- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -

எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.

எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.

எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.

இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.

கவிதை, புனைகதையென்று சிறந்த படைப்புகள் பலவற்றைத் தந்தவர் தாஜ். அவரது 'பால்ய விவாஹம்' (சிறுகதை) , 'தங்ஙள் அமீர்' (குறுநாவல்) ஆகியவை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 'தங்ஙள் அமீர்' குறுநாவலை அவர் அனுப்பியபோது பின்வரும் குறிப்புடன் அதனைப் பிரசுரித்திருந்தோம்:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-"

'தங்ஙள் அமீர்' குறுநாவலை வாசிக்க

அவரது 'பால்ய விவாஹம்' சிறுகதையைப் பின்வரும் குறிப்புடன் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தோம்:

"எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.

ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான 'பால்ய விவாஹம்' சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். - ஆசிரியர், பதிவுகள் -"

'பால்ய விவாஹம்' சிறுகதையை வாசிக்க

சீர்காழி தாஜ் அவர்கள் எனது பாரதியார் பற்றிய கட்டுரைகள்த் தனது 'தமிழ்ப்பூக்கள்' வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்திருந்தபோது 'நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன்' என்று குறிப்பிட்டுப் பின்வருமாறு குறிப்பொன்றினையும் எழுதியிருந்தார். அதனையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்:

'நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன்!

பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' & 'பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?' என்கின்ற ஆய்வுக் கட்டுரையினை சமீபத்தில்தான் வாசித்தேன். ஆய்வில் அவர் எடுத் தாழும் பாரதியின் வரிகளும், வைக்கும் வாதமும் மறுக்க முடியாதா நிஜங் கள். கருத்தாக்கங்களின் மீது பாரதியின் பார்வை பல நேரம் இரட்டை நேக்கு கொண்டதாக இருப்பதை நாம் காணவே செய்கிறோம். சமூக சிந்தனைக் கொண்ட ஒருவன், தன் வாழ்நாட்களில் தான் எதிர் கொள்ளும் பல விதாமான கருத்தாக்கங்களையும்கணக்கில் எடுத்துக் கொள்ளவே செய்வான். இன்றைக்கு சரியெனப்பட்ட ஒன்று, நாளை அவனுக்கு உறுத்துமானால் அதனைத் தவிர்க்கவும் செய்வான். நாம் அஃறிணையாக பார்க்கும் மரங்களுக்குகூட நித்தம் ஒரு வளர்ச்சியும், எளிய மாற்றங்களும் சாத்தியமாக இருக்கிறது. பாரதி ஆறறிவுக் கொண்ட மனிதன். சிந்தனைப் போக்கில் சின்னச் சின்ன மாறுபாடுகள் அவனிடம் எழுவதை நாம்தான் சரியான கண்கொண்டு பார்க்க வேண்டும்.

இன்னொரு மூத்த மதத்தில் பிறந்து வாழ்ந்து வளர்ந்த பாரதி, இஸ்லாத்தையும், அதன் கடவுளையும், தூதரையும் போற்றிப் புகழ் வதும் / வரிக்கு ரெண்டு சமஸ்கிருத வார்த்தைகளைப் புழங்கியப் பாரதி தமிழ் மாதிரி உலகில் வேறுமொழி இல்லையென்றதும் /பெருமாளை மூலப் புருஷராக கொண்டாடிய வம்சத்தில் வந்த அவன் மாகாளியைப் பூஜித்துப் போற்றியதும் / வால்மீகியையும்,வியாசரையும் தொய்வ ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடிய குலத்தில் தோன்றி வளர்ந்தவன் வள்ளுவனையும், அவனது திருக்குறளையும் வான்வுயரத் தூக்கிப் பிடித்ததையும் / கணவன் இறப்பிற்குப் பின் சதியேற்றியும், மொட்டையடித்தும், மூலையில் அமர்த்தியும் பெண்களை சிதைத்த அடிப்படைவாதிகள் நிறைந்த இனவழி வந்த அவன் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்ததும் /பரத நாட்டியத்தை தெய்வீக கலையாக கொண்டாடிய இனப்பிரிவில் வந்த அவன், பரத நாட்டியத்தை சதிர்யென சிறுமைப் படுத்தியும், அதைப் பயிலும் பெண்களை கண்டித்து குரல் கொடுத்தும் / வியாசரின் மஹாபாரதத்தை வேதத்திற்கு சமமாகப் போற்றிய குல வழி வந்த அவன், புதிய பாஞ்சாலி சபதம் எழுதி, மனைவியை சூதாட பணயம் வைத்த தருமனின் கையை வெட்டுக என்றதும் / லோககுருவாகப் போற்றப்பட்ட மதக் குருவை விமர்சனத்திற்கு உட்படுத்தியதையும் வைத்தே இன்றைக்கு நாம் பாரதியை வியப்புடன் திரும்பிப் பார்க்கிறோம். இரட்டை நோக்கு வளரும் காலங்களில் சகஜம். வேண்டுமானால் இப்படி சொல்லலாம், 'பாரதி புரட்சியின் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தவன். அதன் கடைசிப் படி வேண்டுமானால் 'பொருள் முதல்வாதமாக' இருக்கலாம்! ஆனால், அவன்தான் அவனது உச்சத்தை எட்டுவதற்கு முன்னாலேயே இறப்பைக் கொண்டுவிட்டானே!' இந்த படியேற்றத்திற்கே அவன் தந்த விலை அதிகம். வறுமை / ஏழ்மை / பைத்தியக்காரன் பட்டம் /அவன் ஈமக்கிரியைக்கு எண்ணி பதிமூன்று பேர்கள்.


