வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனநாயகக் கட்சியினரின் உப ஜனாதிபதி வேட்பாளராக இந்திய, ஜமேய்க்க வம்சாவழியில் வந்த அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (kamala Harris) தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவரது முழுப்பெயர் கமலாதேவி ஹாரிஸ்.

அரசியலுக்கு அப்பால், பெண்ணாக, சிறுபான்மையினச் சமூகத்திலொருவராக அவரை நோக்குகின்றேன். அவ்வகையில் அமெரிக்க உப ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் முதலாவது இந்திய, ஜமேய்க்க வம்சாவழி அமெரிக்கராகக் கமலா ஹாரிஸ் இருக்கின்றார். அவ்வகையில் அவரது தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

எவ்விதம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்விதமே உபஜனாதிபதிப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் தெரிவும் முக்கியத்துவம் மிக்கது.

எவ்விதம் அமெரிக்கர்கள் பராக் ஒபாமா மேல் வீசப்பட்ட அவதூறுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அவரைப் பதவியில் அமர்த்தினார்களோ, அவ்விதமே இம்முறையும் கமலா ஹாரிஸைப் பதவியில் அமர்த்துவார்கள் என்று நம்புவோம்.

பராக் ஒபாமா ஜனாதிபதியாகவிருந்தபோது உப ஜனாதிபாதியாக இருந்தவர் ஜோ பைடென். இப்போது ஜோ பைடென் ஜனாதிபதி வேட்பாளராகப்போட்டியிடுகையில் உப ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ். இரு வரலாற்றுச் சாதனைகளுடனும் ஜோ பைடென் பெயர் பின்னிப்பிணைந்துள்ளது.

இன்னுமொரு விடயம். கமலா ஹாரிஸின் தலைமைப்பணியாளர் (Chief of Staff)) இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் & சோபனா ரவீந்திரனின் மகளான ரோகிணி கொசோகுளு (Rohini Kosoglu) என்பதும் குறிப்பிடத்தக்கது: https://economynext.com/kamala-harris-vp-nomination-historic-sri-lankan-american-chief-of-staff-rohini-kosoglu-72973/?fbclid=IwAR25CKlcCltJfcinDfcvt4q5smyhQgCgfieYvWWB7XDPE61AAt7aHaoqwqc


நண்பர் எழுத்தாளர் கருணாகரன் சிவராசா தனது முகநூற் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

" இப்போது ராஜபக்ஸ தரப்பினருக்குக் கிடைத்திருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பது அந்தத் தரப்பு எதை நினைக்கிறதோ அதைச் செய்வதற்கு வாய்ப்பானது. ராஜபக்ஸ சகோதரர்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஏராளம். அதை அவர்கள் மெல்ல மெல்லச் செய்து தமக்கிசைவானதொரு ஆட்சிமுறையை உருவாக்கப்போகிறார்கள். அரசியல் யாப்பைக் கூட தமக்கிசைவாக மாற்றியமைக்கும் நிலை உண்டு. அவர்கள் நல்லதை நினைத்தால் நன்மைகள் ஆயிரம். கெட்டதாக எதையாவது எண்ணினால் தீமைகள் கோடி. ஆனால், அவர்கள் எதை எண்ணி நடக்கப்போகிறார்கள் என்பது கேள்வி"

இது பற்றிய எனது கருத்து வருமாறு:

"ஜே.ஆர் போருக்கு முற்பட்ட காலகட்டத்தைச்சேர்ந்தவர். போர் தொடங்கக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். ஆனால் இன்றுள்ள ராஜபக்சாக்கள் போருக்குப் பிந்தியவர்கள். ஜே.ஆர் அரசில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள். இவர்களது கவனமெல்லாம் வர்த்தகத்தின் மூலம் உழைப்பதில்தானுள்ளது. உலகமெங்கும் தம் சொத்துகளை விஸ்தரிப்பதற்கான சூழல்தான் இவர்களுக்குத் தேவை. நிச்சயம் இவர்கள் போரைத் தொடங்க மாட்டார்கள். ஆனால் தம் குடும்ப நலன்களுக்கு அபாயமேற்படுகின்றதென்றால் இராணுவத்தைப் பாவித்துத் தொடர்ந்தும் நாட்டைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயற்சி செய்வார்கள் .

