நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.

என் பதின்ம வயதுகளில் இரவுகளில் என் அறையில் படுக்கையில் சாய்ந்தபடி சுவரில் பூச்சி பிடித்துண்டும் பல்லிகளையு, உணவாகும் பூச்சிகளையும் அவதானிக்கையில் எழுந்த உணர்வின் வெளிப்பாடு இச்சிறுகதை. ஜுலை 6, 1980 வெளியான ஈழநாடு வாரமலரில் வெளியாகியுள்ளது. 'பல்லி தந்த பாடம்' என்னும் தலைப்பில் வெளியான சிறுகதை. இந்நிலையில் மீண்டும் இச்சிறுகதை என் கைகளை வந்தடைந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. அக்காலகட்டத்தில் நான் எழுதிய ஈழநாடு வாரமலரில் வெளியான கடைசிச்சிறுகதை இதுதான். ஈழநாடு வாரமலரில் வெளியான எனது ஆரம்பச் சிறுகதைகளில் என்னிடம் இல்லாத சிறுகதை இதுதான். ஈழநாடு நிறுவனமும் பல தடவைகள் போர்ச்சூழலில் எரிக்கப்பட்ட நிலையில் இச்சிறுகதை மீண்டும் கிடைக்குமென நான் நினைத்திருக்கவேயில்லை. உண்மையில் இச்சிறுகதை கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சிதான். என் பால்ய, பதின்ம மற்றும் இளமைப்பருவங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்த ஈழநாடு பத்திரிகையை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்பொழுதும் என் நெஞ்சில் அதற்கோரிடமிருக்கும்.

பின்னர் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்திருக்கையில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் இச்சிறுகதையில் வரும் பல்லி- பூச்சி அனுபவத்தை மையமாகக்கொண்டு 'பல்லி' என்றொரு சிறுகதை எழுதினேன். அது வேறொரு பார்வையில் எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பல வருடங்கள் கழிந்த நிலையில் இச்சிறுகதையை மையமாகக்கொண்டு விகடனுக்குப் 'பல்லிக்கூடம்' என்றொரு குட்டிச் சிறுகதை அனுப்பினேன். அது விகடனில் அதன் பவள விழாவையொட்டிய காலத்தில் வெளியானதால் முத்திரைக்குட்டிக்கதையாகப் பிரசுரமானது.

இச்சிறுகதைக்கு எழுத்தாளர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் சிறு விமர்சனக் குறிப்பும் அடுத்து வெளியான ஈழநாடு வாரமலரில் வாசகர் கடிதம் பகுதியில் எழுதியிருந்தார். கூடவே சரசாலை சிவசங்கரநாதன் என்பவரும் பாராட்டி எழுதியிருந்தார். அவற்றையும் இச்சிறுகதையுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். சிறுகதை வெளியான ஈழநாடு வாரமலரை வாசிக்க: https://noolaham.net/project/639/63822/63822.pdf

இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் மற்றும் சரசாலை க.சிவசங்கரநாதன் எழுதிய குறிப்புகள் வெளியான ஈழநாடு (13.7.1980) பத்திரிகையை வாசிக்க: https://noolaham.net/project/639/63830/63830.pdf


எனது ஈழநாடு பத்திரிகைக்கவிதையொன்று: 'விழித்தெழும் புது யுகம்'

'விழித்தெழும் புதுயுகம்' என்னும் எனது கவிதை 24.8.80 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான விடயத்தை இன்றுதான் நானறிந்தேன். இன்று நூலகம் இணையத்தளத்தில் பழைய ஈழநாடு வாரமலர்களை மேய்ந்துகொண்டிருந்தபோது கண்டெடுத்தேன். உண்மையில் மகிழ்ச்சியாகவிருந்தது. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

கவிதை சிறிது தெளிவற்றிருப்பதால் இங்கு பதிவு செய்கின்றேன்.

விழித்தெழும் புதுயுகம்!

- வ.ந.கிரிதரன் -

நாற்றமெடுக்கும் இவ்வுடம் ஒர்நாள்
நீற்றுப் போவது நிச்சயமே! - அதற்குள்
நன்றினைச் செய்து மடிவோம். அதையும்
இன்றே செய்து முடிப்போம்.
விழலிற்கிறைத்த நீராய் வாழ்க்கை
அழுகிய தேன்சுவைக் கனியாய்ப்
பயனற்றுப் போவதோடா!
உயிரற்றுக் கிடப்பதோடா!
வயிற்றிற் காயுழன்று வாடும் எங்கள்
அயலிலே வாழும் மக்கள் தம்
வாழ்வினை எண்ணிப் பார்ப்போம். அவர்தம்
தாழ்வினைத் தகர்க்க எழுவோம்.
உழைப்பவன் வாழ்வில் துன்பம்
தழைப்பது எதனால் இங்கு அவ்
உழைப்பினை உறுஞ்சி உண்டு
கொழுத்திடும் கூட்டத்தாலன்றோ?
உழைப்பவனுழைப்பை உறுஞ்சி
வாழ்ந்திடும் புல்லுருவிகள் தமை
ஒழித்திடும் நாளிளன்றோ இம்மண்ணில்
விழித்தெழும் புதியதோர் யுகமே!

நன்றி: ஈழநாடு - https://noolaham.net/project/628/62792/62792.pdf