நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.

இதற்கொப்ப மீண்டும் சு.ரா.வின் 'ஜே.ஜே சில குறிப்புகள்' நாவலை வாசிக்கத் தொடங்கியியிருக்கின்றேன். மலையாள 'எழுத்தாளன் ஜோசஃப் ஜேம்ஸ்' பற்றி, அவனது இலக்கிய ஆளுமை பற்றி அவனால் வசீகரிக்கப்பட்ட , ஒருவகையில் அவனது சீடனான  தமிழ் எழுத்தாளன் பாலு என்பவனின் சிந்தனைகளே 'ஜே.ஜே.சில குறிப்புகள்'.  இந்நாவல் வெளிவந்த காலம் தொடக்கம் இன்று வரை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நாவல். வழக்கமான நாவலொன்றுக்குள்ள அம்சங்களற்ற நாவல்.

நாவலை வாசிக்கையில் நான் இன்னுமொரு விதமாகவும் உணர்ந்தேன். உண்மையில் நாவலொன்றின் பாத்திரங்கள் அனைத்தையும்  படைப்பவர் அதனை உருவாக்கிய எழுத்தாளரே. அப்படைப்பாளி பாத்திரங்களில் உள்ளும் இருப்பார் , புறத்திலும் இருப்பார்.  அவ்வகையில் தான் எப்படியெல்லாமோ எழுத்தாளர் ஒருவர் இருக்க வேண்டுமென்று எண்ணினாரோ அத்தகைய ஆளுமையாக அவர் ஜே.ஜே என்னும் ஆளுமையை வடித்திருக்கின்றார். தேடல் மிக்க தன்னை பாலுவாக உருவாக்கியிருக்கின்றார். அவ்வகையில் இரு பாத்திரங்களிலுமே அவர் நிறைந்திருக்கின்றார்.

நாவல் மொத்தத்தில் ஜே.ஜே. என்னும் எழுத்தாளனை அவனது கூற்றுகள், நாட் குறிப்புகள், கலை, இலக்கியம் , அரசியல், இயற்கை, இருப்பு பற்றிய எண்ணங்களூடு நம் கண் முன் கொண்டுவந்து  நிறுத்துகின்றது. கூடவே நவகாலத்தமிழ் இலக்கியச்சூழலை, இந்திய இலக்கியச்சூழலை , அரசியலை ஒருவித அங்கதத்துடன் விமர்சிக்கின்றது. ஒருவித நனவிடை தோய்தல்தான். பாலு என்னும் எழுத்தாளனின் நனவிடை தோய்தல்தான்.

உண்மை நபர்களுடனான அனுபவங்களின் திரிப்பு, நேர் கோடற்ற கதைப்பின்னல், சமகால கலை, இலக்கிய  அரசியல் மீதான நையாண்டி (அங்கதம்) , மொழி & உத்தி இவை காரணமாக இந்நாவலைத் தமிழில் வெளியான ஆரம்பகாலப் பின் நவீனத்துவ நாவல்களிலொன்றாகக் கருதுவர்.

நாவலின் தொடக்கத்திலேயே என் கவனத்தை ஈர்த்த சில வரிகளை இங்கு பதிவு செய்யலாமென்று தோன்றுகின்றது.

"இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவர்களுக்கு இன்றைய கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. 'அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள்' பற்றி ஆங்கிலத்தில் ஆராய்சிக்கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் 'தமிழில் புதுக்கவிதை உண்டா?" என்று கேட்கின்றான். காஃப்கா என்கிறோம். சிசோன் த பூவா என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபால கிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை?"

நம்மவர்களோ 'சுராவைத் தெரியும். ஜெயமோகனைத் தெரியும்' என்கின்றார்கள். ஆனால் எத்தனை பேருக்கு நம்மண்ணின் இலக்கியத்தை வளப்படுத்திய பலரின் எழுத்துகளைத் தெரியும்?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.