எழுத்தாளர் 'பண்டிதர்' மாவிட்டபுரம் க.சச்சிதானந்தன் கவிதை, சிறுகதை, நாவல் , கட்டுரை எனப்பன்முகத்திறமை வாய்ந்தவர். இவர் ஒரு மதுரைத்தமிழ்ச்சங்கப் பண்டிதர். கலாநிதி. வானியல் வல்லுநர். இவரது கல்வித்தகைமைகள் வருமாறு:B.A ( Hons.)London, M.Phil. London, PhD (Jaffna) & மதுரைப்பண்டிதர்). இவர் பாவித்த புனைபெயர்கள்: சச்சிதானந்த , ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி

இவரது 'யாழ்ப்பாணக் காவியம்' இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் வெளியான மிகவும் முக்கியமான வரலாற்றுக் காவியம். இவரைப்போல் யாழ்ப்பாண வரலாற்றை மையமாகக்கொண்டு வெளியான இன்னுமொரு காவியம் கவிஞர் காரை.செ.சுந்தரம்பிள்ளையின் 'சங்கிலியம்'. ஈழநாடு பத்திரிகையின் பத்தாவதாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற காவியம்.

'யாழ்ப்பாணக் காவியம்' யாழ்ப்பாண அரசின் 1450 -1467 காலகட்ட வரலாற்றை மையமாகக்கொண்டது. இக்காலகட்டத்தில் கனகசூரிய சிங்கை ஆரியனின் யாழ்ப்பாண அரசு கோட்டை அரசு கோட்டை அரசனின் வளர்ப்புப் பிள்ளையான 'சபுமல் குமாரய' வின் (செண்பகப்பெருமாள்) ஆதிக்கத்தின் கீழ் வருகின்றது. பின்னர் கோட்டை அரசிலேற்பட்ட குழப்பங்களையடுத்து சபுமல் குமாரய தளபதி விஜயபாகுவின் பொறுப்பில் யாழ் அரசைப் பொறுப்புக்கொடுத்துவிட்டு கோட்டை திரும்பி புவனேகபாகு என்னும் பட்டப்பெயர் தாங்கி ஆட்சியில் அமர்கின்றான். ஆட்சியை இழந்த கனகசூரிய சிங்கை ஆரியனின் குழந்தைகளான பரராஜசேகரன், செகராசசேகரன் இருவரும் இந்தியாவில் மறைந்து வாழ்ந்து, இளைஞர்களாக படை திரட்டி இலங்கை மீண்டு , மீண்டும் யாழ் அரசைக் கைப்பற்றுவதை மையக் கருத்தாகக் கொண்டு பின்னப்பட்ட காப்பியம் 'யாழ்ப்பாணக் காவியம்'

இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் வெளியான மிகவும் முக்கியமான காப்பியம் 'யாழ்ப்பாணக் காவியம்'. ஏன் இதனை நமது விமர்சகர்கள் கவனத்திலெடுப்பதில்லை என்று தெரியவில்லை. அவர்கள் இப்படைப்பு பற்றி அறிந்திருக்கவில்லையா? அல்லது இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லையா? இவர் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். அதனால் இவரது அரசியற் கருத்துகள் காரணமாக இவரது படைப்புகளைத் தவிர்த்தார்களா? காரணங்கள் எவையாயினும் இவரது கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் பற்றி இன்றைய தமிழுலகு கவனம் செலுத்த வேண்டிய தருணமிது.

'யாழ்ப்பாணக் காவியம்' நூலை 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.