பத்திரிகைகள், சஞ்சிகைகள் கலை, இலக்கியத்துக்குப் பங்களிப்பதுடன் ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் அவற்றினூடு அவை வெளிவந்த காலகட்டத்துச் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழலை அறிய முடியும், கலை, இலக்கிய வெளிப்பாடுகளை அறிய முடியும், தீய சக்திகள் சமூகத்தில் புரிந்த பல்வகைப்பட்ட வன்முறைகளைப் பற்றிய தகவல்களை அறிய முடியும். இவ்வகையில் யாழ்ப்பாணத்தில் சைவ பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட இந்து சாதனம் பத்திரிகையும் பல்வேறு தகவல்களைத் தாங்கி நிற்குமோர் ஆவணச்சுரங்கமாக விளங்குகின்றது. 1889ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வெளியாகும் பத்திரிகையிது என்பதும் குறிப்பிடத்தக்கது.கலை, இலக்கியத்திறனாய்வாளர்கள் பலரும் தவறவிட்டதொரு விடயம் இந்து சாதனம் பத்திரிகையின் கலை, இலக்கியப் பங்களிப்பை ஆராயத் தவறியது. அதன் பழைய இதழ்களை மேய்ந்தபோது அதில் அவ்வப்போது சிறுகதை, கவிதை, நாடகம்,தொடர்கதை, இலக்கிய மற்றும் ஆய்வுக்கட்டுரை  என இலக்கியத்தின் பல்வகை ஆக்கங்களும் வெளிவந்துள்ளதை அறிய முடிந்தது. உதாரணத்துக்குச் சிலவற்றை இங்கு தருகின்றேன். இவ்விடயத்தில்  இந்து சாதனத்தின் கலை, இலக்கியப் பங்களிப்பு விரிவாக ஆராயப்பட வேண்டுமென்ற எண்ணத்தை இப்படைப்புகள்  சுட்டிக்காட்டுகின்றன.இந்து சாதனம் சிறுவர் இலக்கியத்துக்கும் பங்களிப்பு செய்துள்ளது. அவ்வப்போது பாலர் பகுதியும் வெளியாகியுள்ளது. சுப்பு மாமா என்பவர் தனது மருமக்களாகிய குழந்தைகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அப்பகுதிகளில் பல அமைந்திருந்ததையும் காணமுடிந்தது.1. தொடர்கதை - 'ஜீவப் பரசாகரன்' - மாசிலாமணி - சிவதாசன் (திருக்கோனமலை) - 11.6.1936 - அத்தியாயம் ஒன்று.
2. சிறுகதை - கருணாவதியின் தூய்மை அல்லது கடற்கரையோரத்தில் காதற் சண்டைக் கோரம். எழுதியவர் - 'சிலாக்கோன்' - 3.6.1935 வெளியான இந்து சாதனம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
3. சிறுகதை - நீரிற் குமிழி - 'கேது -  9.7.1936
4. சிறுகதை - ஆசையால் வந்த மோசம் - 'ரத்தின' - 18.6.1936

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.