கவிஞர் மகுடேசுவரன் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"தமிழ் இலக்கணப்படி, ‘ர’கர வரிசை எழுத்துகளில் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வராது. பிறமொழிச் சொற்களில்கூட ’ர’கர எழுத்து முதலாய் வந்தால் அதன் முன்னே உயிரெழுத்தை இட்டே எழுதுவோம். ரங்கன் – அரங்கன். ராமசாமி – இராமசாமி. "

ஆனால் பிறமொழிச் சொற்களில்  ர என்னும் எழுத்தை சொல்லுக்கு முதலில் வைத்து எழுதும் வழக்கம் ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது . இது பற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் தனது 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" நூலில் பின்வருமாறு கூறுவார்:

"இக்காலத்தில் ரகரமும்  பிறமொழிச் சொற்களில் மொழி முதல் எழுத்தாக வரலாம். தொன்று தொட்டு அரங்கநாதன், இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதால் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே எழுத வேண்டுமென்பதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம் என்று எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள்படும். ஆதலால், தொன்று தொட்டு  எழுதி வருவதற்கு மட்டும் அகரம், இகரம் பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அவ்வாறு செய்ய வேண்டுவதில்லை."

இதுபோல் ட என்னும் சொல்லையும் பிறமொழிச் சொற்களுக்குப் பாவிக்கலாம் என்பது அவர் எண்ணம்.  

மகாகவி பாரதியார் கூடத் தனது 'சத்ரபதி சிவாஜி' என்னும் கவிதையில்

'வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்'

என்று கூறுகையில் 'ராமனும்' என்று எழுதியிருக்கின்றார்.

'ரொட்டி'யைத் தமிழ்ப்படுத்தி எழுதினால் யாருக்கும் புரியப்போவதில்லை.

மேலுமவர் 'ரொம்ப' என்னும் சொல் பற்றியும் நிரம்பவே மனம் வருந்தி 'நிரம்ப என்னும் தமிழ்ச் சொல்லைத்திரித்து ரொம்பவே என்று பாவிக்கின்றார்கள்' என்று கூறியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கைத் தமிழர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் 'ரொம்ப' என்னும் சொல்லப்பாவிப்பதில்லை. 'நிரப்புங்கள்' என நிரப்பு என்னும் சொல்லைத்தான் பெரிதும் பாவிக்கின்றார்கள். நிரம்ப என்னும் சொல்லைத்தான் பாவிக்கின்றார்கள்.  தமிழகத்தமிழர்களே 'ரொம்ப என்னும் சொல்லை ரொம்ப நாளாகப்' பாவித்து வருகின்றார்கள். அவர்களால் இனி அதை மாற்ற முடியாத அளவுக்கு அவர்களது பேச்சு வழக்கில், நவகால இலக்கியங்களில் (திரைப்படப் பாடல்களுட்பட) புகுந்துவிட்டது. வழக்கில் உள்ள பல சொற்களை உள் வாங்கிய வரலாறு தமிழ் இலக்கணத்துக்குண்டு. 'ரொம்ப'வையும் அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இவ்விடயத்தில் நான் அ.கி.பரந்தாமனார் கட்சி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.