- அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -


பேராசிரியர் நுஃமான் அவர்கள் தனது பெயரை அஃக்கன்னா பாவித்து எழுதுகையில் அஃக்கன்னாவுக்குரிய தமிழ் இலக்கண விதியைப் பாவிப்பதில்லை (நுஃமான் என்பதற்குப் பதிலாக நுஃகுமான் என்றிருந்தால் அது தமிழ் இலக்கண விதிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்) . அது ஏன் என்ற கேள்வியும் எனக்கிருந்தது. தற்போது அதற்கான பதில் அவரது முகநூல் எதிர்வினையொன்றின் மூலம் கிடைத்துள்ளது. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலில் அஃக்கன்னா  என்னும் எழுத்துக்குரிய  இலக்கண விதியையும் குறிப்பிட்டு விட்டு அதே அட்டையில் நுஃமான் என்று போட்டிருந்ததுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்நூல் மூலம் தமிழ் படிக்கும் எவருக்கும் இக்கேள்வி எழும்.

அண்மையில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் அவர்கள் தனது பதிவொன்றில் அஃக்கன்னா பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அஃக்கன்னா என்னும் எழுத்தை நுஃமான் அவர்கள் தொடர்ந்தும் வாழ வைத்துக்கொண்டிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் நான் என் நுஃமான் பெயர் பற்றிய குழப்பத்தை எதிர்வினையாகக் குறிப்பிட்டிருந்தேன். சுசீந்திரனின் குறிப்புக்கான எதிர்வினையில் நுஃமான் அவர்கள் தான் ஏன் அவ்விதம் இலக்கணத்தவறுடன் தன் பெயரைப் பாவிக்கின்றார் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அது முக்கியமான தகவலென்பதால் அதனைக் கீழே தருகின்றேன்.

பேராசிரியர் நுஃமானின் எதிர்வினை:

" நண்பரே, உங்கள் பதிவுக்கு நன்றி. இச்சந்தர்ப்பத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், எனது பிறப்புச் சான்றிதழைப் பார்க்கும் வரை எனது பெயரை நுகுமான் என்றுதான் எழுதிக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் எனது பிறப்புச் சான்றிதழில் எனது பெயர் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தி நுஃமான் என்றுதான் எழுதப்பட்டுள்ளது என்பதைப் பின்னர்தான் அறிந்தேன். அதன் பின்னர்தான் நானும் நுஃமான் என்று எழுத ஆரம்பித்தேன். எழுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் என் தந்தையார் என்பெயரை அப்படித்தான் பதிவுசெய்திருக்கிறார். அவர் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி நுஹ்மான் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவ்வகையில் ஆய்த எழுத்துக்கு ‘வாழ்வு கொடுத்த பெருமை’ எனக்கல்ல, என் தந்தையாருக்கே உரியது. தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு பற்றி எனது அடிப்படைத் தமிழ் இலக்கணம் நூலில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்."

பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் நிலையானதல்ல. விரும்பினால் மாற்றலாம். சட்டத்தில் இடமுண்டு. பலரும் வாழ்வின் பலவேறு தருணங்களில் மாற்றியுள்ளார்கள். உதாரணமாகப் பெண்ணொருவர் திருமணமானதும் தனது பெயருடன் கணவரின் பெயரையும் அதுவரையிருந்த தந்தையின் பெயருக்குப் பதிலாக மாற்றுவது சாதாரணமானதொன்றுதான். நுஃமான் என்பதை நுஃகுமான் என்று மாற்றுவதொன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அது அவரது தனிப்பட்ட விடயம்.


