அவர் கூறினார் 'இன்று நானொரு முயல் பிடித்தேன்'.
'அதிலென்ன ஆச்சரிய'மென்றேன்'
'ஆச்சரியமுண்டு' என்றார். எனக்கோ ஆச்சரியம்.
"நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்றார்.
'சில பிரசவங்களில் அப்படி நடப்பதுண்டு' என்றேன்.
'இல்லை இது  நல்ல பிரசவமே' என்றார்.
'இருங்கள் காட்டுகின்றேன்' என்றார்.
கூட்டினுள்ளிருந்த முயலைக்
கைகளிலேந்தி வந்தார்.
நான்கு கால்களுடன் முயல்
நல்லநிலையில் இருந்தது.
'முயலுக்கு நான்கு கால்கள்' என்றேன்.
'நன்றாகப் பாருங்கள். முயலுக்குக் கால்கள்
நான்கு இல்லை. மூன்றுதான்' என்றார்.

மேலும் சொன்னார்.
'முயலுக்குக் கால்கள் மூன்றுதான்.
மேலதிகமானது காலல்ல' என்றார்.
'காலல்லவென்றால் வேறென்ன' என்றேன்.
'கையென்றார்'
'கையா!' என்று ஆச்சரியப்பட்டேன்.
'கையேதான். கரட் புடுங்கிச் சாப்பிடுவது அந்தக்
கையினால்தான்' என்று தீர்க்கமாகக் கூறினார்.
அவரது தீர்க்கமான நம்பிக்கை திகைக்க வைத்தது.
'முயலின் கை பற்றிக் கேட்டதில்லை நான்.
முடிவாகத்தான் கூறுகின்றீர்களா?' என்றேன்.
'முடிவாகத்தான் கூறுகின்றேன்.
முயலின் கையைக் காலாகக் கருதிவிட்டார்கள்.
அறிவியற் தவறு. வரலாற்றுத் தவறு.
அதைக் கையென்று  நானே கண்டு பிடித்தேன்.
அதற்காக எனக்கு நோபல் விருது கிடைக்கவிருக்கிறது.'
நான் கூறினேன்
'நண்பரே! உங்களுக்கு வாழ்த்துகள். ஆனால்
நான் கூறுவேன் முயலுக்கு நான்கு கால்கள்தாம்.
நான் நம்ப மாட்டேன்
நீங்கள் கூறுவதை' என்றேன்.
'முயலுக்கு மூன்று கால்கள் என்பதை நம்பாத
முட்டாள் நீ' என்றார்.
'வார்த்தையை அளந்து பேசும்' என்றேன்.
'வார்த்தையை அளந்து பேசுவதில்லை'என்றார்.
'வாரி இறைப்பேன் வார்த்தைகளை'என்றார்.
அத்துடன்
'அளக்காமல்தான் அள்ளி வீசுவேன்' என்றார்.
'அதில் நான் வல்லவன்' என்றார்.
வழியில் வந்தவர் நின்றார். எங்கள் வாதத்தைக் கேட்டார்.
அவர் அவரிடம் கேட்டார்  "ஐயா நீங்களே  கூறுங்கள்.
முயலுக்கு எத்தனை கால்கள்.
மூன்றுதானே?'
நான் கேட்டேன் 'நீங்களே கூறுங்கள்.
முயலுக்குக் கால்கள் நான்குதானே'
வந்தவர் கூறினார் 'உங்கள்
வாதம் எனக்கு எரிச்சலைத் தருகிறது.
உண்மைதெரியாதவர்கள் நீங்கள்.
உண்மையில் முயலுக்குக் கால்கள்
மூன்று அல்ல. ஆனால் நான்கும் அல்ல'
'முடிவாக என்னதான் கூறுகின்றீர்கள்'
என்றார் அவர்.
என்றேன் நான்.
வழியில் வந்தவர் கூறினார்:
'முயலுக்குக் கால்கள் இரண்டு.
மற்ற இரண்டுமே கைகள்.
கால்கள் நடப்பதற்கு.
கைகள் உண்பதற்கு.
இதிலென்ன வாதம்!
இதுதான் என் முடிவு!'.