மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.

பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாலும் அவரவர் சார்ந்த அமைப்புகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அமைப்புகளைப்பற்றிய , இலங்கையின் அரசுகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. 2009 ற்கு அடுத்த காலகட்டத்தில் முன்னாட் பெண் போராளியான விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்னும் சுய விமர்சனத்தை உள்ளடக்கிய சுய சரிதை நூல் எழுதப்பட்டு வெளியானது. இவ்விதமானதொரு சூழலில் தற்போது இன்னுமொரு சிவகாமியினால் இன்னுமொரு விமர்சன நூல் எழுதப்பட்டு வெளியாகியுள்ளது முக்கிய கவனத்தைப்பெறுகின்றது. இந்நூல் அவர் சார்ந்திருந்த அமைப்பு மீதான விமர்சனத்தை, இயக்கங்களுக்கு இடையிலான உள் முரண்பாடுகள் காரணமாக அவரை இரு தடவைகள் கைது செய்து இருபாலைத் தடுப்பு முகாமில் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான விமர்சனத்தை முன் வைக்கின்றது. நூலின் அளவு சிறியதானாலும், கடுகு சிறுதானாலும் காரம் பெரிது என்பதற்கேற்ப நூல் அமைந்துள்ளது.

பெண் போராளியின் குடும்பச் சூழல், நாட்டில் நிலவிய அரசியற் சூழல் இவற்றின் காரணமாகச் சிவகாமி தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்கின்றார். மேலதிகப் பயிற்சிக்காகத் தமிழகம் செல்கின்றார். அப்போது நிகழ்ந்த மனோ மாஸ்டரின் படுகொலையை அடுத்து பெண் போராளிகளில் சோதியா போன்ற சிலர் சிலர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றனர். ஏனையோர் இலங்கை திரும்புகின்றனர். இவ்விதம் ஏனைய பெண் போராளிகள் அமைப்பினர் பத்திரமாக நாடு திரும்பும் வரையில் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆண் போராளிகளொருவராக விளங்கிய எல்லாளன் (ரஞ்சித்), மனோ மாஸ்ட்டரின் சகோதரன் ராஜன் மற்றும் ஏனைய போராளிகள் சிலர்  இருந்ததையும் நூல் பதிவு செய்கின்றது. உண்மையில் இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக எல்லாளன் எழுதிய அவரது நினைவுக் குறிப்புகள் இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மெளனமாகப் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த 'டெலோ' அமைப்பின் முன்னாட் போராளிகளுக்கிடையில் மீண்டும் தொடர்புகள் ஏற்பட்டதையும், நூலுக்கான எல்லாளனின் 'ஞாபகக் குறிப்'பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்நூலின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது : சிவகாமி, யாழினி என்னும் முன்னாட் பெண் போராளிகளின் அனுபவங்களைச் சுருக்கமாகப் பதிவு செய்வது, அமைப்புக்குச் செல்வதற்குக் காரணமாக அமைந்த நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் இருப்புக்கு ஏற்படுத்திய சவால்கள், டெலோ அமைப்பில் நிகழ்ந்த உள் முரண்பாடுகளிலொன்றான மனோ மாஸ்ட்டர் படுகொலை ஏற்படுத்திய பிளவு, 'டெலோ'அமைப்பைச் சேர்ந்த சோதியா போன்ற பெண் போராளிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு உள் வாங்கியமை, அவ்விதம் உள்வாங்கப்பட்ட டெலோப் பெண் போராளிகள் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய போராளிகளாக உருவெடுத்தபோது செயற்பட்ட முறை, விடுதலைப்புலிகளின் இருபாலைப் பெண்கள் முகாம் பற்றிய தகவல்கள், துரோகிகள் என்று விடுதலைப்புலிகளால் கைதான பெண்களுக்கு ஏற்பட்ட முடிவுகள், புதுக்குடியிருப்புப் பகுதியில் மாத்தையாக் குழுவினரால கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டமை, அங்கிருந்து தப்பியமை, முன்னாட் பெண் போராளிகள் மீண்டும் தம் இல்லங்களுக்குத் திரும்பியபோது அவர்கள் இருப்புக்காக எதிர்கொண்ட சவால்கள் இவ்விதம் பல விடயங்களை இச்சிறு நூல் பதிவு செய்கின்றது. இவ்விதம் பதிவு செய்யப்படும் விடயங்கள் மிகவும் முக்கியமானவை.

