- கடல்புறா நாவலின் முதல் அத்தியாயப் பக்கம். ஓவியர் - லதா -

எழுத்தாளர் சாண்டில்யனின் (இயற்பெயர்  பாஷ்யம்) .  மகாகவி பாரதியார் மறைந்த அதே செப்டம்பர் 11இல்தான் சாண்டில்யனும் மறைந்தார். பேராசிரியர் பசுபதி அவர்களின் 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் வெளியான சாண்டில்யனின் நினைவு நாட் பதிவின் மூலம் சாண்டில்யனின் நினைவு தினமும் செப்டெம்பர் 11 என்பதையறிந்தேன்.

மிக நீண்ட சொற்றொடர்களை உள்ளடக்கிய இவரது நாவல்களை பரபரப்பான நவகாலச்சூழலில் வாழும் வாசகர்களை  வாசிக்க வைத்த எழுத்துத்திறமை மிக்கவராக விளங்கியவர் சாண்டில்யன். உதாரணத்துக்கு ஒரு வரி:

"'காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப்போர்  பாடத் திறமினோ' என்று கலிங்கத்துப் பரணியில் ,பரணிக்கோர் புலவரான செயங்கொண்டார் தமிழக மகளிரை அறைகூவி அழைத்து, மகளிர் தத்தம் கணவருடன் நடத்திய கலவிப் போரையும் கழற்சென்னியான முதலாம் குலோத்துங்கன்  கலிங்கத்தின்மீது நடத்திய ஆயுதப் போரையும் சிலேடை கோத்துப் பாடியது பல வருஷங்களுக்குப் பின்புதானென்றாலும், அந்தப் போருக்கு வித்திடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு  முன்பே காரணமாயிருந்த கலிங்கத்தின்  பாலூர்ப்பெருந்துறை, சித்திரா பெளர்ணமியின் அந்திமாலை நேரத்தில் இயற்கை வனப்பின் எல்லையை எட்டிக்கொண்டிருந்தாலும், இயற்கை வனப்புடன் இணையும் எத்தனை எத்தனையோ செயற்கைக் கஷ்ட்டங்களையும்  சுட்டிக்காட்டிச் சென்றுகொண்டுதானிருந்தது."

ஒரு வரி ஒரு பந்தி வரை நீண்டுள்ளது. இது அவரது புகழ்பெற்ற 'கடல்புறா' நாவலின் முதல் பாகத்தின் ஆரம்ப வரி.  இவ்விதமான அவரது நீண்ட வரிகளுக்கு அடிமையாகிக் கிடந்தார்கள் வாசகர்கள். இன்றும் அவரது நூல்கள் விற்பனையிலுள்ளன என்பது அவரது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த வரலாற்றுப் பாத்திரம் இளைய பல்லவனென்று கடல்புறாவில் அழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானே.  இளைய பல்லவன்' கருணாகரத் தொண்டைமான்! சாண்டில்யனின் புகழ்மிக்க வரலாற்று நாயகன்!

இளைய பல்லவன் என்னைக் கவர்ந்ததற்கு இன்னுமொரு காரணமுமுண்டு. அது: யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள தொண்டைமானாறுக் கால்வாயை வெட்டுவித்தவன் இவனே என்னும்  வரலாறுதான்.  இவனை வைத்துக் செயங்கொண்டார் கலிங்கத்து வெற்றியை மையமாக வைத்துக் கலிங்கத்துப் பரணி பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் வரலாற்றுப் புகழ்மிக்க சோழர் படைத்தளபதிகளில் முதன்மையானவன்.

இவரைப்பற்றி விக்கிபீடியாக் குறிப்பு பின்வருமாறு கூறுகின்றது - https://ta.wikipedia.org/s/ul8 -:

கருணாகரத் தொண்டைமான் முதலாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் மற்றும் சிறந்த படைத்தளபதி ஆவார். குலோத்துங்கர் இலங்கை மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றியதில் கருணாகரரின் பங்கு மகத்தானது. செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன. முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் விக்ரம சோழருக்கும் அமைச்சராகப் பணிபுரிந்தார்.

கருணாகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தார்.  இவர் முதலாம் குலோத்துங்கரின் நண்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மண்டையாழ்வார்.

சோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார். அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.

கலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் [12] என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்[13][14], முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.

கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.