- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில் 'அருணகிரி' என்னும் பெயரை வடமொழியில் வைத்திருப்பவர் இலங்கைத்தமிழர்கள் வடமொழியில் அதிகம் எழுதுகின்றார் என்று கவலைப்பட்டிருக்கின்றார். அக்கவலையை நம்மூர் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுக்குக் கூறியிருக்கின்றார். அவர் என்ன காரணமொ தெரியவில்லை பதிவுகள் கிரிதரனை அவருக்கு அறிமுகப்படுத்தி என் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார். அருணகிரி எனக்கு எழுதி வடமொழி ஆதிக்கம் தமிழில் நிலவுவதையிட்டுக் கவலைப்பட்டிருந்தார். நான் பதிலுக்கு நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன் என்று குறிப்பிட்டுப் பதில் அனுப்பியிருந்தேன். தற்போது அவர் அதற்குப் பதில் எழுதியிருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"கனடா பதிவுகள்.காம் திரு கிரிதரன் அவர்கள் எனக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில் நான் செய்து இருக்கின்ற திருத்தங்கள்....

நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். -ஆதரவாளன் அல்லன்.
தவறேதுமில்லை ..........தவறு ஏதும் இல்லை.
என்பதென் கருத்து. -என்பது என் கருத்து
வளர்ந்திருக்கின்றது. - வளர்ந்து இருக்கின்றது.
மரபுமுண்டு.......மரபும் உண்டு..."

இவ்விதம் என் அவரது கடிதத்துக்கான பதிலில் நான் சேர்த்தெழுதியிருந்த சொற்களையெல்லாம் பிரித்துப் பிரித்து எழுதி இறுதியில் "தமிழில் இரண்டு, மூன்று, நான்கு சொற்களைச் சேர்த்து எழுதுவது தவறு." என்றும் கூறியிருக்கின்றார். இவருக்கு நான் கூறுவது இதனைத்தான். யார் உங்களுக்குக் கூறியது சொற்களைச் சேர்த்தெழுதுவது தவறென்று (இதனை அவர் 'தவறு + என்று' வாசிக்கவும். :-) ) நான் சில பந்திகளைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்:
'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை"ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மையால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது. உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற வாசகம். "
மேலுள்ள பந்தியில் சேர்த்தெழுதப்பட்ட சொற்கள் பல உள்ளன. அவை வருமாறு:

1. வாலாண்மையால்
2. தாளாண்மையால்
3. மூவாயிரம்
4. மண்ணுள்
5.எல்லைப்புறத்திலுள்ள
6.மொழியொன்று
7. இன்றளவும்
8. படிப்படியாகத்
9. வளமார்ந்த
10. தென்னாட்டில்
11. வாழ்வானாயினான்
12. நல்லுலகம்

இன்னுமொரு பந்தி தருகின்றேன்:

"சேர நாட்டின் தலை நகரம் வஞ்சி. இப்போது திருவஞ்சைக் களம் என்று வழங்கும் ஊரும் கொடுங்கோளூர் என்ற ஊரும் சுற்று வட்டாரங்களும் சேர்ந்த பெரிய நகரமாக விளங்கியது வஞ்சி. சேர அரசர்களின் அரசிருக்கை நகரமாகிய அங்கே அயல் நாட்டு வாணிகர்களும் வந்து மலை நாட்டு விளைபொருள்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லுவதற்கு ஏற்றபடி முசிறி என்ற பெரிய துறைமுகப் பட்டினம் அந் நாட்டில் இருந்தது. சேரர்களுடைய பெருமையை மட்டும் தனியே பாடுகிற சங்க காலத்து நூல் ஒன்று இருக்கிறது. அதற்குப் பதிற்றுப் பத்து என்று பெயர். அது பத்துச் சேர அரசர்களின் புகழைப் பத்துப் பத்துப்பாடல்களால் வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி, சேர மன்னர் வழங்கிய பரிசைப் பெற்றார். சேர மன்னர்களிற் சிலர் தமிழ்ப் புலமையிற் சிறந்தவர்களாக இலங்கியதுண்டு. அவர்கள் பாடிய தண்டமிழ்ப் பாடல்கள் சிலவற்றை இன்றும் நாம் படித்து இன்புறலாம்."

1. அரசிருக்கை
2.சேரர்களுடைய
3.வெளியிடுகிறது
4.ஒவ்வொரு
5.இலங்கியதுண்டு
6. இன்புறலாம்
7. சிலவற்றை

அருணகிரி சங்கரன்கோவிலின் கருத்துப்படி மேற்படி பந்திகளிலுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேர்ந்தெழுதப்பட்ட சொற்களெல்லாம் தவறு.

இவ்விதமாக என்னால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பலரின் எழுத்துகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.. நான் இவருக்குக்கூற விரும்புவது என்னவென்றால் .. இவ்விதமாகச் சேர்த்தெழுதும் தமிழ்ச்சொற்களைப் புரிந்துகொள்வது கடினமென்றால் நீங்கள் நிச்சயம் அதிகமாக தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்களை, ஆக்கங்களை வாசிக்க வேண்டும். அப்படி வாசித்தால் உங்களுக்கு மட்டுமல்ல , இளைய தலைமுறைக்கும் தமிழ் இலகுவாகப்புரியும்.

அருணகிரி சங்கரன்கோவில்மேலுள்ள பந்திகளில் முதலாவதை எழுதியிருப்பவர் பேராசிரியர் 'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை. இரண்டாவதை எழுதியிருப்பவர் எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான அமரர் கி.வா.ஜகநாதன். உங்கள் கருத்துப்படி நீங்கள் இவர்கள் இருவரின் தமிழையும் தவறென்று கூறுகின்றீர்கள். முதலில் தமிழகத்துத் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகளை அதிகம் வாசியுங்கள். தமிழ் எவ்வாறெல்லாம் (எவ்வாறு + எல்லாம் :-) ) எழுதப்படலாம் என்று புரிந்து கொள்ளுங்கள். இவற்றைப்புரிந்து கொள்ளாதவர்களுக்காக இவர்கள் எல்லாரும் எழுதவில்லை.

மிக எளிமையாகச் சொற்களைப் பிரித்து எழுதினால்தான் 'அடுத்து வருகின்ற இளைய தலைமுறையினர் தமிழை எளிதாகப் படித்துப் புரிந்து கொள்வார்கள்' என்று கூறுகின்றீர்கள். நாங்களெல்லாரும் எங்களுக்கு முன்னர் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் எழுதிய புலவர்களின் தமிழையெல்லாம் முயற்சி செய்து புரிந்துகொள்கின்றோம். அதுபோல் ஆர்வமுள்ள வருங்கால இளையதலைமுறையும் புரிந்துகொள்ளட்டும். புரிந்துகொள்வார்கள். புரிந்துகொள்ளமுடியாதவர்கள் புரிந்துகொள்ள விரும்பினால் தமிழை முறையாகக் கற்று, அதிகமாக வாசித்துப் புரிந்துகொள்ளத் தம்மைத் தயார் செய்யட்டும். அவர்களைப்போன்றவர்களுக்கு நீங்கள் தமிழ்ச் சொற்களைப்பற்றிய விளக்கப்பாடமொன்றினைக் கற்பிக்கலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.