முகநூல் எதிர்வினைகள்:

Ajmal Mohideen
ஆங்கில இலக்கண விதியின் பிரகாரம் இடுகுறிப் பெயர்களுக்கு(proper Nouns) spelling rules கருத்துக்கு எடுக்கப்படுவதில்லை,தமிழ் இலக்கண விதிப் பிரகாரம் எப்படியோ

Raj Kauthaman Raj Kauthaman
பெயர்களது உயிர்ப்பிற்கு இலக்கணங்கள் தேவை எனும் கருத்து அவசியமானதில்லை. சில வேலைகளில் இலக்கண மறுப்பு ஓர் அழகியல்ப் போக்கினைக் காட்டலாம். பிறப்புப் சாட்சிப் பத்திரத்தில் எழுதப்பட்டதை பல நாடுகளில் மாற்றவும் முடியாது. நுஃமான் எனும் பெயரில் இலக்கண ரீதியான தவறைக் காண விளைவது ஓர் அழகியல் மறுப்பு எனலாம். பல ஆய்வாளர்களது தொழில் புதிதாகப் பிறக்கும் அழகியலை அழிப்பதாகும். சில தவறுகள் பல வேளைகளில் புதிய அழகினைக் காட்டியது என்பதைப் பல பெயர்களில் காணலாம்.

Giritharan Navaratnam
Raj Kauthaman Raj Kauthaman இலக்கண மறுப்பு சாதாரணமாகவே பல இடங்களில் வேற்று மொழிகளைக் கையாள்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. நுஃமான் அவர்களின் 'அடைப்படைத் தமிழ் இலக்கணம்' நூலில் ஃ ற்கான தமிழ் இலக்கண விதியைக் கற்கும் மாணவர் ஒருவருக்கு அதே நூலின் அட்டையில் அவ்விதி மீறப்பட்டிருப்பதைக் காண்கையில் நிச்சயம் கேள்வி எழும். குழப்பம் ஏற்படும். காரணம் தெரிந்திருந்தால் அக்கேள்வியோ , குழப்பமோ ஏற்படாது. இக்கேள்வி நுஃமான் அவர்களிடம் பிழை பிடிப்பதற்காக எழுந்ததல்ல. ஏன் அவர் அவ்விதம் இலக்கணத்தை மீறினார் என்பதை அறிவதற்காக எழுந்ததொன்று. இப்பொழுது விடை கிடைத்தது. குழப்பம் தீர்ந்தது.

Niyas A Samad
முஸ்லிம்களின் பெயர்களின் அடிப்படை அரபு மொழி பெயர்களின் அர்த்தம் பிறழ்வுபடாமல் இருப்பதற்காக, உச்சரிப்பு சிதைந்துவிடாது இருப்பதற்காக பெயர்களில் இவ்வாறான இலக்கணப்பிசகுகள் இடம்பெறுவது பொதுவாகி விட்டது அரபுத் தமிழ்ச்சொற்களில் தமிழ் இலக்கணத்தினை கண்டுகொள்வது நல்லதல்ல என்பது என் பணிவான வாதம். பேராசான் அவர்களும் இதர்க்கு உடன்படுவார்கள் என நினைக்கிறேன்

Giritharan Navaratnam
Niyas A Samad //அரபுத் தமிழ்ச்சொற்களில் தமிழ் இலக்கணத்தினை கண்டுகொள்வது நல்லதல்ல என்பது என் பணிவான வாதம்// ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு ஏற்பட்ட கேள்விக்குக் காரணம்? அவரது 'அடிப்படைத் தமிழ் இலக்கணம் ' நூலிலுள்ள ஃ பற்றிய இலக்கண விதிக்கு மாறாக ஏன் அந்நூல் அட்டையில் அவர் தன் பெயரில் ஃ என்பதைப் பாவித்திருக்கின்றார் என்பதுதான். அதற்கான விடையினை நுஃமான் அவர்களின் மேற்படி எதிர்வினை தீர்த்து வைத்துள்ளது.

Ahamed Jinnahsherifudeen
நுஃமான் என்பது அரபுமொழி தமிழ்மரபை அரபுடன் போட்டு ஏன் தடுமாறவேண்டும்?

