இன்று , ஜூலை 27,  மருத்துவர் இராஜசுந்தரம்  வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இலங்கைத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மருத்துவர் இராஜசுந்தரத்துக்கு முக்கியமான, நிலையானதோரிடமுண்டு. அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பன்முகப்பட்டது. 'கட்டடக்கலைஞர்' எஸ்.ஏ.டேவிட்டின் கனவான 'காந்தியச் சமூகம்' என்னும் மானுட விடுதலைக்கான தீர்வுத் திட்டத்தினை வட,கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு அவருடையது. அப்பங்களிப்பு மூலம் அக்காலகட்டத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து வதில் முழுமூச்சுடன் உழைத்தவர் அவர். இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அச்சூழலில் தவிர்க்கமுடியாதவாறு காந்தியம் அமைப்பும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. எல்லைப்புறங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் மேலும் விரிவு படாமலிருக்கவும், எதிர்காலக் குடியேற்றங்களைத் தடை செய்யும் நோக்கிலும் காந்திய அமைப்பு வடகிழக்கின் எல்லைப்பிரதேசங்களில் அதிகமான குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியது. இச்சமயத்தில் காந்திய அமைப்பினுள் சந்ததியாரின் வருகை அவ்வமைப்பினைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டது. பின்னர் காந்திய ஸ்தாபகர் 'டேவிட் ஐயா' , மருத்துவர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காந்தியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டனர். கனடாவில்  வாழ்ந்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களும் அவர்களிலொருவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அனுபவங்களைப் பதிவு செய்யும்படி கூறுவேன். அவரும் பதிலுக்குப் பதிவு செய்யப்போவதாகக்  கூறுவார். இறுதியில் பதிவு செய்யாமலேயே மறைந்து விட்டார்.

மருத்துவர் இராஜசுந்தரத்தின் முடிவும் துயரகரமானது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் யூலை 27இல் படுகொலை செய்யப்பட்ட சிறைக்கைதிகளில் அவரும் ஒருவர். ஜூலை 25 அன்று முப்பத்தைந்து சிறைக்கைதிகளும், ஜூலை 27இல் 18 சிறைக்கைதிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தங்கத்துரை (நடராசா தங்கவேல்), குட்டிமணி (செல்வராஜா யோகராசந்திரன்), ஜெகன் (கணேசானந்தன் ஜெகநாதன்) ஆகியோர் முதலாவதாக நடைபெற்ற படுகொலைகளின்போது கொல்லப்பட்டவர்களீல் அடங்குவர்.

மருத்துவர் இராஜசுந்தரம் பற்றி நினைத்ததும் தோன்றுவது அவருடன் பழகிய குறுகிய கால அனுபவங்கள்தாம். எண்பதுகளின் ஆரம்ப காலகட்டத்தில் மொறட்டுவை பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் காந்திய அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான தன்னார்வத் தொண்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டது. 'நாவலர் பண்ணை'யை மையமாகக்கொண்டு நடைபெற்ற செயற்பாடுகள் அவை. அவற்றின் பொருட்டு மாணவர்கள் பகுதி பகுதியாக வன்னிக்குச் செல்வார்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் இராஜசுந்தரம் நன்கு அறிமுகமானது அப்பயணங்களின் மூலம்தான். சந்ததியாரும் பலருக்கு வசந்தன் என்னும் பெயரில் அறிமுகமானதும் அப்பயணங்களின் மூலம்தான். 81-82 காலகட்ட நுட்பம் சஞ்சிகையில் சந்ததியாருடன் நேர்காணலொன்றும் (வசந்தன் என்னும் பெயரில் அப்போது அறியப்பட்டிருந்தார்) இடம் பெற்றதாக நினைவு. இவ்விதமான பயணங்கள் சிலவற்றின்போதுதான் மருத்துவர் இராஜசுந்தரத்துடனும் நன்கு உரையாடும் சந்தர்ப்பங்கள் எனக்கும் ஏற்பட்டன. நண்பர் எஸ்.கே.விக்னேஸ்வரனும் இப்பயணங்கள் சிலவற்றில் என்னுடன் வந்திருக்கின்றார். காந்தியம் ஏற்பாட்டில் நடைபெற்ற மூன்று நாட் கருத்தரங்கொன்றிலும் பங்கு பற்றியுள்ளார்.

