- எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படம் -

எழுத்தாளரும், 'நவீன விருட்சம்' சஞ்சிகை ஆசிரியருமான  அழகியசிங்கர் அவர்கள் போட்டிருந்த இந்தப்பதிவு   மனத்தைத்தொட்டது. அவரது நண்பரும் , எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மூத்த புதல்வருமான ராமச்சந்திரன் அவர்களின் மறைவு பற்றிய பதிவு. இப்பதிவு ராமச்சந்திரனின் மறைவு பற்றிய தகவலுடன் , அவருடைய ஆளுமையையும் விபரிக்கின்றது.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி  எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.என் பதின்ம வயதுகளில் கல்கியில் வெளியான அவரது 'தீராத விளையாட்டு' தொடர்கதையை விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது மகனின் மறைவுச்செய்தி கு.அழகிரிசாமி அவர்களையும் நினைவுபடுத்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல். மேற்படி பதிவில் அழகியசிங்கர் அவர்கள் காலையில் மறைந்த ராமச்சந்திரனுக்கு இறுதி அஞ்சலிக்காகச் சென்றபோது ஏற்கனவே அவரைத் தகனம் செய்துவிட்டிருந்தார்கள். பதிவில் அழகிரிசாமியின் குடும்பப் புகைப்படத்தினையும் அழகியசிங்கர் பகிர்ந்திருந்தார். அதில் ராமச்சந்திரன் சிறுவனாகவிருக்கின்றார்.


'நவீன விருட்சம்' சஞ்சிகை ஆசிரியருமான  அழகியசிங்கரின் முகநூற் பதிவு!

துளி

கு.அழகிரிசாமியின் மூத்தப் புதல்வரும் என் நண்பரும் ராமச்சந்திரன் இறந்து விட்டார்.   கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார்.  அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.  தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு  வருவார்.  தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.  முதல் கூட்டத்தில் பேச திருப்பூர் கிருஷ்ணன், இலக்கியச் சிந்தனை லட்சுமணன் என்று எல்லோரையும் அழைத்திருந்தார்.  அவர்தான் பேசி கூட்டத்தைத் துவக்கப் போகிறார் என்று நினைத்திருந்தென்.   திடீரென்று என்னைப் பேச அழைத்துக் கூட்டத்தைத் துவங்குமாறு கூறினார் ராமசந்திரன். .  எனக்குச் சிறிது சங்கடம்.  அக்கூட்டத்தை நான் ஆரம்பித்து வைத்தேன்.  எப்போதும் ஒதுங்கி ஒரு அந்நியன் மாதிரி உட்கார்ந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வார்.   ஆழ்வார்பேட்டையில் நான் நடத்திய கூட்டங்களுக்கு வராமல் இருக்க மாட்டார்.  கூட்டம் முடிந்தவுடன் எதாவது ஓட்டலுக்குச் செல்வோம்.  கொரோனா காலத்தில் அவரை நான் சந்திக்கவே இல்லை.  அவ்வப்போது போனில் பேசிக்கொள்வோம்.  தன் உடல்நிலையைப் பற்றிக் கூறுவார்.  அவர் தன் கூடவே தன்னைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆள் வைத்திருந்தார். கடைசி வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்தவர் குவிகம் கிருபானந்தன். தமிழ் அமுதம் கூட்டம் ரொம்ப மாதங்களாக குவிகம் இல்லத்தில்தான் நடந்தது   எனக்கு ராமச்சந்திரன் நிலையை நினைத்து சந்று வருத்தமாக இருந்தது.  திருமணம் செய்து கொள்ளாதவர்.  ராமச்சந்திரன் புகைப்படத்தில் கூட தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்.  புத்தக் காட்சி நடக்கும் நாளெல்லாம் எங்களுக்கு டிபன் வாங்கிக் கொடுத்துவிட்டு சில நேரம் உட்கார்ந்திருப்பார்.    

கொரோனாவின்கொரானாவின்போது அவரைப் பார்க்கவில்லை.  இன்று காலை இறந்து விட்டார்.  அவசரம் அவசரமாகத் தகனம் செய்வதற்கு முன் போய்ப் பார்க்க நானும், கிருபானந்தனும்  முயன்றோம். நாங்கள் போய்ச் சேர்வதற்குள் தகனம் செய்து விட்டார்கள்.  பெரிய ஏமாற்றம்.