Giritharan Navaratnam
Ahamed Jinnahsherifudeen நுஃமான் அவர்களே தான் ஆரம்பத்தில் நுகுமான் என்றே எழுதி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயரை அவர் எவ்விதமும் எழுதலாம். அது தனிப்பட்ட உரிமை. எனக்குக் கேள்வி வந்ததற்குக் காரணம் அவரது 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' நூலைப் படிக்கும்போது அதில் அவர் ஃ எழுத்துக்குரிய இலக்கண விதியைக் குறிப்பிட்டிருந்தார். அதே நூலின் அட்டையிலுள்ள அவரது பெயரில் அந்த விதி கையாண்டிருக்கவில்லை என்பதை அவதானித்தேன். அந்நூல் மூலம் தமிழ் கற்க வரும் ஒருவருக்கு இவ்விதமாகவிருப்பது ஃ பற்றிய குழப்பத்தைத் தருமென்பதால் குறிப்பிட்டேன். அதற்கான காரணம் தெரிந்திருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

Muralitharan Sundaram:
Ahamed Jinnahsherifudeen பெயர் அவரவர் உரிமை, ஏன் பெற்றோரின் உரிமை... அரபு பெயர், ஆங்கில, சிங்கள பெயர்கள் தமிழர்களுக்கு உண்டு... இதில் என்ன இலக்கணம்... மூடத்தனமான தத்துவம் அதுவும்.. பெயரை மாற்றினால் என்ன என்றவகையில்... இப்படி எல்லாம் எழுதுவது வெட்கப்படவேண்டிய விடயம் மட்டுமல்ல உரிமை மீறலுமாகும். மொழி வளர்க்கும் மேதாவிகள்.

Saleem Sadeek:
Muralitharan Sundaram இது பதிவாளர் விடும் தவறுகள்.என்னிடம் கற்ற மாணவியின் பெயரை N.K.துசானியா என்று பிறப்புச் சான்றிதழில் பதிந்துவிட்டார்.N.K. என்பது தந்தையின் பெயரின் முதல் எழுத்து.நாகூர் கனி.பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச்சான்றிதழில் உள்ளபடி முழுப்பெயரை பதிவிடுமாறு அறிவுறுத்தல் தருவார்கள். பெற்றோர்கள் பெயர் பதியும் போது மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்.இதில் பல அனுபவங்கள் எனக்கு உண்டு.நான்தான் பாடசாலையில் பரீட்சை விண்ணப்பம் நிரப்புவது. எனது பெயர் தமிழில் சலீம் சாதிக். B.C இல் ஆங்கிலத்தில் SALEEM SADEEK.இவ்வாறு பதியப்பட்டுள்ளது.இதன்படிதான் எழுதி வருகிறேன்.எனது மகனின் பெயர் யஃயா சாதிக்.எனது பேரன் (மகளின் மகன்) பெயர் யஃயா.இது அரபுச் சொல்.எழுத்தாளர் அப்துல் ரஹீம்.தனது பெயரை அப்துற் றகீம் என்று தான் பதிவிடுவார்.

Ahamed Jinnahsherifudeen:
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் விதவாதன மன்னே. (நன்னூல் - 165).”சீறா புராணம்” விதிப்படி சீறாப்புராணம் என்றிருக்கவேண்டும். இங்கு தமிழல்லாத இரண்டு பிறமொழிச்சொற்கள் புணர்வதால்வதால் இவ்விதி அவசியமற்றதால் சீறா புராணம் என்றே அழைக்கப்படுகின்றது என எண்ணுகின்றேன் எனவே அரபுப்பதங்களை அதன்படி விட்டுவிடுவதே நன்றென எண்ணுகின்றேன்.

Sithaparanathan Ramesh
வேற்றுமொழி பெயருக்கு இலக்கணம் பார்ப்பது பொருந்தாது. பிறமொழிச் சொற்கள் எவ்வாறு தமிழில் வழக்கில் உள்ளது குறித்தும் அவருடைய நூல் பேசுகிறது. தற்கால வழக்கையும் உள்வாங்கி வாழ்வதுதான் மொழிவழக்கென பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் கூறியுள்ளார்.