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இந்நூல் பதிவு செய்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருபாலை முகாமுக்கு வந்து சிவகாமியைச் சந்தித்து உரையாடிய தகவல். விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த டெலோ அமைப்பைச் சார்ந்த பெண் போராளிகளான சோதியா, தீபா போன்றோரின் பங்களிப்பு காரணமாக அவர் தம் கைதிகளாக இருந்த ஏனைய பெண் போராளிகளையும் புலிகள் அமைப்புக்குள் உள்வாங்க கடும் முயற்சி செய்தாரோ என்று எண்ண வைக்கும் செய்தியிது. இன்னுமொரு விடயத்தையும் நூல் பதிவு செய்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மாத்தையாவின் கீழ் செயற்பட்ட ஒருவராலேயே அவர் கைது செய்யப்பட்ட விடயமே அது.

இவ்விதமாகச் சிவகாமி தனது இயக்க வாழ்வு, அதற்குப் பின்பட்ட வாழ்க்கையைப்பதிவு செய்கையில் இந்தியப்படையினரின் காலகட்ட அனுபவங்களையும் பதிவு செய்கின்றார், அச்சமயம் அவரை இந்தியப்படையினர் விசாரணைக்காகக் கூட்டிச் செல்கின்றனர். அங்கிருந்த தமிழ் இராணுவத்தினரான ராஜசேகர், ராஜகோபால் ஆகியோர் தம்மைக்காப்பாற்றுவதற்கு மிகவும் உதவியாக இருந்த விடயத்தையும் நூல் பதிவு செய்கின்றது. இவ்விதம் பல்வேறு விடயங்களையும் பதிவு செய்யும் நூல் இறுதியில் கொழும்பில் கறுவாக்காட்டிலிருந்த பொலிஸ் தலைமைச் செயலகத்தின் ஆட்சேர்ப்புப் பிரிவில் எழுத்தராகப் பணியாற்றிய அனுபவங்களையும் பதிவு செய்கின்றது.

இவ்விதம் முக்கிய தகவல்களால் நிறைந்துள்ள இச்சிறிய நூல் இது விபரிக்கும் விடயங்கள் காரணமாகவே முக்கியத்துவம் பெறுகின்றது. சிவகாமியின் அனுபவங்களைப் படித்து முடிக்கையில் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்காக ஆயுதம் தாங்கிப் போராட எழுந்த பெண் போராளியான சிவகாமியை அவரது அனுபவங்கள் புடம் போட்டிருப்பதையும் , அதன் விளைவாக அவர் சிந்தனை இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து சிந்திக்கத் தொடங்கியிருப்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

சிவகாமியின் அனுபவங்களையொத்த அனுபவங்களை மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்கின்றன நூலிலுள்ள இன்னுமொரு பெண் போராளியான யாழினியின் குறிப்புகள்.

இந்நூல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், சிந்தனைகள் காரணமாகப் பலத்த வாதப்பிரதிவாதங்களை நிச்சயம் ஏற்படுத்தும் . ஆனால் அவற்றையெல்லாம் மீறி இவ்விதமான பதிவுகள் பதிவு செய்யப்படுவது முக்கியமானது. நூலுக்கான தனது 'ஞாபகக் குறிப்பில்' எல்லாளன் கூறுவதுபோல் மேலும் முன்னாட் போராளிகள் பலரும் தமது அனுபவங்களைப் பதிவு செய்வது முக்கியமானது. செய்வார்களென்று எதிர்பார்ப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.