மகாகவி பாரதியாரின் கண்ணம்மாப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது. அவரது நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
மானுட உணர்வுகளில் காதல் உணர்வுகள் அற்புதமானவைு. ஏனென்றால் குடும்ப உறவுகள் தவிர்த்து முதல் முறையாக இன்னொருவருடன் உயிரும், உள்ளமும் கலந்து உறவாகும் உறவு , உணர்வு காதல். அவ்வகையில் அது மானுடரின் பருவ வளர்ச்சியில் முக்கியமானதொரு படி.
முதற்காதலோ, நிறைவேறிய காதலோ, நிறைவேறாத காதலோ, ஒரு தலைக் காதலோ அது எவ்வகையாகவிருப்பினும் அக்காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோரிடத்தைப் பிடித்த உணர்வுகள் என்றால் அது மிகையான கூற்றல்ல. நான் கூறுவது தூய்மையான காதலுணர்வுகளை. அவ்வுணர்வுகளில் தன்னலம் இருக்காது. பழி வாங்கும் வெறி இருக்காது. தன் காதலுக்குரியவரின் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்கும். காதல் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் வரும் 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' பாடல்தான்.

கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான எம்.ஏ.நுஃமான் 'மார்க்சியமும், இலக்கியத்திறனாய்வும்'  என்னும் நூலில் இக்கவிதை பற்றிப் பின்வருமாறு கூறுவார்:

".. கலைகள் எப்போதுமே கருத்து நிலைப்பட்டவையல்ல: அதாவது ஒரு வெளிப்படையான சமூகக் கருத்தை மட்டும் கூறுவன அல்ல. கலையில் அது ஒரு அம்சம்தான். பெரும்பாலான கலைகள் ஒரு குறிப்பிட்ட மனித உணர்வை , ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை,  ஒரு குறிப்பிட்ட மனித ஆற்றலை வெளிப்படுத்துபவையே..  வெவ்வேறு கலை வடிவங்களில் இருந்து நாம் இதற்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். ... இங்கு ஒரு கவிதையையே உதாரணமாகக் காட்ட விரும்புகின்றேன். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பாரதியின் பாடல் ஒன்றையே தருகின்றேன். இது பாரதியின் அற்புதமான கவிதைகளில் ஒன்று. தமிழிலேயே உள்ள அற்புதமான கவிதைகளில் ஒன்று என்றும் நான் இதைச்சொல்வேன்.  இதற்குக் கண்ணன், தெய்வீகக்காதல் என்றெல்லாம் விளக்கம் சொல்வது  அபத்தம்.  காதல் உணர்வை இக்கவிதையில்  ஒரு அற்புதமான கலை ஆக்கி இருக்கிறான் பாரதி. எத்தனை முறை பாடினாலும் எனக்குச் சலிப்பதில்லை. இந்தக் கவிதை மனிதனின்  காதல் உணர்வு உள்ளவரை இக்கவிதையும் வாழும் என்றுதான் நான் நினைக்கின்றேன்." [பக்கம் 37 & 38]

இப்பாடலின் இசையும், ஜெமினி கணேசன் &  சாவித்திரியின் நடிப்பும் , பாடகர்களின் குரலினிமையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்

https://www.youtube.com/watch?v=AwazG88Jhug

வரிகள் முழுமையாக -

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)


நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
(காற்று)