Giritharan Navaratnam
Sithaparanathan Ramesh அவர் தன் பெயரை எப்படியும் எழுதலாம். பிறமொழிச் சொற்களுக்கு இலக்கண விதி பொருந்தாது. சரி. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் அவர். அந்நூலைப் பாவித்துத் தமிழ் இலக்கணம் படிக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் நூலின் அட்டையிலுள்ள ஆய்த எழுத்தின் பாவிப்பு சிறிது குழப்பத்தைத் தரும். அவர் ஏன் அவ்விதம் பாவிக்கின்றார் என்பது நியாயமான கேள்வி. அதற்கான அவரது பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் அவ்விதம் கேள்வி கேட்கக் கூடாது என்று யாரும் கூற முடியாது. வழக்கிலுள்ளதை உள்வாங்கித்தான் இலக்கணம் காலத்துக்குக் காலம் பரிணாமம் அடைந்திருக்கின்றது பேராசிரியர் அகத்தியலிங்கத்தின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

Yoga Valavan Thiya
நண்பரே , தனது பெயரை எப்படி எழுதுவது என்பது, எழுத்தாளர்/ பேராசிரியர் நுஃமானுக்கு உள்ள உரிமை. அவர் தெரிவாகவே உங்களுக்கு தெரிவித்துள்ளார், தனது தந்தை தனக்கு அவ்வாறே பெயரிட்டு, தனது பிறப்பு சான்றிதலில் பதிவு செய்துள்ளார் என ….. அதாவது, அவர் தனது பெயரை நுஃமான் என எழுதுவதை, அவரது தந்தைக்கு செலுத்தும் மரியாதையாக, கெளரவமாக, அஞ்சலியாக கருதுகின்றார் என நீங்கள் ஏன் கொள்ள கூடாது ? எதற்காக தமிழ் இலக்கணத்தை எடுத்தியம்பி அவரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்… நான் இன்று வரை தாவர போசனியாக இருப்பது எனது மறைந்த தந்தைக்கு செலுத்தும் மரியாதையாகவே கருதுகின்றேன். அதற்காக எவ்வகை கேலி கிண்டல்களையும் ஏற்று கொள்ள தயாராக இருக்கின்றேன் …

Giritharan Navaratnam
Yoga Valavan Thiya //எதற்காக தமிழ் இலக்கணத்தை எடுத்தியம்பி அவரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்…// அவரைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதற்காக நான் இக்கேள்வியை எழுப்பவில்லை. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியராக அவர் இருப்பதால், அவர் ஏன் ஆய்த எழுத்தை அவ்விதம் பாவிக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். அது தவறான விருப்பமல்ல.

Muralitharan Sundaram
Yoga Valavan Thiya உரிமைகளில் இலக்கணம் செய்வது நகைப்புக்குரியது, சிறுபிள்ளைத்தனமானது.

Balachandran Muthaiah
உங்கள் கருத்தை என்னால் ஏர்க்கமுடியவில்லை. இது Dudley Stamp ஐ ‘இடட்டிலி தாம்பு’ என எழுதுவது போன்றது! எந்தமொழியும் ஆற்றுத்தண்ணீர்போன்று போன்று இடத்துக்குதக்கதாக வளைந்து நெளிந்து ஏறி இறங்கி செல்லவேண்டும்!

Giritharan Navaratnam
Balachandran Muthaiah //உங்கள் கருத்தை என்னால் ஏர்க்கமுடியவில்லை.// இவ்விதம் கூறும் உங்கள் உரிமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது.

Balachandran Muthaiah
Giritharan Navaratnam that’s Giri

Saleem Sadeek
ஃ;க்கு உயிர் கொடுத்த நுஃமான்.
ஃ ; எஃகு. பலமான உருக்கு.

Giritharan Navaratnam
இங்கு ஆக்கப்பூர்வமாகப் பல்வகைக் கருத்துகளையும் பகிர்ந்த, பகிர இருக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Visvanathan Vishwa
எவ்வளவு பிரயோசனமான பதிவு. எத்தனை பேர் இதை வாசித்து அறிந்து கொள்வார்கள்?