என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.

'வெண்டிப்பிஞ்சின் இருபுறமும் விரல்கள் வந்து முளைத்ததுபோல்' பல்லியின் உடல் வாகு இவருக்குத் தென்படுகின்றது. 'பாசி மணி பதித்தது போல் பளபளக்கும்' பல்லிகளின் விழிகள் அமைந்திருக்கின்றன. இவ்விதம் பல்லியின் உடலமைப்பை ஆரம்பத்தில் வர்ணிக்கும் கவிதை பின்னர் அவற்றின் கூடலை வர்ணிக்கின்றது. அதனை வாசிக்கையில் இலேசானதொரு புன்னகை அரும்பாமல் போகாது. 'பூச்சியுண்ட போதை கொண்டு , புருஷனைப்போய் வளைத்துக்கொண்டு , கீச்சுமூச்சு மூட்டு'தாம். 'கிசுகிசுத்து'ப் பேசுதாம் பெண் பல்லி. 'அதற்காகத்தானடியேய் ஆடை அவிழ்த்தோம் என் ஆண் கதையாதே காதலில் கட்டுண்டு' கிடக்குமாம். நிச்சயம் சொல்லுங்கள் இவ்வரிகளைப் படிக்கையில் உங்கள் இதழ்களில் புன்னகை படர்கிறதா இல்லையா?

இவ்வளவுடன் கவிஞரின் சிந்தனை போய்விடவில்லை. இதன் பின்னர்தான் கவிஞரின் அறச்சீற்றம் மேலோங்குகின்றது. பெண் பல்லிகளின் வயிறுகளுக்குள் முத்துக்களாய் இருக்கும் பல்லிக்குஞ்சுகள் முதலாளிக் குஞ்சுகளாகக் கவிஞருக்குத் தோன்றுகின்றன. 'சுவரென்னும் உலகத்தில்' உழைத்துண்ணும் உழைப்பாளிகளான பூச்சிகளை எவ்வித உழைப்புமின்றி பிடித்துண்டு உடல் வளர்க்கும் முதலாளிகளான பல்லிகளின் குஞ்சுகளோ பிறந்து விட்டால் உழைக்காமல் பிழைத்துக்கொள்ளும் தந்திரம் மிக்கவையாம்.

பல்லிகளின் உடலமைப்பு, உணர்வுகளின் கூடலை விபரிக்கும் கவிதை இறுதியில் கவிஞரின் சமுதாயப் பிரக்ஞை காரணமாக அறச்சீற்றம் கொண்டு பல்லிகளுக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராக அறை கூவல் விடுக்கின்றது. கூற வந்த கருத்தினை எவ்வளவு அழகாக, சிறப்பாக எவ்விதப் பிரச்சார வாடையுமற்றுக் கூறியிருக்கின்றார் இக்கவிதையில் கவிஞர்.

கவிதை வெளியான அஞ்சலி இதழினை வாசிக்க: https://noolaham.net/project/178/17769/17769.pdf


எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்!

எழுத்தாளர் அரு ராமநாதனை எம் தலைமுறையினர் நன்கறிவர். அவரது 'வீரபாண்டியன் மனைவி' (வரலாற்று நாவல்), குண்டுமல்லிகை (கல்கியில் தொடராக வெளிவந்த சமூக நாவல்) ஆகியவற்றை நாமறிவோம். அவர் நடாத்திய 'காதல்'சஞ்சிகை இலக்கியவாதிகள் மத்தியில் அறிமுகமானதொரு சஞ்சிகைதான். ஆனால் அவர் எம்மைப்பொறுத்தவரையில் இன்னுமொரு விடயத்துக்கும் அறிமுகமானவர். ஆம்! எம் பதின்ம வயதுகளில் நாம் போட்டி போட்டுக்கொண்டு வாசித்துக்கொண்டிருந்த பிரேமா பிரசுரத்தின் மர்மநாவல்களைத்தாம் குறிப்பிடுகின்றேன். அந்தப் பிரேமா பிரசுரத்துக்குச் சொந்தக்காரர் அவர்தான். மேதாவி, சிரஞ்சீவி, நாஞ்சில் பி.டி.சாமி என்று அக்காலத்து மர்மநாவலாசிரியர்கள் பலரின் படைப்புகளில் எம் பதின்ம வயதுப்பருவம் கழிந்தது.

பல தசாப்தங்கள் கழிந்து மீண்டும் அம்மர்ம நாவல்கள் புதுப்பொலிவுடன் மின்னூல்களாக அமேசன்- கிண்டில் தளத்தில் கிடைக்கப்பெறுகின்றன. அரு ராமநாதனின் புத்திரரான ரவி ராமநாதன் இப்போது பிரேமா பிரசுரத்தை நடாத்தி வருகின்றார். இரசாயனப் பொறியியலாளரான இவர் அத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்றவரும் கூட. ஆச்சரியமென்னவென்றால் இவ்வளவு வருடங்கள் கழிந்து அக்கால மர்மநாவல்கள் மீண்டும் வெளியிடப்படுவதுதான். எம் வாழ்வின் அழியாத கோலங்களில் அம்மர்ம நாவல்களுக்கும் ஒரு பங்குண்டு. புதுப்பொலிவுடன் மின்னூல்களாக வெளியாகியுள்ள அவற்றின் அட்டைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கின்றீர்கள்.

அமேசன் தளத்தில் இம்மர்ம நாவல்களை வாங்க: https://www.amazon.ca/s?k=prema+pirasuram&crid=3NNA3DYVEHDCG&sprefix=prema+pirasura%2Caps%2C103&ref=nb_sb_noss

இது பற்றி குங்குமம் சஞ்சிகையில் வெளியான கட்டுரை: http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17549&id1=9&issue=20201220

அரு ராமநாதனைப்பற்றிய இணைய இணைப்பு( பேராசிரியர் பசுபதியின்): https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.