- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின்  நினைவு தினம் மார்ச் 3 -

இலங்கைத்  தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரன் சஞ்சிகைதான். சிரித்து இரன் என்னும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பான பெயர் மட்டுமல்ல சஞ்சிகையின் நோக்கத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தும் பெயர். யாழ் மாவட்டக் கரவெட்டியைச் சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சுந்தர்) இந்தியாவுக்குக் கட்டடக்கலை கற்கச் சென்று சிறந்த கேலிச் சித்திரக்காரர்களிலொருவராகத் திரும்பி வந்தார். இந்தியாவில் 'பிளிட்ஸ்', 'கொஞ்ச்' சஞ்சிகைகளில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களாக விளங்கிய ஆர்.கே.லக்‌ஷ்மண், போல் தாக்கரே ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இலங்கை திரும்பிக் கட்டடத்திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றியவரைத் தினகரனில் கேலிச்சித்திரங்கள் வரைய அழைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள்.  அப்பொழுது இவர் தினகரனில் சுந்தர் என்னும் பெயரில் வரைந்த 'சவாரித்தம்பர்' என்னும் தொடர் கேலிச்சித்திரங்களை மறக்கவே முடியாது. அவரது ஊரான கரவெட்டியில் வாழ்ந்த, அவருக்கு அறிமுகமான ஒருவரை ஆதர்சனமாகக்கொண்டே அவர் அப்பாத்திரத்தை  உருவாக்கியதாக ஊடகக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். அத்தொடரில் வரும் சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவேட்டியில் வாழ்ந்தவர்கள் என்றும் அக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். பின்னர் அவர் 1963இல் சிரித்திரன் சஞ்சிகையை கொழும்பில் ஆரம்பித்ததும், அதன் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டதும் யாவரும் அறிந்ததே.

சிரித்திரன்  சஞ்சிகையின் பிரதான நோக்கம் நகைச்சுவை இலக்கியம்தானென்றாலும், சமூக, அரசியல் முக்கியத்துவம் மிக்க சிறுகதைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகளும் அதில் வெளியாகியுள்ளன. இவற்றால் அவர் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கினார். எழுத்தாளர் சுதாராஜ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரனே. அவரது பல கதைகள் சிரித்திரனில் வெளியாகியுள்ளன. செங்கை ஆழியானின் புகழ்பெற்ற நகைச்சுவை நாவலான 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'கொத்தியின் காதல்' ஆகியவற்றை நான் முதன் முதலில் வாசித்தது சிரித்திரன் சஞ்சிகையில்தான். இன்று இலங்கைத் தமிழிலக்கியத்தில் கால் பதித்திருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகள் பல சிரித்திரனில் வெளியாகியுள்ளன.

சிரித்திரன் சஞ்சிகையைப் பொறுத்தவரையில் என் எழுத்துலக வாழ்க்கையில் முக்கியமானதோர் இடமுண்டு. எனது முதலாவது சிறுகதையான 'சலனங்கள்' , சிரித்திரன் நடாத்திய அ.ந.கந்தசாமி ஞாபகார்த்த சிறுகதைப்போட்டியில் பாராட்டுப்பெற்ற சிறுகதைகளிலொன்றாக வெளியானது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி  கற்றுக்கொண்டிருந்தேன். இன்னுமொரு முக்கிய விடயமும் உண்டு. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில், இதழாசிரியர்களில் நான் முதன் முதலில் என் மாணவப்பருவத்தில் நன்கு பழகிய ஒரேயொருவர் என்றும் சிரித்திரன் ஆசிரியரையே குறிப்பிடுவேன். சிரித்திரன் சஞ்சிகையில் கவிதைகள் இரண்டும் (சிறுவர் கவிதை 'சிட்டு', போட்டியொன்றில் பாராட்டுப்பெற்ற கவிதை 'மையல்' ஆகியவை), அவர் வெளியிட்ட சிறுவர் சஞ்சிகையான 'கண்மணி' சஞ்சிகையில் எனது சிறுவர் சிறுகதையான 'அரசாளும் தகுதி யாருக்கு?' என்னும் கதையும் வெளியாகியுள்ளன. மாணவனான என்னுடன் சரிக்கும் சமமாக அவர் உரையாடிய அக்காலகட்ட நினைவுகளை இன்னும் என் ஆழமனத்தில் பாதுகாத்து வைத்துள்ளேன். வீதியில் எங்கு கண்டாலும் சில நிமிடங்களாவது நின்று உரையாடிவிட்டே செல்வார். ஆரம்பத்தில் அவர் ஐயனார் ஆலய வீதியில் வசித்து வந்தார். பின்னர் கே.கே.எஸ் வீதியில் வீடொன்றைக் கட்டி வாழ்ந்தார். ஐயனார் ஆலய வீதியில் வசித்த காலத்தில் எனது நாவலொன்றை , 'மண்ணின் மாண்பு' என்னும் தலைப்பிலானது, அவரிடம் சென்று கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையில் உல்லாசப்பயணிகளால் ஏற்பட்ட சீரழிவை மையமாகக்கொண்டது. அது சிரித்திரனில் வெளியாகவில்லை. என்னிடமும் வேறு  பிரதிகளுமில்லாததால் அப்படியே அதன் கதையும் முடிந்து போனது.

