எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும்  அவரது விஷ்ணுபுரம் குழுவினர் இணைந்து உருவாக்கிய தமிழ் விக்கி தளத்தைப் பார்த்தேன். இதனையொரு தகவல் சார்ந்த இணைய இதழாகத்தான் பார்க்க முடியுமே தவிர விக்கிபீடியாவின் தமிழ் வடிவமாக ஒருபோதுமே பார்க்க முடியாது என்பதை இதனைப்பற்றிய அறிமுகக் குறிப்புகளிலிருந்து உணர முடிகின்றது.

இத்தளத்தில் 'வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றே இத்தளத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் தடைக்கல்லாக நிற்கப்போகின்றது.

தற்போது நடைமுறையிலிருக்கும் விக்கிபீடியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே யாரும் தமக்குத் தெரிந்த வற்றை எழுதலாம், தவறுகளை யாரும் திருத்தலாம் என்னும் நடைமுறைதான். அதனால்தான் பலர் உலகின் பல பாகங்களிலிருந்தும் பங்களிக்கின்றார்கள். இவர்களின் நடைமுறையின்படி இவ்விதமான செயற்பாடு இருக்காது. இதழொன்றை நடத்துவதைப்போல் நடத்த எண்ணியிருக்கின்றார்கள். முதலில் ஆலோசனைக்குழுவில் உள்ளவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்லர். தாம் அறிந்ததன் அடிப்படையில், தமக்குச் சார்பாக சரியென்று படுவதை மட்டுமே வெளியிடுவார்கள். இந்நிலையில் இக்குழு சார்பானவர்கள் அல்லது அவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களே மிக அதிகமாக இடம் பெறும். விக்கிபீடியாவின் வெற்றிக்குக் காரணமான அதன் அடிப்படை அம்சங்களையெல்லாம் மறுக்கும் 'தமிழ் விக்கி' என்னும் தளத்தின்  பெயரில் விக்கி என்னும் சொற்பதம் இருப்பதே பொருத்தமற்றது.

தமிழ் விக்கி என்பது விக்கிபீடியாவின் தமிழ் வடிவமாக ஒருபோதுமே வளர்ச்சியடையாது. ஆனால் சிறந்ததோர் , அதனை இயக்குபவர்கள் சார்பானவர்களை முன்னிறுத்தும் , தகவல்களை வழங்குமோர் இணைய  இதழாக விளங்கும். இவ்விதம்தான் எனக்குத் தோன்றுகின்றது.

மேலும் ஒன்று. தற்போது திகழும் தமிழ் விக்கிபீடியாவின் வெற்றிக்கு அதிக அளவில் இலங்கைத் தமிழர்கள் உழைத்திருக்கின்றார்கள். கட்டடக்கலைஞர் மயூரநாதனின் ஆரம்ப கால உழைப்பு அதனை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயமோகன் மற்றும் விஷ்ணுபுரக் குழுவினர் ஆரம்பித்துள்ள தமிழ் விக்கி விக்கிபீடியாவின் இன்னுமொரு தமிழ் வடிவமாக உருவாக வேண்டுமானால் ஆசிரியர், ஆலோசனைக் குழுவினர் போன்ற வடிவிலான நடைமுறையைத் தவிர்க்க வேண்டும். அனைவரையும் எழுத அனுமதிக்க வேண்டும். அனைவரையும் திருத்த அனுமதிக்க வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் காலப்போக்கில் தமிழ் விக்கியால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விடும் அல்லது குழுவொன்றின் சார்புத்தளமாகக் குடங்கிப்போய்விட நேர்ந்திடும்.

விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியம். இவர்களது தமிழ் விக்கி என்பது கட்டுள்ள தகவற் தளம்.

அதே நேரம் அவர்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

தமிழ் விக்கி