கவிதை: புதிய கோணங்கியின் புலம்பலல்ல!

நீண்டிருக்கும் நள்ளிரவு!
நான் மனதொன்றிக்கிடந்தேன்.
நான் நினைவுக்குளத்தில் நீச்சலடித்தேன்.
நள்ளிரவு கவிந்த தனிமைப்பொழுதுகளில்
நான் எனையிழந்திருந்தேன்.
நான் உணரும் நான்!
பிரியம் மிக்க பொழுதுபோக்கு!
விரிவெளி அடிப்படைத் துணிக்கை உலகு!
நான் நம்மிருப்பு பற்றியெண்ணுவதும்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நட்சத்திரத் தோழருடன்
நான் சம்பாஷிக்கும் பொழுதுகள்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நான் வினாக்களுக்கு விடைகள் நாடுவதும்
நள்ளிரவுத் தனிமைகளில்தாம்.
நான் ஒரு கைதி! சிறைக்கைதி!
நான் ஒரு வெளிநேரச்சிறைக்கைதி!
புரிதலைத் தடுக்கும் சிறை! சுவர்
பாய்தல் சாத்தியமா?
சாத்தியங்களை மறுக்கும் பரிமாணச்
சிறை!
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.
நான் உணர்ந்துதான் இருக்கின்றேன்.

சுவரின் வெளி பற்றி
சுவரின் உள் சிந்திப்பதிலுமோர் இலயிப்பு!
ஆம்! எப்போதுமுண்டு எனக்கு.
பல்பரிமாணம் பற்றி,
காலவெளிச்சட்டங்கள்தம் சமகாலப்
பல்லிருப்பு பற்றி
நான் எண்ணியிருந்தேன்.
அயின்ஸ்டைன் தன் காலவெளி!
நான் எண்ணிக்கிடந்தேன்.
அண்மைச்சுடர் அருகில் செல்லல்
அதற்கும் நெடுநேரமுண்டு! தூரமுண்டு!
பரிமாணம் மீறிப்பறப்பதற்கு முடிவு செய்தேன்.
எண்ணப்பறவை சிறகடிக்கப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நான் எடுத்துரைப்பேன் நான் கண்டவை பற்றி இப்போது.
வாயுவுடல் துறந்தேன். குருதி
பாயும் உடல் துறந்தேன்.
வெறுமை அழுத்தம் தாங்குமுடல் பெற்றேன்.
வெறுமை துளைக்கும் மின்காந்தவலை
வேகத்தையும் மீறி விரையும் வேகம்பெற்றேன்.
பரிமாணச்சிறையுடைத்துப் பயணிக்குமாற்றலும் பெற்றேன்.
என்னிருப்பின் புரிதலற்ற வினாக்கள்தம் விடைகள்
புரிந்தகளிப்பில் காலவெளிப்பயணம் செய்தேன்.
பயமற்றுப் பயணித்தேன்.
பரிமாணங்கள் மீறிப்பல்லுயிர்கள் சூழ்
பிரபஞ்ச வெளிபற்றி
உண்மையறிந்தேன்.
எண்ணங்களைச் சில்லுகளிலடக்கி
அலையாகிப்பயணிக்கும்
இருப்புகள் இருப்பதை
பயணத்தில்  கண்டேன்.
எம்மிருப்பின் குறைகளை உணர்ந்தேன்.
என்னவரும் என்னைப்போல் பயணிப்பின்
எண்ணப்பறவைப் பயணம் புரியின்
உண்மைபுரிவார். புரியின்
ஏனிந்த மோதல்? ஏனிந்த மோதல்?
நம்மவர் கூர்ப்பில் நாளை நடப்பதை
நானிங்கு எடுத்துரைத்தேன்.
நாளை இது நடக்கையில்
நானொரு தீர்க்கதரிசி என்பீர்.
காலவெளிச்சட்டங்கள் பின்னிய மேடையில்
எதிர்வுகூறிய காலவெளிக்குடுகுடுப்பை என்பீர்.
நானொன்றுமக்குக் கூறுவேன்.
பரிமாணம் மீறி எண்ணப்பயணம்
என்னைப்போல் மேற்கொள்வீர்.
எப்போதும் முரண்களற்றவோருலகில்
இருப்பீர்.இன்பத்திலிருப்பீர்.
ஆதலினால் கூறுவேன். அடித்துக்கூறுவேன்.
என்னைப்போல் எண்ணப்பறவைப்பயணம் மேற்கோள்வீர்.
முரண்களற்றவோரிருப்பில்
தெளிவுடனிருப்பீர்.
காலவெளிக்குடுகுடுப்பை நான் கூறியவை
ஆருடமல்ல அறிவுரை.
தீர்க்கதரிசனமல்ல தெளிவுரை.
நானுமொரு புதிய கோணங்கியென்று
நீரொதுக்கி விடாதீர். இது
புதிய கோணங்கியின் புலம்பலல்ல.
நான் கூறுவதை நன்கு செவி மடுப்பீர்.
நான் அவ்வளவுதான் கூறுவேன்.
நல்ல காலம் தெரியுது.
நல்ல காலம் தெரியுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் தெரியுது.
நல்ல காலம் தெரியுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.