நல் இலக்கிய உரை கேட்போம்: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்! முனைவர் ஜி.ஞானசம்பந்தனின் நல்லதோர் உரை!

எனக்குக் காப்பியங்களில் மிகவும் பிடித்த காப்பியம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம். முதன் முதலாக எனக்குச் சிலப்பதிகாரம் அறிமுகமானதுக்கு முக்கிய காரணம் எனது தந்தையார். என் பால்ய பருவத்தில் நான் அனைத்துத் தமிழ் வெகுசன இதழ்கள், புனைகதைகளில் மூழ்கிக் கிடந்தேன். அவற்றையெல்லாம் வாங்கிக்குவித்த அப்பா தமிழ் இலக்கிய நூல்களையும் அக்காலகட்டத்தில் வாங்கித் தந்தார். புலியூர்க் கேசிகனின் பொழிப்புரையுடன் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை ஆகிய நூல்களையும் வாங்கித்தந்தார். கூடவே பாரதியாரின் பாடற் தொகுப்பினையும் வாங்கித்தந்தார். இவற்றுடன் ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம் என்னும் பெயரில் பின்னர் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்பகாலத்தலைப்பு), 'சக்கரவர்த்தித்திருமகன்' (இராமாயணம் என்னும் பெயர் மாற்றம் பெற்ற நூலின் ஆரம்ப காலத்தலைப்பு)  ஆகிய இதிகாச உரைநடை நூல்களையும் வாங்கித்தந்தார்.  இதனால் என் பால்ய பருவத்திலேயே இந்நூல்களெல்லாம் அறிமுகமாகிவிட்டன.

ஆரம்பத்தில் சிலப்பதிகாரம் எனக்கு அதன் கதையூடு, இனிய கவிதைகளினூடு பிடித்ததென்றால், என் வயது ஏற ஏற , பருவங்களுக்கேற்ப பல்வேறு காரணங்களினால் பிடிக்கத்தொடங்கியது. பின்னர் கட்டடக்கலை, நகர அமைப்பு போன்ற துறைகளில் ஆர்வமேற்பட்டபோது சிலப்பதிகாரத்தில் விபரிக்கப்பட்டுள்ள பண்டைத்தமிழரின் கட்டடக்கலை, நகர அமைப்பு பற்றிய தகவல்களுக்காக, நடனக்கலை, மேடை அமைப்பு, இசைக்கருவிகள் பற்றிய தகவல்களுக்காகப் பிடிக்க ஆரம்பித்தது.  என்க்குப் பிடித்த பாவினம் அகவற்பா (ஆசிரியப்பா). அதற்கு முக்கிய காரணமும் சிலப்பதிகாரம் போன்ற பண்டைத்தமிழ் நூல்கள்தாம்.

தமிழ் நாவலாசிரியர்கள், திரைப்படக் கதாசிரியர்கள் பலருக்குச் சிலப்பதிகாரத்தின் தாக்கம் பெரிதுமுண்டு. பெரும்பாலும் முக்காதற் கதைகள் பலவற்றின் மூலவேராகச் சிலப்பதிகாரமே இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் அவற்றின் பாத்திரப்படைப்புகளூடு அறிந்துகொள்ளலாம்.

பிடித்த காப்பியமான சிலப்பதிகாரம் பற்றிய முனைவர் ஜி.ஞானசம்பந்தனின் 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' பற்றிய இந்த உரை அண்மையில் நான் கேட்டு இரசித்த சிறப்பானதோர் உரை. இதனை இங்கு பகிர்ந்துகொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சிலப்பதிகாரம் கூறும் பல்வேறு விடயங்களைப்பற்றி உள்ளத்தில் நன்கு பதியும் வகையில் இவ்வுரை அமைந்துள்ளது. இவ்வுரையினைக் கேட்கும் எவரும் இக்காப்பியம் பற்றிய தம் ஞானத்தை நிச்சயம் அதிகரித்துக்கொள்வார்கள். இவ்வுரையில் சிலப்பதிகாரம் பற்றிய இன்னுமொரு முக்கிய விடயத்தையும் முனைவர் சுட்டிக்காட்டுகின்றார். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியமென்பதால் புகழ்பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் முதன்  முதலில் ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அப்பெண்ணுக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்துப்படைத்த முதற் காப்பியம் என்பதை அவர் எடுத்துக்காட்டுகின்றார். 2000 வருடங்களுக்கு முன்னர் இவ்விதம் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட காப்பியம்  சிலப்பதிகாரம் என்பார் அவர்.

https://www.youtube.com/watch?v=fWucCR9LIF8

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.