அமரர் பி.எஸ்.பெருமாள்எழுபதுகளில், எண்பதுகளில் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்த அமரர் பி.எஸ்.பெருமாள் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஆரம்பத்தில் ஈழநாடு வாரமலர் மாணவர் மலரில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நான்  என் பதின்ம வயதுகளில் சிறுகதைகளை எழுதத்தொடங்கியிருந்தபோது அவற்றை வெளியிட்டார். எனது ஐந்து சிறுகதைகள்,  உருவக்கதை, நல்லூர் இராஜதானி நகர  அமைப்பு, பழமையின் சின்னங்களைப் பேணுதல் பற்றிய மூன்று கட்டுரைகள் மற்றும் புதுவருடக் கவிதையொன்று (1978) ஆகியவை அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்த சமயமே வெளிவந்தன. நான் அவரை  ஒருபோதுமே சந்தித்ததில்லை. இருந்தும் என் படைப்புகளை வெளியிட்டு  , என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட அவரை நான் ஒருபோதுமே மறக்க முடியாது.

அவர்  அண்மையில் அமரரானபோது வெளியான கட்டுரைகளில் அவர் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவிருந்த விடயம் பற்றியே பொதுவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவர் வாரமலர் ஆசிரியராகவிருந்தபோது பேனா என்னும் பெயரில் எழுதியதாக எழுத்தாளர் இளவாலை ஜெகதீசன் அறியத்தந்திருந்தார். இவ்விபரத்தைத் தற்செயலாகத்தான் அவரிடமிருந்து அறிந்தேன்.

அண்மையில் ஈழநாடு பத்திரிகைப்பிரதிகளை மேய்ந்துகொண்டிருந்தபொழுது சார்ள் டிக்கன்ஸின் 'ஒலிவர் ருவிஸ்ட்' நாவல் தமிழில் தொடராக வெளியாகிக்கொண்டிருந்ததை அவதானித்தேன். அதனை மொழிபெயர்த்தவர் பேனா என்றிருந்தது. பேனா என்னும் புனைபெயருக்குள் ஒளிந்திருந்தவர் யாராகவிருக்குமென்று மண்டையக் குடைந்துகொண்டிருந்தபோதுதான் ஜெகதீசன் அவர்கள் அண்மையில் நான் பதிவிட்டிருந்த ஈழநாடு பத்திரிகையில் வெளியான பாடகர் அமுதன் அண்ணாமலையைப்பற்றி எழுதிய ஷர்மினி  ஈ.கே.ராஜகோபால் என்பதை அறியத் தந்திருந்தார். அப்பொழுதுதான் அவரிடம் 'பேனா யாரென்பது தெரியுமா?' என்று கேட்டேன். அதற்கவர் 'பேனா எனும் புனை பெயரில்  பத்திரிகையாளர் அமரர் எஸ்.பெருமாள் எழுதியதாக என் நினைவு!' என்று பதிலிட்டிருந்தார். அது மட்டும் உண்மையாகவிருக்குமானால் ,அது அமரர் பெருமாளின் இன்னுமொரு முகத்தையும் வெளிப்படுத்துகின்றது. அவரது படைப்புகளைப் பற்றி ஆராயவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டேன்.

பெருமாளின் மொழிபெயர்ப்பில் ஒலிவர் ருவிஸ்ற்

பெருமாளின்  முதல் எழுத்து 'பெ'. அதனைப் பேச்சு வழக்கில் கூறுகையில் பேனா என்போம்.  அதனால் பேனா என்று அவர் தன் புனைபெயரை வைத்திருக்கின்றாரென்று  நினைக்கின்றேன்.

அமரர் பெருமாளின் முக்கிய இலக்கியப்பங்களிப்புகளாக நான் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. பத்திரிகை ஆசிரியராகவிருந்து இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து உருவாக்கியுள்ளார்.

2.மேனாட்டுப் புதினங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்.

இப்பதிவினை முகநூலில் இட்டபோது தங்கராஜா பிரபாகரன்  என்னும் நண்பர் "பின்னாட்களில் பெருமாள் ஐயா ' பேனா' என்ற பெயரில் உதயனிலும் எழுதியிருந்தார். குறிப்பாக ' ஜங்கிள் போய்' தொடரை எழுதியது நினைவிலுண்டு" என்று குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர் வடகோவை வரதராஜன் 'ஈழநாட்டில் என்னையும் அரவணைத்தார்' என்று கூறியிருந்தார். நண்பர் ஆறுமுகம் இரத்தினவேலன் 'எழுபதுகளினிறுதியில் தன்னுடைய இரு கதைகளையும் பிரசுரித்தார்' என்று கூறியிருந்தார். இவையெல்லாம் பெருமாள் அவர்களின் மேற்படி இலக்கியப் பங்களிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

இவை தவிர மேலும் பல மேனாட்டுப் புதினங்களை அவர் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றாரா? சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருக்கின்றாரா? போன்ற விடயங்களும் அவர் விடயத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.