இங்கே கிரிதரன் எடுத்து வைக்கும் வாதத்தின்படி, பாரதியை முன் நிறுத்தி 'கருத்து முதல்வாத' 'பொருள் முதல்வாத' அளவுகோல்களை உரசிப் பார்ப்பவர்கள் மார்க்சிஸ்ட்டாகதான் இருக்க வேண்டும். பாரதியை இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்த நினைத்திருக்கும் பட்சம் 'மனித அளவுகோலை' கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே இவர்கள் தங்களது கோட்பாட்டிற்கு உள்ளடங்கிய அளவுகோலை கையில் எடுத்துக் கொண்டு,பாரதியை அளப்பதென்பது முரண்பாடு.

சோவியத் யூனியனை முன்வைத்து கம்யூனிச சித்தாந்தத்தைப் போற்றியதுப்போக, அதில் எதை எதை பாரதி ஆகாத்து என்றானோ அதே காரணங்களால்தான் பின்னால் அது சிதையுண்டது. பாரதியின் தீர்க்கத்தை மார்க்சிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவும்கூடும். அடக்கு முறைகளையும்/ மனித உரிமை இழப்பையும் நவீன சமூகம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. உலகம் தழுவியநிலையில் மக்கள் ஒப்புக்கொண்ட நிலைப்பாடாக ஜனநாயகத்தைப்போற்றி, சென்றநூற்றாண்டின் சிறப்புகளில் ஒன்றாக அதைப் பார்க்கிறார்கள். பாரதியும் அந்தகாலக் கட்டத் துவக்கத்தில் வாழ்ந்தவன் தானே! கிரிதரன் பாரதியை சரியான கோணத்தில் நம்மைப் பார்க்கச்செய்ய போதுமான அளவில் அவனது கவிதை வரிகளை நமக்கு உதாரணம் ஆக்கியிருக்கிறார். பாரதியின் கவிதைகளைத் தாண்டி, அவனது கட்டுரைகளில் தேடிப்புகுந்தால் இன்னும்கூட நிறையச் சான்றுகள் அவருக்கு கிட்டியிருக்கும்.

பாரதியை எந்த ரீதியில் ஆய்வு செய்தாலும், குறைந்த வாழ்நாள் கொண்ட அவனது வயதையும், இருக்கமானப் பின்னணிக் கொண்ட அவனது சமூகத்தையும், பிறப்பால் அவன் மீது ஏறப்பட்ட மதத் தாக்கங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதோடு அவனது வறுமையினையும் சேர்த்துக் கொள்வது சரியாக இருக்கும். இதை ஆய்வாளர்கள் மனதில் இருத்திக் கொண்டு ஆய்வைத் தெடங்குவார்களேயானால் பாரதியின் மையமும், அதில் அவன் ஆற்றிய அளப்பற்கறிய செயல்பாடுகளும் /அதன் உண்மையும் /முகம் காட்டும் அவனது புரட்சிகளும் நம்மை மலைக்க வைக்கும். என்றாலும், அவன் ஆன்மீக வாதிதான். கருத்து முதல்வாதத்தில் தத்தளித்து அவ்வவ்போது பொருள் முதல்வாத கரையில் அசுவாசம் கொண்டவன்! - தாஜ். 01.10.06 '

எழுத்தாளர் தாஜ் எழுத்தாளர் உமாமகேசுவரியின், எழுத்தாளர் ஆபிதினீன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவரது கவிதை, சிறுகதையைத் தமிழ்ப்பூக்கள் வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்திருக்கின்றார். உமாமகேசுவரியின் 'காற்றுக்காலம்' சிறுகதையை மீள்பிரசுரம் செய்தபோது பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

