பேராசிரியர் அ.ராமசாமியின்  'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி, இணைய  இதழ்கள் பற்றிக் குறிப்பிடபட்டுள்ள கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைப்பற்றி அவர் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

1. "தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன. எழுதியவர்களின் உடல்கள் புலம்பெயர் நாடுகளில் - ஐரோப்பிய/ஆஸ்திரேலிய/ கனடிய நாடுகள் - எதாவதொன்றில் இருந்தபோதிலும் மனம் முழுவதும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பரப்பிலேயே இருந்தன."

2."புலம்பெயர் நாடுகளிலிருந்து அச்சிடப்பெற்ற சிற்றிதழ்களிலும், அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகளின் தொகைநூல்களிலும் வந்த கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன. "

இவற்றில் முதற் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன.' என்னும் கூற்றினையும், இரண்டாவது கூற்றிலுள்ள 'கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன' என்னும் கூற்றினையும் என்னால் ஏற்க முடியவில்லை. இம்முடிவுகளுக்கு அவர்  எவ்விதம் வந்தார் என்பதற்குரிய ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு அவர் ஆரம்பகாலப் படைப்புகளை உதாரணங்களாக முன் வைத்து ஏன் அவை 'வாழிடத்தேச அடையாளங்கள்' எவையுமில்லாமல் வெளிவந்தன ' என்னும் அவரது கூற்றை நிரூபிக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப்படைப்புகளின் தொகுப்பாக வெளிவந்த தொகுப்பு 'பனியும் பனையும்'.  அந்நூலின் 'நுழைவாயி'லில் தொகுப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பின்வருமாறு கூறுவார்:

 'இவர்கள் குடியேறிய அந்தந்த நாட்டுக்கும் ஒரு கலாசார சரித்திரம் உண்டு. அந்தச் சரித்திரத்துக் கேற்றபடி நான் அந்தந்த நாட்டின் சமகாலத்தியச் சமுதாயம் அமைந்திருக்க முடியும். புதிதாக குடியேறுகின்றவர்கள். அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை, இவ்வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பாதிப்புக்கள் மிக அழகாக இப்படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.....  இக்கதைகள் எல்லாவற்றையும் இணைக்கும் ஆதார ஸ்ருதி; நேர்மை, எழுத்து நேர்மை. கலாசாரத்தின் பேரில் பலவகையான தளைகளை தங்களுக்கிட்டுக் கொண்டு காரணமற்ற குற்ற உணர்ச்சியால் கீழை நாடுகளில் அவதியுறும் இளைஞர்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் இருக்கும் மேற்கத்திய சமுதாயங்களை நேர்கொள்ளும் போது, அவர்களுக்கேற்படும் அதிர்ச்சிகள், கேள்விகள், தயக்கங்கள், மனச்சலனங்கள், உடன்பாடுகள், மறுப்புக்கள் எல்லாமே அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.'

புலம் பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி 'புதிதாக குடியேறுகின்றவர்கள். அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை, இவ்வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பாதிப்புக்கள் மிக அழகாக இப்படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்று கூறுகையில் இவர் அவர்களின் படைப்புகளைப் பற்றி குறிப்பிடுகையில் 'கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன' என்று கூறுகின்றார்.  

'பனியும் பனையும்' தொகுப்பு ஒன்றே போதுமானது பேராசிரியர் அ.ராமசாமியின் கூற்றினை மறுப்பதற்கு. இவர் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளைப்பற்றிப் பொதுவாக இவ்விதம் கூறாமல் , தான் வாசித்த சில படைப்புகளை மட்டும் அவ்வாறு கூறியிருந்தால் ,அதனையும் ஆதாரங்களை முன் வைத்துக் கூறியிருந்தால் , அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பொதுவாக இவ்விதமானதொரு கருத்தினை, அனைத்திப் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளையும் முன் வைத்துக் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள  முடியாததொன்று.

அடுத்து அச்செழுத்திலிருந்த இலக்கியம் இணையத்தள வெளிக்கு வந்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'அச்செழுத்திலிருந்த இலக்கியம் இணையதள வெளிக்கு நகர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட து. அதில் முன்னோடியாக நான் வாசித்த இதழ் பௌசர் தொடங்கிய எதுவரை. அவ்விதழ் தொடர்ச்சியாக வராத நிலையில் பிரான்சிலிருந்து நடுவும், லண்டனிலிருந்து அகழ் ' என்று குறிப்பிடுகின்றார். இதிலிருந்து அவருக்கு இருபது வருடங்களுக்கு முன் வெளியான ஆறாந்திணை, அம்பலம் ,இப்பொழுதும் வெளிவந்து கொண்டிருக்கின்ற திண்ணை , பதிவுகள்  போன்ற இணைய இதழ்களுடனான பரிச்சயம் குறைவு என்பது தெரிகின்றது. எனவே அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.  அதற்கு முக்கிய  காரணத்தை இவரே 'அதில் முன்னோடியாக நான் வாசித்த இதழ் பௌசர் தொடங்கிய எதுவரை' என்று கூறுகின்றார்.

அக்கட்டுரையில் இவர் கூறிய இன்னுமொரு முக்கியமான கருத்தினையும் என்னால் ஏற்க முடியவில்லை. அது ' இப்போது கனடாவில் வாழும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளே புலப்பெயர்வு எழுத்துகளில் காலத்தால் முந்தியவை.' என்னும் கூற்றுத்தான்.  'சொல்வன' இணைய இதழில் வெளியான (நவம்பர் 15, 2016) அவருடனான நேர்காணலிலிருந்து அவரது 'அக்கா' சிறுகதைத்தொகுப்பு 1964இல் வெளிவந்ததிலிருந்து 1995 வரை அவரது புதிய எழுத்துகள் வெளிவந்ததாகத் தெரியவில்லையென்பதை அறிய முடிகின்றது. இந்நிலையில் அவரது எழுத்துகளே புலம்பெயர் எழுத்துகளில் காலத்தால் முந்தியவை என்னும் கூற்றினையும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப்பொறுத்தவரையில் எழுபதுகளில் இலண்டனில் வெளியான 'லண்டன் முரசு' காலத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எழுத்துகள் காலத்தால் முந்தியவையாக இருப்பதற்கு அதிகச் சாத்தியங்களுள்ளன.

இவ்விதமான பொதுவான கருத்துகளை ஒட்டுமொத்தப் புலம்பெயர் எழுத்துகள் பற்றி கூறுவது உண்மையினை மூடி மறைப்பதால் ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமமுண்டு.

பேராசிரியர் அ.ராமசாமியின் கட்டுரையினை முழுமையாக வாசிக்க: https://ramasamywritings.blogspot.com/2021/09/blog-post_18.html?spref=fb&fbclid=IwAR0l9ow89xeqB7876KcDpa4c2uTaXOaFWK3ymvtprnm6I827HT8BCsBzlic