தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

இது போதாதா என் உவகைக்கு.
அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள்
கொட்டிக் கிடக்கின்றன.
இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை
என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன.
தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும்
எம்முலகத்து உயிர்களுக்குமிடையில்
தோற்றத்தில்., செயற்பாடுகளில்
வேறுபாடுகள் பெரிதாக இல்லை.
இருந்தாலும் முக்கிய வேறுபாடொன்று
மிகப்பெரிய வேறுபாடென்பேன்.
அந்த ஒரு வேறுபாடு போதும்
அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு.
ஆம்! பரிமாணங்களில்
எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது.
இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து
உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும்
எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது
எண்ணுவதுண்டு.
"உனக்குக் கீழே! உள்ளவர் கோடி!
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு."
கண்ணதாசனின் வரிகளை நான் எண்ணுவது
தட்டையர்களைப்பற்றி எண்ணுகையில்தாம்.
எமக்கும் கீழே. தட்டையர் கோடி!
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுவோம்!


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.