அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் இலாபநோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பின் காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் யாழ் மாவட்டத்தில் நிலவும் நல்ல தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் எனக்கு அண்மையில் பார்த்த காணொளியொன்றின் நினைவு தோன்றுகின்றது. இந்தியக் கிராமமொன்று உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக்கியது பற்றிய காணொளியது. குருகிராம் என்னும் வட இந்தியக் கிராமமொன்று எவ்விதம் நல்ல தண்ணீரைப் பெற்றது என்பது பற்றியது. அவர்கள் என்ன செய்தார்களென்றால்.. நல்ல தண்ணீர் ஓடும் கால்வாயின்றிலிருந்து குழாய்வழியாக நல்ல தண்ணீரைப்பெற்று சிறு குளமொன்றை உருவாக்கினார்கள். அவ்விதம் குளம் உருவாக்கப்பட்டுச் சில மாதங்களின்பின் அக்குளமானது அப்பகுதியிலிருந்த உப்புத்தண்ணீரை நீக்கி நல்ல தண்ணீராக்கிவிட்டது.
 
இவ்விதமான முறையைப்பாவிப்பதன் மூலம் ஏன் யாழ் மாவட்ட நீர்ப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இரணை மடுக்குளத்திலிருந்து தண்ணீரைக் குழாய்கள் மூலம் பெற்று இருக்கும் சிறு குளங்களை நிரப்புவதன் மூலம், அல்லது தேவையான இடங்களில் சிறு குளங்களை உருவாக்குவதன் மூலம் ஏன் அப்பகுதித் தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது?
உண்மையில் இவ்விதமானதொரு திட்டத்தை இலங்கை அரசானது 2006இல் உருவாக்கியது. ஆசிய அபிவிருத்தி வங்கி, ஃபிரான்ஸ் அபிவிருத்தி அமைப்பு ஆகியவற்றின் துணையுடன் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இடையில் தமிழ் அரசியல்வாதியொருவரிடமிருந்து எதிர்ப்பு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். தற்போது அத்திட்டத்தின் நிலையென்ன? ஏன் நம் அரசியல்வாதிகள் எவருமே அதுபற்றிக் கதைப்பதில்லை? நடைமுறைப்படுத்த அரசை ஏன் வேண்டுவதில்லை.
 
அரசியல் வேறுபாடுகளை மறந்து இதற்காக நம் அரசியல்வாதிகள் , அரசியல் அதிகாரிகள் செயற்பட வேண்டும். அவ்விதம் செயலாற்றினால் யாழ் மாவட்ட மக்களுக்கு, விவசாயிகளுக்கு மிகுந்த பயனாக அத்திட்டம் அமையும்.
 
மேற்படி ஓராயம் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் இரணைமடுக்குளத்திலிருந்து யாழ் மாவட்டத்துக்குத் தண்ணீரை எடுக்கும் திட்டம் பற்றி எதுவும் கூறவில்லை. அவர்கள் இத்திட்டம் பற்றியும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
 
1. தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்த்த இந்தியக் கிராமம் பற்றிய காணொளிக்கான இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=kVi5GHx9VCw&t=9s
 
2. யாழ் இந்துக்கல்லூரி மாணவர் அமைப்பான ஓராயம் அமைப்புக் காணொளி: https://www.youtube.com/watch?v=kqOC9vjRLNo
 
3. இரணைமடுக்குளம் பற்றிய வரலாறு: https://en.wikipedia.org/wiki/Iranamadu_Tank