மாலை மெயில் புகையிரதத்தில் கொழும்புக் கோட்டையில் பயணத்தை ஆரம்பித்து , நள்ளிரவில் வவுனியா சென்று நாம் செல்வது மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில்தான். அங்கு தங்கி மறுநாட் காலை அவரின் ஜீப்பில் நாவலர் பண்ணை செல்வோம். அச்சமயங்களில் விடாமல் எம்முடன் உரையாடி வருவார். காந்தியத்திட்டங்களைப்பற்றி ஆர்வத்துடன்  விபரித்து வருவார். எல்லைகளைப் பாதுகாக்க ஏன் காந்தியத் திட்டங்கள் மிகவும் அவசியம் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துரைப்பார். அவ்வுரையாடல்கள், அவற்றில் தெரியும் அவரது  எதிர்காலத்திட்டங்கள், கனவுகள் எல்லாவற்றையும் இப்போது மீண்டும் நினைத்துப்பார்க்கின்றேன்.

இவரைப்போல் எத்தனைபேர் மக்கள் நலத்திட்டங்களில் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தார்கள். குடியேற்றத்திட்டத்திலுள்ளவர்கள் பலரும் இராஜசுந்தரம் தம்பதியினர் தம் இல்லத்தில் நடத்திய மருத்துவநிலையத்தில் இலவசமாகச் சிகிச்சை பெற்றனர்.
அவரைப்பற்றி நினைத்ததும் இன்னுமொரு சம்பவமும் நினைவுக்கு வருகின்றது. இறம்பைக்குள அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற மூன்று நாட் கருத்தரங்கின் பிரதான பொருளாகத் 'தமிழீழமும் சமயமும்' இருந்தது. அக்கருத்தரங்கில் பாதிரியார் கனகரத்தினமும் பங்குபற்றி உரையாற்றினார். நாம் எமது கருத்துகளைத் தெரிவிக்கையில் 'சமயம் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்று  கூறுகின்றதே என்று சமயத்தை விமர்சித்தோம். அது ஃபாதர் கனகரத்தினத்தை வருத்தமடையச் செய்திருக்க வேண்டும். அது பற்றி எம்முடன் தனியாகப் பேசிய  மருத்துவர் இராஜசுந்தரம் 'அவ்விதம் கூறுவது சரியல்ல. அவரைப் போன்றவர்களின் தேவையும் இச்சமயத்தில் முக்கியம்' என்று கூறினார்.

மருத்துவர் இராஜசுந்தரத்தை நினைவு கூர்கையில் இவையெல்லாம் கூடவே நினைவில் நிழலாடுகின்றன. இன்று நினைக்கும்போது அக்காலத்தில் பல்வேறு கனவுகளில் ஆழ்ந்து செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவர் இராஜசுந்தரம் போன்றவர்களின் கனவுகளைக் காலம் எவ்விதம் சிதைத்துச் சென்றது என்பதும் நினவில் வருகின்றது. இவர்களின் செயற்பாடுகளின் வெற்றி தோல்விகளுக்கப்பால் இவர்கள் எல்லோரும் தம் காலகட்டப் பங்களிப்பை மானுட குலத்துக்கு வழங்கியவர்கள். தம் நோக்கங்களுக்கேற்பச் செயற்பட்டவர்கள். தம்மையும் பலி கொடுத்தவர்கள். அவ்வகையில் முக்கியமானவர்கள். அவ்வகையில் எப்போதும் நினைவு கூரப்படுவார்கள்.