'உமா மகேஸ்வரி! தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து வருட காலமாக அறியப்படும் கீர்த்தி கொண்ட பெயர். இவரது இலக்கிய சாதனைகளை விலாவாரியாக சொல்லனும் என்றால்... பெரிய ஆய்வு கட்டுரையே எழுதனும். சுருக்கமாகச் சொன்னால் நவீன தமிழ் இலக்கியத்தில் இன்னொரு அம்பை! என்றாலும் அம்பைக்கும் கைவராதா கவிதை வரிகள் இவருக்கு சாதாரணம்! இவர் கவிதையால் அறிமுகமானவர் என்பதும், இவரது கவிதைகள் புதுக் கவி தைப் பரப்பில் பிரசித்தியம் கொண்டவை என்ப தும் அறிந்த ஒன்று! இவரது சிறு கதைகளும், நாவலும் அப்படிதான்! உன்னதம் சார்ந்தது! சிறுகதைகளிலும், நாவலிலும் கவிதை நடையொத்த நடையிலான இவரது அளுமை தமிழுக்குப் புதிது! கவிதையாலேயே புள்ளி வைத்து கோலம் போடும் இவரது நேர்த்தி வாசிப்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது. சமீபத்தில் அவரது 'காற்றுக்காலம்' என்கிற சிறு கதையை 'அம்ருதா' என்கிற இலக்கிய இதழில் வாசித்தேன். படித்ததில் பிடித்த தான இந்த சிறு கதையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். - தாஜ்'

'உமாமகேசுவரியின் கவிதைகள்' என்னும் தலைப்பிட்டுப் பின்வரும் கவிதைகளைத் 'தமிழ்ப்பூக்கள்' வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்திருக்கின்றார்:

1. சித்திர அரூபம்

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?
***

2. நுழைதலற்ற கதவுகள்

கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.
***

3. அழையாமை

செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.
*
தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.
*
உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.
****
தட்டச்சு:தாஜ்

எழுத்தாளர் ஆபிதீனின் 'குழந்தை' என்னும் சிறுகதையை மீள்பிரசுரம் செய்கையில் பின்வரும் குறிப்பினையும் இட்டிருந்தார்:

'கு ழ ந் தை - ஆ பி தீ ன். ஆபிதீனின் முதல் கதை இது. நிஜத்தில் நண்பர் ஒருவருக்கு கடிதமாக எழுதப்பட்ட எழுத்து இது. நண்பர் அன்றைக்கு டெல்லி வாசி. அன்றைய யாத்திரா சிற்றிதழ் ஆசிரியர் திரு.வெங்கட் சாமிநாதனோடு இலக்கிய யாத்திரை மேற்கொண்டிருக்க ஆபிதீனின் அக் கடிதம் வெ.சா.வின் பார்வைக்குப் போகிறது. அவர் பிரமித்ததோடு அல்லாமல், அவர் வழியே அவரது அன்றைய நெருக்க நண்பரும், இலக்கிய ஆகிருதியுமான திரு.சுந்தர ராமசாமியின் பார்வைக்கும் போகிறது. அவரும் ஆபிதீனின் அக்கடிதத்தை, சிறந்த சிறுகதைக்கான அத்தனை முகாந்திரத்தோடு இருப்பதாக மெச்ச.... 1 9 8 2 -ம் வருடதில் ஏதோ ஒரு மாதத்தில் 'யா த் தி ரா -'வில் பிரசுரமாகிறது. அன்றைக்கே இலக்கியப் பெரிசுகள் வியந்ததோர் சிறுகதையை எழுதிய நம்ம பெரிசு ஆபிதீன் இன்னும் சரியான உயரத்தை எட்டவில்லை என்பதில் என்னையொத்தவர்களுக்கு மன சங்கடம் உண்டு. -தாஜ்-'

தாஜ் அவர்களை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. நான் நட்பு பேணிய, பேணிக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமைகள் பலரை நான் நேரில் சந்தித்ததில்லை. மின்னஞ்சல், முகநூல் போன்றவற்றினூடுதான் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்; கொள்கின்றோம். அவற்றினூடு எமக்கிடையிலான நட்பினை வளர்த்துக்கொண்டோம்; வளர்த்துக்கொள்கின்றோம். இவ்விதமான என்னுடன் நட்பு பேணி அமரரான இலக்கியவாதிகளில் எழுத்தாளர் தாஜ் முக்கியமான ஒருவர். மறக்க முடியாத ஒருவர். தாஜ் அவர்களைப்பற்றி எண்ணும் போதெல்லாம் அவரது எழுத்துகளுடன் அவர் குறிப்பிட்ட இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும் நினைவுக்கு வருவதை என்னால் தடுக்க முடிந்ததில்லை. அதனால்தான் அவற்றைப்பற்றியும் இங்கு அவர் பற்றிய நினைவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.

இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருந்தால் தமிழ் இலக்கியத்துக்கு தன் படைப்புகள் மூலம் வளம் சேர்த்திருப்பார் அவர்.இருந்தாலும் இருந்தவரை அவர் எழுதியவை தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் என்னும் முக்கியத்துவம் மிக்கவை. அப்படைப்புகளூடு அவரது பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும்.

எழுத்தாளர் தாஜ் அவர்கள் எனது அமெரிக்கா பற்றி எழுதிய கடிதத்தின் புகைப்படப்பிரதியினைக் கீழே தருகின்றேன் (ஒரு பதிவுக்காக).

 

 


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.