்,

'புகைவண்டியென நீண்டு கிடக்கும்
நகரத்தொடர்வீட்டுக் கட்டடத்தில்
நம்மவர் உறையும்
கூடு. ; என்று கூறும்.

இந்த புகைவண்டித்தொடரின் பெட்டிகளில் உறைந்துகிடக்கும் புகலிடம் நாடிய தமிழர்களின் இருப்பினை எடுத்துரைக்கும் கவிதைகள் திருமாவளவனுடையது.

'சிகரட் சாம்பரில் மூழ்கிய வட்டிலும்
பியர் போத்தல் எச்சங்களும்
குலைத்துப்போட்ட சீட்டுக்கட்டும்
குண்டடிபட்ட ஈழக்கிராமத்து
காட்சிப்புலமென விரியும்
முன்கூடம்'
இங்கு
'பால்ய வயதுப்பகிடிக்கதைகள்
நம்மவர் புரியும் நாட்டு நடப்புகள்
வெட்டிப்பேச்சு
வெடிச்சிரிப்பொலி'

என விரியும் புகலிட அகதித்தமிழரின் வாழ்வை புதிய சூழலின் சமுதாய அமைப்பு எவ்விதம் நுகத்தடி மனிதராக்கி விடுகின்றதென்பதை விபரிக்கும் கவிதை 'நுகத்தடி மனிதர்'.

இவ்விதமான புகலிடத்தமிழரின் வாழ்க்கையானது 'சூத்திரக் கிணற்றை சுற்றிப்பழகிய மாடென' நகரின் இயந்திரமயமான வாழ்வழுத்த, அந்த வாழ்வு அவர்களைச்சுற்றிப்போட்ட நுகத்தடியினை  விலக்கிட ஓரளவாவது உதவுகின்றது. இவ்விதமான நிகழ்வுகள் பற்றிய எண்ணங்களில் நனைந்து விடுகிறது மனசு. மேலும் கவிதையானது எவ்விதம் புகலிடமளித்த மாநகரின் சமுதாய  அமைப்பானது மீண்டும் மீண்டும் நுகத்தடிக்கீழ் மானுடரைக்கொண்டு சேர்த்துவிடுகின்றது என்பதைக் கீழுள்ள் வரிகள் வாயிலாக விபரிக்கும்:

'கடன் தந்தவனின் வட்டிக்கணக்கும்
கிரடிக்காட் நிலுவையும்
பெல்கனடாவின் சிவப்புச்சிட்டையும்
கண்ணீர் கரைத்து வந்த
அம்மாவின் கடிதமும்
தங்கையின் வயதும்
தம்பியின் கானற்கனவும்
சுமையாய் இறங்கும்.
மீளத் தலை
மீளும்நுகத்தடிக்கீழ்.'

திருமாவளவனின் 'பனிவயல் உழவு' கவிதை 'டொராண்டோ' பெருநகரைக்காமக்கிழத்தியாக உருவகிக்கும். அதிகாலையில் அதன் இருளாடை கலைய, வெண்பனி உள்ளாடையுடன் எடுப்பாய்  வனப்புக்காட்டுக் காமக்கிழத்தியாக நகர் கவிஞருக்குப்புலப்படுகின்றது:

' காமக்கிழத்தியியென
இருளாடை களைந்து வெண்பனி
உள்ளாடையுள்
எடுப்பாய் உடல் வனப்புக் காட்டும்
ரொறான்ரோ நகரி'.

காமக்கிழத்தியின் உடல் தழுவிய  காமக்கிறக்கத்தில் ஒன்டாரியோ வாவியிருக்க, கட்டிலின் விளிம்பில் விடிவிளக்கா நாணி நிற்பாராம் சூரியனார்:

உடல் தழுவிக்
காமக் கிறக்கத்தில்
சலனமற்றுக்கிடக்கும்
ஒன்ராரியோ நீர்வாவி
கட்டில் விளிம்பில்
விடிவிளக்கென
நாணிக்கிடப்பார் சூரியனார்'.

இவ்விதமாக விடிவிளக்கெனத்தென்படும் சூரியனார் மறுகணமே கவிஞருக்கு 'துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற' அகதியாகத்தென்படுவார்.

'ஆயுதத் துரத்த
நெடுந்தூரம் கடந்த
பரதேசி நான்
உனை யார் துரத்த
இங்கு வந்து அகதியானாய்?'

என்று கேள்விக்கணையினைத்தொடுக்கின்றார் கவிஞர் நகரத்துச்சூரியனைப்பார்த்து.

அதே சமயம் மாநகரானது மானுட வாழ்வை நடைப்பிணமாக்கிவிடுகிறது.  ஆலைகளின் இயந்திரங்கள் பிழிந்து துப்பிவிட்ட சக்கையாகிவிடுகிறது மானுட இருப்பு. இவ்விதமான மாநகரில்  மானுடம் இன்னும் செத்துவிடவில்லை.  நகரில் தப்பிப்பிழைத்திருக்கும் ஆலாக்கள், புறாக்கள் போன்ற புள்ளினங்களுக்கு உணவூட்டி மகிழும் உள்ளங்களும் இல்லாமலில்லை. தாமிர  பொற்கூந்தல்; கருமணி சுருட்டை முடி, மஞ்சள் முகம், எதியோப்பிய மீன் விழிகள் எனப்பபல்லினத்துபெண்களுடன் கைகள் இணைந்து களிப்புற்றிருக்கிறார்களாம எம் இளசுகள. இவற்றை

' மாலை
எந்திரம் பிழிந்து துப்பிவிட்ட
உடல் மீளும்'
'தாமிர பொற்கூந்தல்
கருமணி சுருட்டைமுடி
மஞ்சள் முகத்தில்
குறுகி சிறுத்த கண்கள்
எதியோப்பிய மீன்விழிகள்
இவர்களோடு
கை கோர்த்து மகிழ்ந்திருக்கும்
எங்கள் இளசுகள்'

என்னும் வரிகளினூடு வெளிப்படுத்தும் கவிதையிது.

ஈழக்கிராமமொன்றின் காட்சிப்புலமாக விரியும் நகரத்துக் கொங்கிறீட் புகைவண்டித்தொடர்ப் பெட்டியொன்றின் காட்சிப்புலத்தைக்கொண்ட மாநகரத்து வாழ்வைக்கூறும் திருமாவளவனின்  கவிதை.