வரலாற்றுச்சின்னம்: பாலத்தடி பஸ் தரிப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கிச் செல்லும் பாதை ஓட்டுமடத்தில் திரும்பி, காக்கைதீவு மீன் சந்தை, கல்லுண்டாய் வைரவர் கோயில், வழுக்கியாற்றுப்பாலம் தாண்டியதும் இரண்டாகப் பிரிகிறது. மேற்காகப்பிரியும் பாதை தெற்கு அராலிக்கூடாகச்சென்று மீண்டும் , வடக்கு அராலிக்கூடாகச் செல்லும் பாதையை வட்டுக்கோட்டைச் சந்தியில் சந்தித்து , கிழக்காகச் செல்லும். வடக்காகக் செல்லும் பாதை  காரை நகரை நோக்கிச் செல்லும்.

இவ்விதம் வழுக்கியாற்றுப் பாலத்தைக் கடந்ததும் பாதை இரண்டாகப் பிரியும் சந்தியில் அமைந்திருந்த பஸ் தரிப்பையே நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இப்போது இந்த பஸ் தரிப்பை நீங்கள் காண முடியாது.
இது பற்றிய எனது பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் Gnane Buwan Gnanendran அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார்:

"இது பழைய பாலத்தடி பஸ் தரிப்பு.2018 இல் தகர்க்கப்பட்டு மரமும் தறித்து அலுமின தகட்டிலான பஸ் தரிப்பு உள்ளது. மேலும் வடக்கு நோக்கிய காரைநகர் பாதை அகலப் படுத்தி சீர் செய்ய படுகிறது. அந்த முருகமூர்த்தி கோயில் பஸ் தரிப்பும் அகற்ற பட்டுள்ளது."

அவரது எதிர்வினை மூலம்தான் அங்கிருந்த பஸ் தரிப்பு அகற்றப்பட்ட விடயத்தை அறிந்தேன். இந்நிலையில் முன்பிருந்த பஸ் தரிப்பை வெளிப்படுத்தும் இந்தப்புகைப்படத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. ஒரு காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னமாக இப்புகைப்படம் மாறிவிட்டது. இப்புகைப்படத்தை நான் எடுத்தது எப்படி தெரியுமா? கூகுள் 'வீதிக்காட்சி' மூலமேதான்.


கூகுள் வரைபடத் தவறு!

யாழ் குடாநாட்டிலிருந்து பூநகரிக்குச் செல்வதற்கு கடலினூடு பாலம் அமைத்து விட்டார்கள். நீண்ட காலத்துக்கு முன்பே தீவுப்பகுதிக்குச் செல்வதற்குப் பண்ணைப்பாலம் வழியாகத் தரைப்பாதை அமைத்து விட்டார்கள். காரைநகருக்கும் பாலத்தினூடு பாதையுண்டு. இன்னுமொரு பாதை அமைப்பதற்கும் நீண்ட நாட்களாகத் திட்டமொன்றுண்டு. அது: அராலித்துறையிலிருந்து ஊர்காவற்றுறைக்குக் காக்கைதீவுக் கடலினூடு பாலம் அமைப்பது. அது மட்டும் அமைத்து விட்டால் புங்குடுதீவுக்கு அராலியிருந்து  நேராகச் செல்லலாம்.  

அண்மையில் கூகுள் வரைபடம் மூலம் யாழ் நான் அராலித்துறையினை நோக்கியபோது எனக்கோர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆம்! அந்தப்பாதையை கூகுள் வரைபடத்தில் காணமுடிந்தது. AB 39 என்று இங்குள்ள கூகுள் வரைபடத்தில் இலக்கம் இடப்பட்டுள்ள பாதைதான் நான் குறிப்பிடும் பாதை. கூகுள் வரைபடத்தில் தீவுப்பகுதியும், அராலித்துறையும் இணைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. நானும் முதலில் பாதையை அமைத்து விட்டார்களாக்குமென்று எண்ணி விட்டேன்.  ஆனால் உண்மையென்னவென்றால் இதுவரை அப்பாதை அமைக்கப்படவில்லை என்பதைத்தான். கூகுள் வரைபடத்தில் தவறுதலாக அப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒரு கேள்வி. ஏன் நீங்கள் இப்பாதையை அமைப்பதைத் துரிதப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது?

இப்பாதையைப்பற்றிய நினைவுகள் எனக்குக் கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை நினைவுக்குக் கொண்டு வந்தது. 1984-1987 காலகட்டத்தில் தமிழ்ப் போராட்ட அமைப்புகள் அராலித்துறையைத் தம் கைகளுக்குள் போட்டு , படகுச் சேவைகள் மூலம் தீவுப்பகுதிக்கு மக்களை ஏற்றிச் சென்று சம்பாதித்தார்கள். அக்காலகட்டத்தில் போர்ச்சூழல் காரணமாக அராலித்துறையே தீவுப்பகுதிக்குச் செல்வதற்குரிய முக்கிய பாதையாக விளங்கியது. போர்ச்சூழலற்ற சாதாரண சமயங்களில் பண்ணைப்பாலம் வழியாக, காரைநகர் வழியாகப் படகுகள் மூலம் சென்று வருவார்கள்.  அப்பொழுது அராலித்துறை வழியாகப் படகுச் சேவைகள் செய்த  முக்கிய  அமைப்புகள் விடுதலைப்புலிகளும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும்தாம். அச்சமயத்தில் படகுகளுக்குப் பதில் பெட்ரோல், டீசல் 'ட்ரம்'களைக்கொண்டு பெரியதொரு வத்தையைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் வெற்றிகரமாகத் தயாரித்து ,மக்களை அராலித்துறையிலிருந்து தீவுப்பகுதிக்கு ஏற்றிச் சென்ற  விடயத்தை 'வெகுண்ட உள்ளங்கள்' பதிவு செய்கின்றது. கூடவே அப்பகுதி மக்கள் மத்தியில் குறிப்பாகக் கடற்றொழிலாளர்கள் மத்தியில்  இயக்கங்களின் வரவு ஏற்படுத்திய தாக்கங்களையும் நாவல் பதிவு செய்கின்றது. அவ்வகையில் முக்கியமான , வரலாற்று ஆவணச்சிறப்புள்ள நாவலது. 'வெகுண்ட உள்ளங்கள்' தாயகம் (கனடா) சஞ்சிகையில் தொடராக வெளியானது. பின்னர் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான 'வேலிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.