பின்னர் அவர் கே.கே.எஸ் வீதியில் வாழ்ந்துகொண்டிருந்த சமயம் நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த நான் அவரைச் சென்று சந்தித்தேன். அந்த வீட்டை வடிவமைத்தவர் கட்டடக்கலைத்துறையில் எனக்கு ஒருவருடம் 'சீனியரா'கவிருந்த சிவசாமி குணசிங்கம் அவர்களே. தற்போது அவர் கட்டடக்கலைஞராக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். அவ்விதம் அவரை நான் சந்தித்தபோது அவர் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். வாஸ்து சாத்திர முறைப்படி சில மாற்றங்களை அவரது மனைவி செய்ததையும் நினைவு கூர்ந்தார். அதுவே அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.

சிரித்திரன் சஞ்சிகையில் வெளியாகும் படைப்புகளைப்போல் அதில் வெளியாகிய விளம்பரங்களும் முக்கியமானவை. ஆசிரியரது கேலிச்சித்திரங்களுடன் வெளியாகிய விளம்பரங்களை அவ்வளவு இலேசில் மறந்து விட முடியுமா என்ன? உதாரணத்துக்குச் செய்யது பீடி விளம்பரத்தைக் குறிப்பிடலாம். 'இழுக்க இழுக்க இன்பம்' என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு விளம்பரம் அது.

இப்பொழுது மீண்டும் சிரித்திரன் பழைய இதழ்களைப்புரட்டுகையில் அவரது கேலிச்சித்திரங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன. அத்துறையில் அவரது திறமையினை மேலும் அதிகமாக உணர முடிகின்றது. தனி ஒருவராகத் தன் ஓவியத்திறமையினை நம்பி , தமிழ் கலை, இலக்கியத்துறையில் சாதித்துச் சென்றிருக்கின்றார். அதே சமயம் நான் இன்னுமொன்றையும் அடிக்கடி நினைப்பதுண்டு. சம கால அரசியலில் அவர் தன் கேலிச்சித்திரத் திறமையினை அதிகமாக , ஆர்.கே.லக்சுமணன் போன்று பாவித்திருந்தால் ,  இலங்கையின் அனைத்தின ஊடகங்களும் அவரைப்பாவித்திருக்கும் என்பதுதான் அது.
மார்ச் 3 சிரித்திரன் ஆசிரியரின் நினைவு தினம். அவரது நினைவு தினம் அவரைப்பற்றிய நினைவுகளை ஆழ்மனத்திலிருந்து மேலெழுப்பி விட்டது.  அவர் நினைவாக அவரது புகழ்பெற்ற மகுடி கேள்வி-பதில் பகுதிகளிலிருந்து சில கேள்வி -பதில்களை இங்கு தருகின்றேன். சுவைத்து சிரித்து இருங்கள்.

மகுடி கேள்வி பதில்கள்

1. செல்வி.எஸ்.கல்யாணி, பலாலி
கே: கூலிக்குத் தாலி கட்டுபவர்களைப்பற்றி உமது கருத்து என்ன?
ப: கூலிக்கு வேலி அடைப்பவர்கள்

2. ஆர்.டி.சிறில், மயிலிட்டி
கே: 'பச்சிலர்' திருமணம் செய்தால்?
ப: பேச்சிலர்.

3. க.அச்சுதன், சங்கானை
கே: எங்களுக்கும் காலம் வரும்.  காலம் வந்தால்?
ப: காலன் வருவான்

4. மு.கருணாநிதி, ஏழாலை மேற்கு
கே: அன்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதைப்பற்றிச் சிறிது கூறுங்கள் பார்க்கலாம்?
ப: அன்பு, நல் அறஞ் செய்ய விரும்பும்;  காதல் , இல் அறஞ் செய்ய விரும்பும்.

ம.வேதநாயகம்,  112/4, சென்.தோமஸ் வீதி , கொழும்பு -15
கே. அண்ணனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்; அதைக் கண்ட அவள் அப்பனும் நோக்கினான், - இதைச் சந்தர்ப்பம் கூறி விளக்கும் மகுடியாரே!
ப. இது அயோக்கிய காண்டத்தில் வரும் , தந்தை சூழ்ச்சிப் படலத்தில் ஒரு பாகமாகும்.