ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds)  என்னும் இணைய இதழின் வசந்தம் 2021 இதழில் எனது இரு கவிதைகளும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு:

1. கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம் - வ.ந.கிரிதரன் - (A WALK THROUGH CORONA-WRAPPED NIGHT) - ஆங்கில மொழிபெயர்ப்பு -முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் (Dr.K.S.Subramanian ).-
2. கவிதை: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - வ.ந.கிரிதரன் - (LIBERATED BIRD OF THE SECLUDED EMPIRE)- ஆங்கில மொழிபெயர்ப்பு - முனைவர் ஆர்.தாரணி (Dr.R.Dharani) -

எனது 'கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்' கவிதை அண்மையில் மறைந்த முனைவர் கே.எஸ்.சுப்ரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான கொரொனா அனுபவக் கவிதைகளின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதும்
குறிப்பிடத்தக்கது. இதழில் தவறுதலாக நான் இந்தியாவைச் சேர்ந்தவரென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நான் இலங்கைத்தமிழர்.

'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்ட இணையக் காலாண்டிதழ் பற்றிய அறிமுகக் குறிப்பு!

'சொற்களும், உலங்கங்களும்' (Words & Worlds) என்னும் காலாண்டு , இருமொழி (ஜேர்மன் / ஆங்கிலம்) இணைய இதழ் ஆஸ்திரியாவின் இலக்கிய, கலாச்சார அமைப்பின் ஆதரவுடன் வெளியாகின்றது.  புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் தம் படைப்புகள் மூலம் தொடர்பு கொள்வதற்கும், குடியேறிய நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோருக்குத் தம் படைப்புகளை அறிமுகப்படுத்துவதற்குமான தளமாக இவ்விணைய இதழ் விளங்குகின்றது.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் புலம்பெயர் அனுபவங்களில் இச்சஞ்சிகையின் முக்கிய கவனமிருந்தாலும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் அவர்கள்தம் புலம்பெயர்ந்த அனுபவங்களை மட்டுமே முக்கிய கருப்பொருளாகக் கொண்டிருக்க
வேண்டிய தேவையில்லை.  உலகின் பல பாகங்களிலுமுள்ள புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்கள்தம் தாய்மொழிகளிலும், ஆங்கிலத்தில் அல்லது ஜேர்மனிய மொழியில் வெளியாகும்.

'சொற்களும், உலகங்களும்' (வசந்தம் 2021) இதழின் ஆசிரியர்கள்:  Dr. AFTAB HUSAIN & Mag. SARITA JENAMANI

இச்சஞ்சிகை இரு பிரதான பிரிவுகளைக் கொண்டது: ஆஸ்திரியாவின் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் , அடுத்தது உலகின் ஏனைய பாகங்களில் வாழும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள்தம் படைப்புகள்.

வசந்தகால (2021) 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) இதழில் இடம் பெற்றுள்ள எனது கவிதைகளை வாசிக்க: https://www.wordsandworldsmagazine.com/current-issue-aktuelle-ausgabe/poetry-gedichte/navaratnam-giritharan/

வசந்த கால (2021) 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) ) இணைய இதழை வாசிக்க: https://www.wordsandworldsmagazine.com/


1.

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்! - வ.ந.கிரிதரன் -

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.
இயற்கையைச் சுகித்துறங்குகிறதா
இந்த மாநகர்?
என் நகர்வலம் தொடர்கிறது.
தொலைவில் ஒண்டாரியொ வாவி
விரிந்து கிடந்தது.
வாவிக்கரையில் குழந்தையை
வாரிமுகர்ந்தபடி நரி அன்னை..
வீதியை ஊடறுத்து மான்கள் சில
விரைந்து மறைந்தன.
மானுடரின் மெளனத்தில்
மிருகங்களின் புத்துயிர்ப்பு
ஓசோன் துவாரம் சிறுத்ததாம்;
ஓடும் கங்கை நீர் தெளிந்ததாம்.
அத்தியாவசியச் செலவில் வாழ்வில்
அத்தியாவசியமற்ற செலவுகள்
அருகினவாம்..
நகர்வலம் முடிந்து மீள்கையில்
மென்துயரில் தோய்ந்ததென்
நெஞ்சம்.
தெளிவிழக்கப்போகின்ற நதிகளை,
உலகை எண்ணினேன்.


ஆங்கில மொழிபெயர்ப்பு: முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் (Dr.K.S.Subramanian ).

A WALK THROUGH CORONA-WRAPPED NIGHT

I came out
in a midnight.
The city was immersed in slumber.
The impact of virus.
The city remained curled up.
Why not a spin on the bicycle.
Yes, I did.
My city sojourn continues.
At a distance in majestic response
Lake Ontario.
On the bank cuddling its young one
a mother fox.
Darting across the street
and disappearing in a trice
a few deer.
It seems
Ozone hole has shrunk.
The flowing Ganges turned clean.
In a life ruled by essentials
the fancy purchases of non-essentials
have shrunk.
While returning
after the city round
my heart seized by a mild grief.
The rivers going to lose their
limpidity.


கவிதை: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை.

தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே. இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே
கட்டுக்களற்ற உலகில
கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில்
சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில்
பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.இசை
பாடிடுமெழிற் புள்ளெனவே..

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்திருப்பவர் முனைவர் ஆர்.தாரணி (Dr.R.Dharani)
 
LIBERATED BIRD OF THE SECLUDED EMPIRE

I was bound in the empire of seclusion
Neither as a slave nor as an emperor …. Never
As the completely liberated bird that
Incessantly renders the musical note of joy
In the unfettered world, is there any phantom of distress?
In the world with no laws, is there any dejection possible?
The luminous companions hid themselves sheepishly behind my soaring
In the avenues of the Cosmos, it’s highly condescending
To hang on to the drifting flutter.
In the purpose-manifest life,
No repercussions nor yearning
I was bound in the empire of seclusion
Neither as a slave nor as an emperor …. Never
As the completely liberated bird that
Incessantly renders the musical note of joy