இவர்கள் நாட்டைச் சுரண்டுவதற்கும், சுரண்டியதை வைத்து மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்கும் நாட்டில் போர் இருக்கக் கூடாது. மேலும் நடந்து முடிந்த தேர்தல் அவர்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கும். மிகவும் பலமாக வடகிழக்கில் கால் பதித்துள்ளார்கள். இவர்கள் மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டை அமைதியாக வைத்திருந்து , அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தினார்களென்றால் அடுத்த தேர்தலில் இன்னும் அதிகமாகத் தமிழ்ப்பகுதிகளில் கால் பதிப்பார்கள். இதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அபிவிருத்தி+தேசியம் என்னும் கோட்பாட்டில் செயற்பட்டால் அதனைத் தவிர்க்கலாம்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை மையமாகவைத்தே இதுவரை வாக்களித்து வந்தார்கள்.ஆனால் இம்முறை அவ்விதம் வாக்களிக்கவில்லை. இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ்ப்பகுதிகளில் கூடத் தென்னிலங்கைக் கட்சிகள் பிரதான கட்சிகளாக உருவாகும் நிலையேற்படலாம்.

அவ்விதமானதொரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும். அதற்குள்ள ஒரே வழி.. தற்போதுள்ள சூழலில்.. இந்திய,இலங்கை ஒப்பந்தமே. அதனை முறையாகப் பாவித்தால் பயன்  கிடைக்கும் சாத்தியமுண்டு. அந்தவொரு ஒப்பந்தமே தற்போது இந்தியாவைவும் இன்னும் தமிழர் பிரச்சினையுள் வைத்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் தமிழ்ப்பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் பிரதான கட்சிகளாக உருவெடுத்தால் இந்தியாவே அவ்வொப்பந்தத்திலிருந்து விலகலாம். புதிய சூழலில் பழைய ஒப்பந்தத்தின் தேவை என்ன என்று கேட்கலாம். இச்சூழலில் உறுதியான தமிழ்க்கட்சிகளின் கூட்டணி முக்கியமானது. ஆனால் தற்போதுள்ள சூழலில் அது எவ்வகையில் நடைமுறைச்சாத்தியமானது என்பதைக் காலமே எடுத்துக் காட்டும்.


திரைப்படப்பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி மறைவு!

திரைப்படப்பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி

திரைப்படப்பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி அவர்கள் நூற்றி இரண்டாவது வயதில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். அவரே புகழ்பெற்ற, எம்.எஸ்.ராஜேஸ்வரி குரலிலொலித்த 'மண்ணுக்கு மரம் பாரமா?" பாடலை எழுதியவர். அவரது நினைவாக அப்பாடலைப் பகிர்ந்துகொள்வதுடன் , என் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் இடம் பெறும் இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன்.

https://www.youtube.com/watch?v=ErBbALbyPNU

பாடல் முழுமையாக:

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே

மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா
அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா


கேள்வி கேளுங்கள் ! எப்போதும் கேள்வி கேளுங்கள்!

"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை!
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!"
- கவிஞர் வாலி -

 "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை!"

அண்மையில் நடந்த இலங்கைத் தேர்தலையொட்டிய சம்பவங்களைப் பார்க்கையில் ஒன்று மட்டும் புரிந்தது.  நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் (படித்தவர்கள் உட்பட) ஒருவர் ஒன்றைக் கூறினால் அதனை எவ்விதக்  கேள்விகளுமில்லாமல் ஏற்றுக்கொண்டு , உணர்ச்சிவெறியில் துள்ளியாடத்தொடங்கி விடுகின்றார்கள். அவர்களுக்காக இப்பாடல். இனியாவது ஒரு விடயத்தைக் கேட்டதும் முதலில் அது பற்றிய கேள்விகளை எழுப்புங்கள்? தர்க்கரீதியாக எழுப்புங்கள்? இதனைப்பழக்கமாக்கிக் கொண்டீர்களென்றால் முட்டாள்தனமான முடிவுகளையெடுத்துப் பொன்னான நேரத்தை வீணாக்க மாட்டீர்கள்? உணர்ச்சி வசப்பட முன்னர் உள்ளத்தில் கேள்வி கேளுங்கள். "பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே". பகுத்தறியுங்கள். எப்பொழுதும் பகுத்தறியுங்கள்.

https://www.youtube.com/watch?v=2wX5E6qlqdI&lc=z13bfhfqaxevs5oti23befyqhtmkibmaf04