எனக்கு வாசிப்பது, எழுதுவதைப்போல் இன்னுமொரு பிடித்த விடயமுமுண்டு. அது கற்றல். அவ்வப்போது 'டொராண்டோ'விலுள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எனக்குப் பிடித்த துறைகளில் பாடங்கள் எடுப்பது வழக்கம். 'டொராண்டோப் பல்கலைக்கழகம்' , 'யோர்க் பல்கலைக்கழகம்', 'சென்டானியல் கொலிஜ்', 'செனகா கொலிஜ்' என்று பல கல்விக்கூடங்களில் அவ்வப்போது பாடங்கள் எடுத்திருக்கின்றேன். வானியற்பியல், உயர் கணிதம், இலத்திரனியற் பொறியியல், குடிசார் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் என்று பல் துறைகளில் படித்திருக்கின்றேன். வாழ்க்கையின் போராட்டங்கள் மட்டுமில்லையென்றால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டிருக்கவே விரும்புவேன்.

தொழில் நுட்பக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் என் அபிமானக் கல்லூரி சென்டானியல் கொலிஜ்தான். இங்கு நான் எவ்வகைப் பாடங்களை எடுத்தாலும் அத்துறையில் உடனேயே வேலை கிடைத்து விடும்.

ஒரு மாத 'கணினி வரைபடஞர்' (CAD) பாடம் எடுத்தேன். உடனேயே 'கிங் சிட்டியில்' நில அளவையாளரின் நிறுவனத்தில் கணினி வரைபடஞராக வேலை கிடைத்தது. 'Soil Testing' எடுத்தேன். உடனடியாகவே மார்க்கம் நகரிலிருந்த பாகிஸ்தானியக் கனடியப் பொறியியலாளரின் நிறுவனத்தில் அத்துறையில் வேலை கிடைத்தது. இங்குதான் இலத்திரனியற் பொறியியற் தொழில் நுட்ப 'டிப்ளோமா'வும் படித்தேன். அதற்கும் படித்த உடனேயே அத்றையில் வேலை கிடைத்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் இத்தொழில் நுட்பப்படிப்பே.

இந்த 'டிப்ளோ'மாவை நான் விரும்பிப் படித்தேன். முதலாம் ஆண்டு சிறந்த மாணவனுக்கான விருதினை IEEE (The Institute of Electrical and Electronics Engineers ) வழங்கியது. இறுதியாண்டு சிறந்த மாணவனுக்கான விருதுகளை 'பெல் கனடா' நிறுவனமும், 'IEEE அமைப்பும் வழங்கின.
இங்குள்ள புகைப்படம் சென்டானியல் கல்லூரியின் விருது வழங்கல் நிகழ்வில் IEEE அமைப்பின் 'டொரோண்டோ'க் கிளையின் சார்பில் அதன் செயலாளர் ஸ்டான்டன் சேகோபிந் (Stanton Sheogobind) விருதினை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இது பற்றிய செய்தியினை IEEE அமைப்பின் 'டொரோண்டோக் கிளை வெளியிட்ட பிரசுரத்திலும் வெளியிட்டு வாழ்த்தியிருந்தார்கள். அதனையும் இங்கு காண்கின்றீர்கள்.

சென்டானியல் கொலிஜில் எமக்குப் பாடங்களை எடுத்த பேராசிரியர்கள் பலர் இன்னும் நினைவிலுள்ளார்கள். அவர்களில் ஏ.எம்.ஆச்சாரியாவை மறக்க முடியாது. இந்தியாவைச் சேர்ந்தவர். எமக்கு 'மைக்ரோபுரோசசர் புறோகிமிங்', இலத்திரனியல் துறைகளில் பாடங்கள் எடுத்தவர். அவர் எனக்கு அனுப்பியிருந்த நன்மதிப்புச் சான்றிதழையும் மறக்க முடியாது. அதனையும் இங்கு காண்கின்றீர்கள். அவர் இப்போது உயிருடனில்லை.
ஓய்வு பெற்றபின் மறைந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.