புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதோர் ஆய்வு நூல் முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்'.
இதுவரை நான் வாசித்த புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியான ஆய்வு நூல்களில் சிறந்த நூலாக இந்நூலையே கருதுகின்றேன். ஏன் கருதுகின்றேனென்பதற்கான காரணத்தை இப்பதிவை முழுமையாக வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

சிறப்பான ஆய்வு நூலொன்றின் வெற்றிக்கு முக்கிய காரணங்களிலொன்று அவ்வாய்வு நூலுக்கான உசாத்துணை விபரங்கள் பற்றிய ஆய்வாளரின் தேடல். பேராசிரியர்கள் பலர் தம் புலமையினை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பெயருக்கு ஓரிரண்டு புகலிடத் தமிழ் இலக்கியப் படைப்புகளை வாசித்துவிட்டு விளாசித்தள்ளி விடுவார்கள். இவ்விதமான விளாசல் - ஆய்வுகளில் ஆய்வு செய்ய வேண்டிய  படைப்புகளைத் தொட்டுக்கொள்ளப் பாவிக்கும் ஊறுகாய்களாக மட்டும் பாவித்து விடுவார்கள். இதனால் அவர்கள் அடையும் முக்கிய பயன்கள்: அவர்களது ஆய்வுகளில் குறிப்பிடப்படும் சிலர் இவர்களின் சீடப்பிள்ளைகளாகி விடுவார்கள். இவர்களும் அவர்கள் உச்சத்தில் வைத்திக்கொண்டாடும் இலக்கிய மாமேதைகளாகி விடுவார்கள். ஆனால் இவ்விதமான அரை குறை ஆய்வுகளை நம்பாது உண்மையான தேடல் மிக்க ஆய்வாளர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதற்கு முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் இந்நூல் நல்லதோர் ஆதாரமாக விளங்குகின்றது.

தற்போது இந்நூல் எண்ணிம நூலகமான நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாசிக்க விரும்பின் பின்வரும் இணைய முகவரியில் இதனை வாசிக்கலாம்: https://noolaham.net/project/670/66971/66971.pdf

இவ்வாய்வு நூலின் முக்கிய சிறப்பாக ஆய்வாளரின் ஆய்வுத் தேடலைக் குறிப்பிடுவேன். தன்னால் முடிந்தவரை தேடியிருக்கின்றார். தேடியவற்றை வாசித்திருக்கின்றார். அவ்வாசிப்பின் அடிப்படையில் இந்நூலைப் படைத்திருக்கின்றார். புகலிடத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகுமோர்  ஆய்வு நூல்.