இன்று ஒரு துயரம் நிறைந்த நாள். எதிர்பாராத தகவலொன்றினை நண்பர் சிவா கந்தையா 'மெசஞ்சர்' வாயிலாக அனுப்பியிருந்தார். நண்பர் குணபாலனும் தொலைபேசியெடுத்து அறியத்தந்திருந்தார். அவருடன் தொடர்பிலிருந்த நண்பர் கிருஷ்ணாவும் அறியத்தந்திருந்தார். நண்பர் நவரஞ்சனின் (கோண்டாவில்) மறைவு பற்றிய செய்தி. நம்ப முடியவில்லை. நேற்றிரவு கூட எட்டு மணியளவில் முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். செய்தியைக் கேட்டபோது மன அழுத்தம், கொரோனாத் தொற்று நோய்த்தனிமை இவையெல்லாம் இன்னும் எத்தனைபேரை நம்மிடமிருந்து பிரிக்கப்போகின்றதோ என்ற எண்ணமே மேலெழுந்தது. கூடவே அவரை முதன் முதலில் சந்தித்த காலகட்ட நினைவுகள் எழுந்தன. நாட்டை விட்டு நீங்கி, அமெரிக்காவில் ஒரு வருடம் அலைந்து திரிந்து, 'கல்வியங்காடு கண்ணன்' என்னும் நண்பருடன் மொன்ரியால் வழியாகக் கனடாவுக்குள் வந்தபோது கண்ணன் மூலம் தற்காலிகமாக மொன்ரியாலில் கோண்டாவில் சுந்தரி (சிவா ஸ்டோர்ஸ் சுந்தரலிங்கம்) , ரஞ்சன் போன்றோர் வசித்து வந்த அபார்ட்மெண்டில் தங்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளைக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் சுந்தரியும் அவரது நண்பர்களும். சுந்தரி, நவரஞ்சன், குணபாலன், ஜெயந்தி (உரும்பிராய்), கஜன் , குகன் என்று இளைஞர்கள் பலர் உத்தியோகபூர்வமாகக் கழகத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் மொன்ரியாலிலிருந்து 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.  நவரஞ்சன் அச்சஞ்சிகை வெளிவருவதற்காகக் கடுமையாக உழைத்தவர்களிலொருவர். இலட்சியக் கனவுகளுடன், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இயங்கிக்கொண்டிருந்த நவரஞ்சனின் முகம் இப்பொழுதும் நினைவில் பசுமையாக காட்சியளிக்கின்றது.

இன்று காலம் செல்வம் நடாத்தி வரும் 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சியையும் 'காலம்'செல்வம், எல்லாளன், குமார் மூர்த்தி , குகன் போன்றோருடன் இணைந்து ஆரம்பித்தவர்களிலொருவர் நவரஞ்சன் என்பதும் முக்கியமாக நினைவில் வைக்கவேண்டியதொரு விடயம். அவரது சமூக, அரசியற் பங்களிப்புகள் கனடியத் தமிழர் வரலாற்றில் முக்கியமான ஆரம்ப காலப்பங்களிப்புகள்.

காலம் எவ்வளவு கொடியது. எப்படியெல்லாம் இலட்சியக்கனவுகளுடன் இயங்கியவர்களை எப்படியெல்லாம் சீரழித்துவிட்டுள்ளது. அவரது இறுதிக்காலத்தில் பல்வேறு உடல் ,உள உபாதைகளினால் பீடிக்கப்பட்டிருந்தவருக்கு அவற்றிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.

இருந்தவரை தனது ஆளுமையினால் அனைவரையும் கவர்ந்திருந்தவர் நவரஞ்சன். என்னைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே மறக்க முடியாத ஆளுமைகளிலொருவர் அவர். அவர் மறைவால் துயருறும் அனைவர்தம் துயரிலும் நானும் பங்குகொள்கின்றேன்.

* இங்குள்ள புகைப்படம் நான் கனடாவுக்கு வந்தபோது மொன்ரியலில் 'சுந்தரி' இருப்பிடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இடமிருந்து வலமாக: நான், சுந்தரி (சிவா ஸ்டோர்ஸ்), நவரஞ்சன், ஈசன் & கண்ணன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.